முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 5 – திருச்சதகம் 8

சதகம் என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:


சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.

திருச்சதகத்தின் எட்டாம் பிரிவு, 'ஆனந்தத்து அழுந்தல்'.

இறைவனாகிய பேரின்பத்தில் மூழ்கித் திளைக்கும் ஆனந்தத்தை வேண்டிப் பாடிய பாடல்கள் இவை.

36

பாடலின்பம்

புணர்ப்பது ஒக்க எந்தை என்னை

ஆண்டு பூண நோக்கினாய்,

புணர்ப்பது அன்று இது என்றபோது

நின்னொடு என்னொடு என் இதாம்?

புணர்ப்பது ஆக, அன்று இது ஆக

அன்பு நின் கழற்கணே

புணர்ப்பு அது ஆக அம் கணாள

புங்கம் ஆன போகமே!

*

ஈசனே, நீ அல்லது இல்லை

இங்கும் அங்கும் என்பதும்

பேசினேன் ஓர் பேதம் இன்மை

பேதையேன், என் எம்பிரான்

நீசனேனை ஆண்டுகொண்ட

நின்மலா, ஓர் நின் அலால்

தேசனே, ஓர் தேவர் உண்மை

சிந்தியாது சிந்தையே!

பொருளின்பம்

அழகிய கண்களையுடைய சிவபெருமானே, என் தந்தையே,

நீ என்னை உன்னுடன் சேர்த்துக்கொள்வதுபோல் அருள் பார்வை பார்த்தாய்,

அதன்பிறகு, உன் திருவடிகளைச் சேரத்தக்க தகுதி எனக்கு இல்லை என்று தீர்மானித்துவிட்டாய். உன் எண்ணம் அதுவானால் நான் என்ன செய்ய இயலும்?

நீ என்னை உன்னுடன் சேர்த்துக்கொண்டாலும் சரி, சேர்த்துக்கொள்ளாவிட்டாலும் சரி, உன்னுடைய திருவடிகளின் மீது நான் வைத்திருக்கும் அன்பு மாறாது, அதுவே என்னை உன்னிடம் கொண்டுவந்து சேர்க்கட்டும், உயர்வான சிவானந்தபோகம் எனக்குக் கிடைக்கட்டும்!

இறைவா,

உன்னையன்றி இன்னோர் உண்மை இந்த உலகத்திலும் இல்லை, அந்த உலகத்திலும் இல்லை, எந்த உலகத்திலும் இல்லை,

அறிவில்லாதவனான நான் உன்னைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்கிறேன்,

என் தலைவா, என்னைப் போன்ற ஒரு நீசனையும் ஆட்கொண்டவனே, குற்றமற்றவனே, ஒளிமயமானவனே,

உன்னைத்தவிர இன்னொரு தெய்வத்தை என் உள்ளம் எண்ணாது.

சொல்லின்பம்

புணர்த்தல்: இணைத்தல்

எந்தை: என் தந்தை

பூண நோக்கினாய்: அருள் புரியும்படி பார்த்தாய்

கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர அணிகலன், இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிப்பிடுகிறது

அம்: அழகிய

கணாள: கண்களை உடையவனே

புங்கம்: உயர்வு

போகம்: சிவானந்தப் பேரின்பம்

பேதை: ஒன்றுமறியாதவன்

நீசன்: கீழானவன்

நின்மலன்: குற்றமற்றவன்

தேசன்: ஒளி நிறைந்தவன்

முழு கட்டுரையைப் படிக்க →