பகுதி 36 – திருப்பாண்டிப் பதிகம் - 2
ஆம் எனில், எம்பெருமானிடம் வாருங்கள். அவர் இந்த உலகமே இன்பவெள்ளத்தில் திளைக்கும்படி ஒரு குதிரையின் மீது ஏறி வருகிறார், அந்தப் பாண்டியனார்
தென்பாண்டி நாடுடைய சிவபெருமான் மாணிக்கவாசகரை ஆட்கொள்வதற்காக எழுந்தருளினான். அப்போது, தான் அனுபவித்த பேரின்பத்தை மாணிக்கவாசகர் இந்தப் பாடல்களில் எழுதியுள்ளார்.
இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.
208
பாடலின்பம்
நீர் இன்பவெள்ளத்துள் நீந்திக்
குளிக்கின்ற நெஞ்சம்கொண்டீர்,
பார் இன்பவெள்ளம்கொளப் பரிமேல்
கொண்ட பாண்டியனார்
ஓர்இன்பவெள்ளத்து உருக்கொண்டு
தொண்டரை உள்ளம்கொண்டார்,
பேர்இன்ப வெள்ளத்துள் பெய்கழலே
சென்று பேணுமினே.
*
செறியும் பிறவிக்கு நல்லவர்
செல்லன்மின், தென்னன் நல்நாட்(டு)
இறைவன் கிளர்கின்ற காலம்
இக்காலம், எக்காலத்துள்ளும்
அறிவு ஒண்கதிர்வாள் உறைகழித்து
ஆனந்த மாக்கடவி
எறியும் பிறப்பை, எதிர்ந்தார்
புரள இருநிலத்தே.
பொருளின்பம்
உங்களுக்குப் பேரின்ப வெள்ளத்தில் நீந்திக் குளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா?
ஆம் எனில், எம்பெருமானிடம் வாருங்கள். அவர் இந்த உலகமே இன்பவெள்ளத்தில் திளைக்கும்படி ஒரு குதிரையின் மீது ஏறி வருகிறார், அந்தப் பாண்டியனார் ஒப்பற்ற இன்பவெள்ளமான உருவத்தில் தொண்டர்களையெல்லாம் தன் அடிமையாக்கிக்கொள்கிறார், அத்தகைய சிவபெருமான் என்னும் பேரின்ப வெள்ளத்தை அனுபவியுங்கள், அந்தப் பெருமானின் திருவடிகளில் சென்று வணங்கிப் போற்றுங்கள்.
*
நல்லவர்களே, உங்களை மீண்டும் மீண்டும் பிறக்கவைக்கும் வினைகளின் வழியில் செல்லாதீர்கள்,
தென்னன், நல்நாட்டின் இறைவன், சிவபெருமான் நம்மை ஆளவருகின்ற சிறந்த காலம் இது,
இப்போது மட்டுமல்ல, எந்தக் காலமும் அவனுடைய காலம்தான், அறிவு என்கிற ஒளிவீசும் வாளை உறையிலிருந்து உருவி எடுத்துக்கொண்டு, பேரின்பம் என்கிற குதிரையின் மீது அவன் ஏறி வருகிறான், நமது பிறப்பை வெட்டி வீழ்த்துகிறான், எதிர்ப்பவர்களை (நம்மை நல்வழியில் செல்லவிடாமல் தடுப்பவர்களை) வெல்கிறான், இந்தப் பெரிய நிலத்தில், இனி என்றென்றும் அவன் ஆட்சியே.
சொல்லின்பம்
நீர்: நீங்கள்
நெஞ்சம்: விருப்பம்
பார்: உலகம்
பரி: குதிரை
ஓர் இன்பவெள்ளத்து உரு: ஒப்பற்ற, இன்பவெள்ளமாகிய உருவம்
பெய்கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம் / சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது
பேணுமினே: வணங்குங்கள்
செறியும்: தொடர்ந்துவரும்
செல்லன்மின்: செல்லாதீர்கள்
கிளர்கின்றன்: சிறப்புறத் திகழ்கின்ற
ஒண்கதிர்வாள் உறைகழித்து: ஒளிவீசும் வாளை உறையிலிருந்து உருவிக்கொண்டு
மா: குதிரை
கடவி: ஏறிவந்து
எறியும் பிறப்பை: பிறவியை வீழ்த்துவார்
எதிர்ந்தார் புரள இருநிலத்தே: எதிர்ப்பவர்கள் பெரிய நிலத்தில் புரளும்படி வெல்வார்