பகுதி 10 - திருக்கோத்தும்பி - 4
‘கோ’ என்றால் அரசன். ‘தும்பி’ என்றால் வண்டு. ‘கோத்தும்பி’ என்பது அரசவண்டு. அதாவது, வண்டுகளில் சிறந்தது.
‘கோ’ என்றால் அரசன். ‘தும்பி’ என்றால் வண்டு. ‘கோத்தும்பி’ என்பது அரசவண்டு. அதாவது, வண்டுகளில் சிறந்தது. அந்த வண்டிடம் பேசும்தன்மையில் அமைந்த பாடல்கள் இவை. மலரைச் சேர்வதுபோல் சிவபெருமானின் திருவடிகளைச் சேருமாறு வண்டுக்கும், அதன்மூலம் பக்தர்களுக்கும் சொல்பவை.
தில்லையில் எழுதப்பட்ட இருபது பாடல்களைக் கொண்ட பகுதி இது.
68
பாடலின்பம்
கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறைமிடற்றன்
சரணங்களே சென்று சார்தலுமேதான் எனக்கு
மரணம், பிறப்பு என்று இவைஇரண்டின் மயக்குஅறுத்த
கருணைக் கடலுக்கே சென்றுஊதாய் கோத்தும்பீ!
*
வல்நெஞ்சக் கள்வன், மனவலியன் என்னாதே
கல்நெஞ்சுஉருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னம் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்அம் கழலுக்கே சென்றுஊதாய் கோத்தும்பீ!
பொருளின்பம்
கரணங்கள் எனப்படும் செய்கைகளையெல்லாம் கடந்து நின்றவன், விஷக்கறை படிந்த கழுத்தைக் கொண்டவன், அந்தச் சிவபெருமானின் சரணங்களைச் சென்று சேர்ந்தபிறகுதான் எனக்குப் பிறப்பு, இறப்பு என்கிற சுழலின் மயக்கம் தீர்ந்தது.
கோத்தும்பியே, அந்தக் கருணைக் கடலின் திருவடிகளில் ரீங்காரம் செய்வாய்,
நான் அன்பில்லாத வல்நெஞ்சைக் கொண்ட கள்வன், கொடிய மனத்தை உடையவன், ஆனாலும், அதையெல்லாம் எண்ணி என்னை வெறுக்காமல், என்னுடைய கல் நெஞ்சையும் உருக்கி என்னை ஆட்கொண்டான் சிவபெருமான், அன்னங்கள் மகிழ்ச்சியாக வாழும் அழகிய சிதம்பரத்தின் அம்பலத்தில் திருநடனம் புரிகிறவன் அவன்,
கோத்தும்பியே, அப்பெருமானின் பொன் போன்ற அழகிய திருவடிகளில் ரீங்காரம் செய்வாய்,
சொல்லின்பம்
கரணம்: செய்கை
மிடறு: கழுத்து
சரணம்: பாதம்
வலியன்: வலிமையானவன்/ கடுமையானவன்
திளைக்கும்: மகிழும்
அணி: அழகிய
அம்: அழகிய
கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர அணிகலன்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது