முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 12 – திருச்சாழல் - 2

பிரம்மன், மன்மதன், எமன், சந்திரன் ஆகிய நால்வரையும் சிவபெருமான் தாக்கினான்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

‘சாழல்’ என்பது பழந்தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. இதுவும் மகளிர் விளையாடுவதுதான். இந்த விளையாட்டில் ஒருத்தி கேள்வி கேட்பாள், இன்னொருத்தி அதற்குப் பதில் சொல்வாள். இந்த அமைப்பில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் இந்தப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இதில் இருபது பாடல்கள் உள்ளன. தில்லையில் அருளப்பட்டது.

80

பாடலின்பம்

அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை

வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ!

நயனங்கள் மூன்றுஉடைய நாயகனே தண்டித்தால்

சயம்அன்றோ வானவர்க்கு, தாழ்குழலாய் சாழலோ.

*

அலரவனும் மாலவனும் அறியாமே அழல்உருவாய்

நிலமுதல் கீழ் அண்டம்உற நின்றத்தான் என்னேடீ!

நிலமுதல் கீழ் அண்டம்உற நின்றிலனேல் இருவரும்தம்

சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ.

பொருளின்பம்

ஒருத்தி: பிரம்மன், மன்மதன், எமன், சந்திரன் ஆகிய நால்வரையும் சிவபெருமான் தாக்கினான், அதனால், அவர்கள் உடலில் மாறாத தழும்புகளையும் பழிச்சொல்லையும் உண்டாகினான். இது ஏன்?

இன்னொருத்தி: தாழ்ந்து தொங்கும் கூந்தலை உடையவளே, மூன்று கண்களை உடைய அந்த நாயகன் அவர்கள் செய்த பிழைக்குத் தண்டனை கொடுத்தான், அந்தத் தண்டனையால், அவர்கள் திருந்தினார்கள், அதுவே அவர்களுக்கு வெற்றிதானே? சிவன் தண்டித்ததும் நன்மைக்குதானே?

ஒருத்தி: பிரம்மன், திருமால் இருவரும் அறியாதவண்ணம் ஜோதிப்பிழம்பாக நிலம்முதல் அண்டம்வரை நின்றான் சிவபெருமான், அது ஏன்?

இன்னொருத்தி: சிவபெருமான் அப்படி நிலம்முதல் அண்டம்வரை நிற்கவில்லை என்றால், பிரம்மன், திருமால் இருவருடைய கோபமும் அகந்தையும் குறைந்திருக்காதே!

சொல்லின்பம்

அயன்: பிரம்மன்

அனங்கன்: மன்மதன்

அந்தகன்: எமன்

வயனங்கள்: பழிச்சொற்கள்

நயனங்கள்: கண்கள்

சயம்: வெற்றி

குழலாய்: கூந்தலை உடையவளே

அலரவன்: மலர்மேல் அமர்ந்தவன், பிரம்மன்

அழல்: நெருப்பு/ ஜோதி

சலமுகம்: கோபம்

ஆங்காரம்: அகந்தை

முழு கட்டுரையைப் படிக்க →