முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 12 – திருச்சாழல் - 1

ஒருத்தி: உங்கள் சிவபெருமான் நெற்றியில் வெண்ணீறு பூசியிருக்கிறார், சீறுகின்ற பாம்பை அணிந்திருக்கிறார்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

‘சாழல்’ என்பது பழந்தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. இதுவும் மகளிர் விளையாடுவதுதான். இந்த விளையாட்டில் ஒருத்தி கேள்வி கேட்பாள், இன்னொருத்தி அதற்குப் பதில் சொல்வாள். இந்த அமைப்பில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் இந்தப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இதில் இருபது பாடல்கள் உள்ளன. தில்லையில் அருளப்பட்டது.

79

பாடலின்பம்

பூசுவதும் வெண்ணீறு, பூண்பதுவும் பொங்குஅரவம்,

பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ!

பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டுஎன்னை

ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.

*

என்அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தான் ஈசன்,

துன்னம்பெய் கோவணமாக் கொள்ளும்அது என்னேடீ!

மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்

தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ.

பொருளின்பம்

ஒருத்தி: உங்கள் சிவபெருமான் நெற்றியில் வெண்ணீறு பூசியிருக்கிறார், சீறுகின்ற பாம்பை அணிந்திருக்கிறார், திருவாயால் வேதங்களைப் பேசுகிறார், இதெல்லாம் எதற்காக?

இன்னொருத்தி: அவர் என்ன பூசுகிறார், எதை அணிகிறார், என்ன பேசுகிறார் என்பதையெல்லாம் பார்க்காதே, ஈசன் எல்லா உயிர்களாகவும் திகழ்கிற இயல்பைப் பார்!

ஒருத்தி: என் அப்பன், எம்பிரான், எல்லாருக்கும் கடவுள், அவன் கிழிந்த துணியைத் தைத்துக் கோவணமாக அணிந்திருப்பது ஏன்? வேறு நல்ல ஆடை கிடைக்கவில்லையா?

இன்னொருத்தி: அது சாதாரணத் துணி அல்ல, நிலைத்துநிற்கின்ற, செறிவான வேதங்களையே அவன் தனது அரைஞாணாகவும் கோவணமாகவும் அணிந்திருக்கிறான், இதனை உணர்வாய்,

சொல்லின்பம்

பூண்பது: ஆபரணமாக அணிவது

பொங்கு: சீற்றம்

அரவம்: பாம்பு

மறை: வேதம்

துன்னம் பெய்: தைத்த

மன்னு: நிலைபெற்ற

துன்னு: செறிந்த

முழு கட்டுரையைப் படிக்க →