பகுதி 11 - திருத்தெள்ளேணம் - 4
ஓலையால் செய்யப்பட்ட காற்றாடி சுழல்வதைப்போல, மனித உடலும் பிறப்பு, இறப்பு என்கிற சுழலில் சிக்கித் தவிக்கிறது.
தெள்ளேணம் என்பது தமிழ்ப் பெண்கள் விளையாடிய ஒரு பழைய விளையாட்டு. கைகளைக் கொட்டிக்கொண்டு ஆடுவது.
பெண்கள் தெள்ளேணம் ஆடியபடி சிவபெருமானின் பெருமையைப் பாடுவதாக இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன.
இதில் இருபது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
75
பாடலின்பம்
கறங்குஓலை போல்வது ஓர் காயப் பிறப்போடு இறப்பு என்னும்
அறம், பாவம் என்று இரண்டு அச்சம் தவிர்த்து என்னை ஆண்டுகொண்டான்,
மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய அத்
திறம் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ.
*
முத்திக்கு உழன்று முனிவர்குழாம் நனி வாட
அத்திக்கு அருளி, அடியேனை ஆண்டுகொண்டு
பத்திக் கடலுள் பதித்த பரஞ்சோதி
தித்திக்குமா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ.
பொருளின்பம்
ஓலையால் செய்யப்பட்ட காற்றாடி சுழல்வதைப்போல, மனித உடலும் பிறப்பு, இறப்பு என்கிற சுழலில் சிக்கித் தவிக்கிறது. அதற்குக் காரணமாக அமைபவை, பாவம், புண்ணியம். இந்த இரண்டையும் எண்ணி நான் அச்சத்தில் இருந்தேன்.
சிவபெருமான் என்னுடைய அச்சத்தை விலக்கி என்னை ஆண்டுகொண்டான், மறந்தும் அவனுடைய திருவடிகளை நான் மறக்காதவண்ணம் அருள் செய்தான்,
அவனது கருணையை நாம் பாடுவோம், தெள்ளேணம் கொட்டி ஆடுவோம்,
ஒருபக்கம் மோட்சத்தை வேண்டி முனிவர் கூட்டம் வாடிக்கொண்டிருக்கிறது, அவர்கள் வணங்கும் சிவபெருமானோ அத்தி என்கிற யானைக்கு அருளினான், என்னை ஆட்கொண்டான், பக்திக் கடலில் பதித்தான்,
அந்தப் பரஞ்சோதியின் தித்திக்கும் தன்மைகளைப் பாடுவோம், தெள்ளேணம் கொட்டி ஆடுவோம்,
சொல்லின்பம்
கறங்கு: சுழன்று
காயம்: உடல்
கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது
திறம்: தன்மை
முத்தி: மோட்சம்
குழாம்: கூட்டம்
நனி: மிகவும்
பத்தி: பக்தி