பகுதி 18 – குயில் பத்து - 1
அவரது ஒளிமயமான மணிமுடியைப்பற்றிச் சொன்னால், அவை சொற்களுக்குள் நிற்காத பழைமையும் சிறப்பும் கொண்டவை,
ஒரு பெண் சிவபெருமானைத் தன் தலைவனாக எண்ணுகிறாள். அவரைக் காண இயலவில்லையே என்ற ஏக்கத்தால் குயிலிடம் பேசுகிறாள். ‘அவர் இங்கே வர வேண்டும். அதற்காக நீ கூவு’ என்கிறாள்.
இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
119
பாடலின்பம்
கீதம் இனிய குயிலே, கேட்டியேல், எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில், பாதாளம் ஏழினுக்குஅப்பால்,
சோதி மணிமுடி சொல்லில், சொல்இறந்து நின்ற தொன்மை,
ஆதிகுணம் ஒன்றும் இல்லான், அந்தமிலான் வரக் கூவுவாய்.
*
ஏர் தரும் ஏழ்உலகு ஏத்த எவ்வுருவும் தன்உருவாய்
ஆர்கலிசூழ் தென்இலங்கை அழகுஅமர் வண்டோதரிக்குப்
பேரருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானைச்
சீரிய வாயால் குயிலே, தென்பாண்டி நாடனைக் கூவாய்.
பொருளின்பம்
இனிய கீதம்போல் பாடுகிற குயிலே, கேள்,
எங்கள் தலைவனாகிய சிவபெருமானின் இரண்டு திருவடிகளைப்பற்றிக் கேட்டால், அவை ஏழு பாதாளங்களுக்கும் அப்பால் செல்லக்கூடியவை,
அவரது ஒளிமயமான மணிமுடியைப்பற்றிச் சொன்னால், அவை சொற்களுக்குள் நிற்காத பழைமையும் சிறப்பும் கொண்டவை,
தொடக்கமும் முடிவும் இல்லாத அந்தப் பெருமான் இங்கே வருவதற்காக நீ கூவு.
*
குயிலே,
அழகிய ஏழு உலகங்களும் சிவபெருமானைப் போற்றுகின்றன, எல்லா உருவங்களையும் தன் உருவமாகக் கொண்டு அவன் எங்கும் நிறைந்திருக்கிறான்,
சத்தமிடும் கடலால் சூழப்பட்ட தென்னிலங்கையில் அழகுடன் விளங்கிய வண்டோதரிக்குப் பேரருள் இன்பத்தை அளித்தவன், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவன், தென்பாண்டி நாட்டின் தலைவன், அவன் இங்கே வரவேண்டும் என்று உன்னுடைய சிறந்த வாயால் கூவு.
சொல்லின்பம்
கேட்டியேல்: கேள்
வினவில்: கேட்டால்
சோதி: ஒளி
சொல்இறந்து: சொல்லைக் கடந்து
தொன்மை: பழைமை
ஆதி: தொடக்கம்
அந்தமிலான்: முடிவில்லாதவன்
ஏர்: அழகு
ஏத்த: போற்ற
ஆர்கலி: சத்தமிடும் கடல்
மேய: விளங்கும்
பிரான்: தலைவன்
சீரிய: சிறந்த