பகுதி 16 – திருப்பொன்னூசல் - 8
அழகிய கயிலைமலையிலிருந்து பூமிக்கு வந்தவன், பாற்கடலைக் கடையும்போது கிடைத்த நஞ்சை அமுதமாக உண்டு நம்மைக் காத்தவன்,
ஊசல் என்றால், ஊஞ்சல். பெண்கள் ஊஞ்சலில் ஆடியபடி பாடக்கூடிய பாடல்கள் இவை. அவற்றில் சிவபெருமானின் பெருமையைப் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர்.
இந்தப் பகுதியில் ஒன்பது பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
112
பாடலின்பம்
கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுஉண்டு தாழ்கடலின்மீது எழுந்து
ஞாலம் மிகப் பரிமேல்கொண்டு நமைஆண்டான்
சீலம் திகழும் திரு உத்தரகோசமங்கை
மாலுக்குஅரியானை வாய்ஆர நாம் பாடிப்
பூலித்து அகம்குழைந்து பொன்னூசல் ஆடாமோ.
பொருளின்பம்
அழகிய கயிலைமலையிலிருந்து பூமிக்கு வந்தவன், பாற்கடலைக் கடையும்போது கிடைத்த நஞ்சை அமுதமாக உண்டு நம்மைக் காத்தவன், இந்த உலகம் உய்ய வேண்டும் என்பதற்காகக் குதிரையின் மீது ஏறிவந்து நம்மை ஆண்டவன் சிவபெருமான், சிறப்பு மிகுந்த திரு உத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருப்பவன், திருமாலும் காண இயலாத திருவடிகளைக் கொண்டவன், அவனுடைய புகழை வாயாரப் பாடுவோம், உடல் சிலிர்க்க, உள்ளம் குழைந்து பொன்னூசல் ஆடுவோம்.
சொல்லின்பம்
கோல: அழகு
வரை: மலை
குடுமி: உச்சி
குவலயம்: பூமி
சால: நிறைய
ஞாலம்: உலகம்
பரி: குதிரை
சீலம்: சிறப்பு
அரியான்: அரியவன்
பூலித்து: சிலிர்த்து
அகம்: உள்ளம்