பகுதி 5 – திருச்சதகம் 4
‘சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.
‘சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.
திருச்சதகத்தின் நான்காவது பிரிவு 'ஆத்தும சுத்தி'.
அதாவது, ஆன்மாவின் தூய்மைக்கு உதவும் இறை வழிபாட்டைப்பற்றி விளக்குவது.
32
பாடலின்பம்
ஆடுகின்றிலை, கூத்துடையான் கழற்கு
அன்பு இலை, என்பு உருகிப்
பாடுகின்றிலை, பதைப்பதும் செய்கிலை,
பணிகிலை, பாத மலர்
சூடுகின்றிலை, சூட்டுகின்றதும் இலை,
துணை இலி பிண நெஞ்சே,
தேடுகின்றிலை, தெருவுதோறு அலறிலை,
செய்வது ஒன்று அறியேனே!
*
புகுவது ஆவதும், போதரவு இல்லதும்,
பொன்நகர் புகப் போதற்(கு)
உகுவது ஆவதும், எந்தை, எம் பிரான் என்னை
ஆண்டவன் கழற்கு அன்பு
நெகுவது ஆவதும் நித்தலும் அமுதொடு
தேனொடு பால் கட்டி
மிகுவது ஆவதும் இன்று எனின், மற்று இதற்கு
என்செய்கேன் வினையேனே?
பொருளின்பம்
எனக்குத் துணையாக நிற்காமல், உயிரற்ற உடல்போல வீணே இருக்கும் என் நெஞ்சமே,
சிவனை எண்ணி நீ ஆடுவதில்லை, கூத்தாடும் அந்தப் பெருமானின் திருவடிகள்மீது அன்பு வைப்பதில்லை,
எலும்புகளெல்லாம் உருகும்படி அவனை எண்ணி நீ பாடுவதில்லை, மனம் பதைப்பதில்லை, அவனை வணங்கவில்லை, அவனது திருவடித் தாமரைகளைத் தலைமீது சூடிக்கொள்ளவில்லை, அவனது திருவடித் தாமரைகளுக்கு நல்ல மலர்களைத் தூவி அர்ச்சனையும் செய்யவில்லை,
நீ அவனைத் தேடித் திரியவில்லை, வீதி வீதியாகச் சென்று அவனை அழைத்து அலறவில்லை,
இப்படி நீ நல்வழியில் எதையும் செய்யாதபோது, நான் என்ன செய்வது? அறியாமல் தவிக்கிறேன்!
எம்பெருமானின் சிவபுரத்தில் யாரும் நுழைவது அரிது. அப்படி நுழைந்துவிட்டால், அவர்கள் திரும்பப் பிறவி எடுக்கமாட்டார்கள்,
அத்தகைய பொன்நகரமான சிவபுரத்தை எண்ணி நான் உள்ளம் நெகிழவேண்டும், என் தந்தை, என் தலைவன், என்னை ஆண்டவன் திருவடிகள்மீது அன்பு வைத்து உருகவேண்டும், அந்த இன்பம் தினமும் அமுதத்தையும் தேனையும் பால் கட்டியையும் உண்பதைவிடச் சிறந்தது.
தீவினைகளைச் செய்த எனக்கு அந்த இன்பம் கிடைக்கவில்லை என்றால், நான் என்ன செய்வேன்? எப்படி அவனைச் சேர்வேன்?
சொல்லின்பம்
கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர அணி, இங்கே திருவடிகளைக் குறிக்கிறது
என்பு: எலும்பு
இலை: இல்லை
போதரவு: திரும்ப வருதல்/ சென்று திரும்புதல்
உகுதல்: நெகிழ்தல்
எந்தை: என் தந்தை
எம் பிரான்: எங்கள் தலைவன்
நெகுதல்: நெகிழ்தல்
நித்தல்: எந்நேரமும்