பகுதி 12 – திருச்சாழல் - 4
தனக்கு இறுதி என்று ஏதும் இல்லாமல் என்றைக்கும் நிலைத்திருப்பவன் சிவபெருமான், அவனுடைய திருவடிகளை நான் சென்றடைந்தேன்
‘சாழல்’ என்பது பழந்தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. இதுவும் மகளிர் விளையாடுவதுதான். இந்த விளையாட்டில் ஒருத்தி கேள்வி கேட்பாள், இன்னொருத்தி அதற்குப் பதில் சொல்வாள். இந்த அமைப்பில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் இந்தப் பாடல்களைப் பாடியுள்ளார்.
இதில் இருபது பாடல்கள் உள்ளன. தில்லையில் அருளப்பட்டது.
82
பாடலின்பம்
தான்அந்தம் இல்லான்தனை அடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான் காணேடீ!
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள்
வான்உந்து தேவர்கட்குஓர் வான்பொருள் காண் சாழலோ.
*
கான்ஆர் புலித்தோல் உடை, தலை ஊண், காடு பதி,
ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆரேடி?
ஆனாலும் கேளாய், அயனும் திருமாலும்
வான்நாடர் கோவும் வழிஅடியார் சாழலோ.
பொருளின்பம்
ஒருத்தி: தனக்கு இறுதி என்று ஏதும் இல்லாமல் என்றைக்கும் நிலைத்திருப்பவன் சிவபெருமான், அவனுடைய திருவடிகளை நான் சென்றடைந்தேன், நாய் போன்ற என்னையும் அவன் ஆதரித்தான், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கவைத்தான், இதை நீ காண்பாய்!
இன்னொருத்தி: நம்மை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கவைத்த அந்தச் சிவபெருமானின் திருவடிகள், வானில் வாழும் தேவர்களும் மதித்துப் போற்றுகிற மேன்மையைக் கொண்டவை, அதை நீ அறிவாய்!
ஒருத்தி: காட்டில் வாழும் புலியின் தோலை உடுத்தியிருக்கிறான், மண்டையோட்டை உண்ணும் பாத்திரமாகக் கொண்டிருக்கிறான், சுடுகாட்டில் வாழ்கிறான், அத்தகைய சிவபெருமானுக்கு யாராவது ஆட்படுவார்களா?
இன்னொருத்தி: நீ சொல்வதெல்லாம் உண்மைதான், ஆனால், பிரம்மனும் திருமாலும் வானவர் தலைவனான இந்திரனும் அந்தச் சிவபெருமானை வணங்கி அடியவர்களாக நிற்கிறார்கள், அதை நீ அறிவாய்.
சொல்லின்பம்
அந்தம்: நிறைவு
அழுத்துவித்தான்: மூழ்கவைத்தான்
வான்உந்து: விண்ணில் வாழ்கிற
வான்: உயர்ந்த
கான்ஆர்: காட்டில் வாழ்கிற
ஊண்: உணவு
பதி: வாழும் இடம்
அயன்: பிரம்மா
வான்நாடர்: வானத்தை நாடாகக் கொண்டவர்கள்/ தேவர்கள்
கோ: தலைவன்
அடியார்: தொண்டர்