பகுதி 16 – திருப்பொன்னூசல் - 6
உமையம்மையைத் தன் உடலின் ஒரு பாகத்தில் கொண்டவன், உத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கிறவன்,
ஊசல் என்றால், ஊஞ்சல். பெண்கள் ஊஞ்சலில் ஆடியபடி பாடக்கூடிய பாடல்கள் இவை. அவற்றில் சிவபெருமானின் பெருமையைப் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர்.
இந்தப் பகுதியில் ஒன்பது பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
110
பாடலின்பம்
மாதுஆடு பாகத்தன், உத்தரகோசமங்கைத்
தாதுஆடு கொன்றைச் சடையான், அரியாருள்
கோதுஆட்டி நாயேனை ஆட்கொண்டுஎன் தொல்பிறவித்
தீதுஓடாவண்ணம் திகழப் பிறப்புஅறுப்பான்
காதுஆடு குண்டலங்கள் பாடிக் கசிந்துஅன்பால்
போதுஆடு பூண்முலையீர், பொன்னூசல் ஆடாமோ.
பொருளின்பம்
மலர் போன்ற, ஆபரணங்களை அணிந்த மார்பகங்களைக் கொண்ட பெண்களே,
உமையம்மையைத் தன் உடலின் ஒரு பாகத்தில் கொண்டவன், உத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கிறவன், மகரந்தம் சிந்துகிற கொன்றை மலர்களைச் சூடிய சடையைக் கொண்டவன் சிவபெருமான், நாய்போன்ற என்னை அடியவர்கள் மத்தியில் வைத்தான், என்னை ஆட்கொண்டான், என் குற்றங்களைக் களைந்தான், என்னுடைய பழைய பிறவித் தீமைகள் தொடராதபடி என்னுடைய பிறப்பைத் துண்டித்தான், அவனுடைய காதுகளில் ஆடுகிற குண்டலங்களைப் பாடி உள்ளம் நெகிழ நாம் பொன்னூசல் ஆடுவோம்.
சொல்லின்பம்
மாது: பெண்/ இங்கே உமையம்மையைக் குறிக்கிறது
தாது: மகரந்தம்
கோதுஆட்டி: குறைகளை நீக்கி
தொல்: பழைய
ஓடாவண்ணம்: தொடராதபடி
கசிந்து: நெகிழ்ந்து
போது: மலர்
பூண்: ஆபரணம்