முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 12 – திருச்சாழல் - 5

மலை அரசனின் பெண்ணான தங்கப்பாவை, ஒளி வீசும் நெற்றியைக் கொண்டவள், செல்வம்போன்ற பெண்ணான

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

‘சாழல்’ என்பது பழந்தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. இதுவும் மகளிர் விளையாடுவதுதான். இந்த விளையாட்டில் ஒருத்தி கேள்வி கேட்பாள், இன்னொருத்தி அதற்குப் பதில் சொல்வாள். இந்த அமைப்பில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் இந்தப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இதில் இருபது பாடல்கள் உள்ளன. தில்லையில் அருளப்பட்டது.

83

பாடலின்பம்

மலைஅரையன் பொற்பாவை, வாள்நுதலாள், பெண் திருவை

உலகுஅறியத் தீவேட்டான் என்னும்அது என்னேடீ!

உலகுஅறியத் தீவேளாது ஒழிந்தனனேல் உலகுஅனைத்தும்

கலைநவின்ற பொருள்கள்எல்லாம் கலங்கிடும் காண் சாழலோ.

*

தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச் சிற்றம்பலவன்

தான்புக்கு நட்டம் பயிலும்அது என்னேடீ.

தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்

ஊன்புக்க வேல்காளிக்கு ஊட்டுஆம் காண் சாழலோ.

பொருளின்பம்

ஒருத்தி: மலை அரசனின் பெண்ணான தங்கப்பாவை, ஒளி வீசும் நெற்றியைக் கொண்டவள், செல்வம்போன்ற பெண்ணான உமையம்மையை, தீயை வலம் வந்து உலகம் அறியத் திருமணம் செய்துகொண்டான் சிவபெருமான், அது ஏன்?

இன்னொருத்தி: அப்படி அவன் உலகு அறியும்படி தீயை வலம் வந்து அவளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால், அனைத்து உலகங்களிலும் உள்ள நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் சிறந்த பொருள்கள் அனைத்தும் தங்கள் நிலையில் நிற்காமல் தடுமாறிவிடும், அதனால்தான்.

ஒருத்தி: மலர்களில் இருந்து தேன் பாய்கிற, குளிர்ச்சியான வயல்களைக் கொண்ட தில்லை நகரத்தின் சிற்றம்பலத்தில் சிவபெருமான் புகுந்து திருநடனம் புரிகிறான். இது ஏன்?

இன்னொருத்தி: அப்படி அவன் சிற்றம்பலத்தில் நடனம் புரியவில்லை என்றால், இந்த உலகமெல்லாம் மாமிசம் தங்கியுள்ள சூலாயுதத்தை ஏந்திய காளிக்கு உணவாகிவிடும், அதனால்தான்.

சொல்லின்பம்

அரையன்: அரசன்

வாள்: ஒளி

நுதல்: நெற்றி

திரு: செல்வம்

தீவேட்டல்: தீயை வலம்வந்து திருமணம் செய்தல்

கலை: நூல்

நவின்ற: சொன்ன

புக்க: புகுந்த

தண்: குளிர்ச்சி

பணை: வயல்

நட்டம்: நடனம்

பயிலும்: செய்தல்

தரணி: உலகம்

ஊன்: மாமிசம்

ஊட்டு: உணவு

ஆம்: ஆகும்

முழு கட்டுரையைப் படிக்க →