பகுதி 13 – திருப்பூவல்லி - 1
இணையாக பக்தர் மனத்தில் தங்கும் தன் திருவடிகளைச் சிவபெருமான் என் தலைமேல் வைத்ததும், அதுவரை எனக்குத் துணையாக இருந்த சுற்றங்கள் அனைத்தையும் நீங்கி, அவனே எல்லாம் என்கிற நிலையை அடைந்தேன்.
திரு + பூ + அல்லி என்பது ‘திருப்பூவல்லி’. இதுவும் பண்டைய மகளிரின் விளையாட்டுதான். அல்லி மலரைக் கொண்டு ஆடிப்பாடுவது. அதில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் அமைத்திருக்கிறார்.
தில்லையில் அருளப்பட்ட இந்தப் பகுதியில் இருபது பாடல்கள் உள்ளன.
86
பாடலின்பம்
இணைஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்துஒழிந்தேன்,
அணைஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர் பாடிப் பூவல்லி கொய்யாமோ.
*
எந்தை, எம்தாய், சுற்றம், மற்றும்எல்லாம் என்னுடைய
பந்தம் அறுத்து என்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருதில் ஆனந்தத் தேன்இருந்த
பொந்தைப் பரவி நாம் பூவல்லி கொய்யாமோ.
பொருளின்பம்
இணையாக பக்தர் மனத்தில் தங்கும் தன் திருவடிகளைச் சிவபெருமான் என் தலைமேல் வைத்ததும், அதுவரை எனக்குத் துணையாக இருந்த சுற்றங்கள் அனைத்தையும் நீங்கி, அவனே எல்லாம் என்கிற நிலையை அடைந்தேன்.
அணையில் நீர் நிரம்பி நிற்கும் வளம் நிறைந்த தில்லையின் அம்பலத்தில் திருநடனம் செய்கிற சிவபெருமான், பிறவிக்கடலை நாம் கடக்கப் புணை ஆவான், அவனுடைய சிறப்பை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.
*
தந்தை, தாய், சுற்றம் என்று எனக்குப் பல பந்தங்கள் இருந்தன. பாண்டிப்பிரானான சிவபெருமான் அவற்றை அறுத்து என்னை ஆண்டுகொண்டான்.
திருவிடைமருதூரில் ஆனந்தத் தேன் தங்கும் பொந்தைப்போல் திகழும் அந்தச் சிவபெருமானை நாம் பாடுவோ, அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.
சொல்லின்பம்
இணைஆர்: இணையாகத் தங்குகிற
அணைஆர்: அணையில் தங்குகிற
புனல்: நீர்
புணை: மிதவை
சீர்: சிறப்பு
கொய்யாமோ: கொய்வோமா/ கொய்வோம்
எந்தை: என் தந்தை
பந்தம்: தொடர்பு