முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 8 – திருவம்மானை - 4

அம்மானை என்பது சிறுமிகள் விளையாடும் ஒரு விளையாட்டு. அப்படி அம்மானை விளையாடும் சிறுமிகள் இறைவனை எண்ணிப்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:


அம்மானை என்பது சிறுமிகள் விளையாடும் ஒரு விளையாட்டு. அப்படி அம்மானை விளையாடும் சிறுமிகள் இறைவனை எண்ணிப் பாடும்விதமாக இந்தப் பாடல்களை மாணிக்கவாசகர் எழுதியுள்ளார். இவை தரவு கொச்சகக் கலிப்பா என்ற வகையில் அமைந்தவை. திருவண்ணாமலையில் அருளப்பட்டவை.

54

பாடலின்பம்

துண்டப் பிறையான், மறையான், பெருந்துறையான்,

கொண்ட புரிநூலான், கோலமா ஊர்தியான்,

கண்டம் கரியான், செம்மேனியான், வெண்ணீற்றான்,

அண்டமுதல் ஆயினான், அந்தம் இலா ஆனந்தம்

பண்டைப் பரிசே பழ அடியார்க்கு ஈந்து அருளும்

அண்டம் வியப்புறுமா பாடுதும் காண் அம்மானாய்.

*

விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை,

மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பு ஆகி நின்றானை,

தண் ஆர் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை,

பெண் ஆளும் பாகனை, பேணு பெருந்துறையில்

கண் ஆர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட

அண்ணாமலையானைப் பாடுதும் காண் அம்மானாய்.

பொருளின்பம்

பிறைநிலவைச் சூடியவன், வேதங்களின் வடிவமானவன், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவன், முப்புரிநூல் அணிந்தவன், அழகிய விடைவாகனத்தைக் கொண்டவன், கழுத்தில் கருநிறக் கறை கொண்டவன், சிவந்த மேனியன், வெள்ளைத் திருநீறு அணிந்தவன், அண்டங்கள் அனைத்துக்கும் முதல்வனாகத் திகழ்கிறவன், அத்தகைய சிவபெருமான் அன்றுமுதல் இன்றுவரை எல்லையில்லாத ஆனந்தத்தைத் தன் அன்பர்களுக்குத் தந்து அருளுகிறான், அதைக் கண்டு அண்டம் வியக்கிறது, அவனுடைய சிறப்பைப் பாடுவோம், அம்மானை ஆடுவோம்.

விண்ணை ஆளுகின்ற தேவர்களுக்கெல்லாம் மேலாக நிற்கிறவன், மறைகளின் வடிவமாக விளங்குகிறவன், இந்தப் பூமியை ஆளுகின்ற மன்னர்களெல்லாம் கண்டு பின்பற்றுகிற சிறப்புடன் திகழ்கிறவன், குளிர்ச்சி மிகுந்த தமிழை வளர்க்கும் பாண்டிய நாட்டுக்குச் சொந்தமானவன், தன் உடலின் இடப்பகுதியில் உமையம்மையைக் கொண்டவன், அனைவரும் விரும்புகிற திருப்பெருந்துறையில் கண்கூடாக எழுந்தருளி, நாய்போன்ற என்னை ஆட்கொண்டவன், அந்த அண்ணாமலையானைப் பாடுவோம், அம்மானை ஆடுவோம்.

சொல்லின்பம்

மறை: வேதம்

கோலம்: அழகு

மா: பெரிய

ஊர்தி: வாகனம்

கண்டம்: கழுத்து

பரிசு: நிலை

வேதியன்: மறைகளின் வடிவமானவன்

மாண்பு: சிறப்பு

தண்: குளிர்ச்சி

கழல்: ஆண்களின் வீர அணிகலன், இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

முழு கட்டுரையைப் படிக்க →