பகுதி 36 – திருப்பாண்டிப் பதிகம் - 4
மாயம் என்கிற அழகிய குதிரைமேல் ஏறி வருகிறவன் சிவபெருமான், அவன் நம்மை ஆட்கொண்டவுடன்,
தென்பாண்டி நாடுடைய சிவபெருமான் மாணிக்கவாசகரை ஆட்கொள்வதற்காக எழுந்தருளினான். அப்போது, தான் அனுபவித்த பேரின்பத்தை மாணிக்கவாசகர் இந்தப் பாடல்களில் எழுதியுள்ளார்.
இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.
210
பாடலின்பம்
மாய வனப்பரிமேல்கொண்டு
மற்றுஅவர் கைக்கொளலும்
போய்அறும் இப்பிறப்புஎன்னும்
பகைகள், புகுந்தவருக்(கு)
ஆய அரும்பெரும்சீர்உடைத்
தன்அருளே அருளும்
சேய நெடும்கொடைத் தென்னவன்
சேவடி சேர்மின்களே.
*
அழிவுஇன்றி நின்றதுஓர் ஆனந்த
வெள்ளத்துஇடை அழுத்திக்
கழிவுஇல் கருணையைக் காட்டிக்
கடிய வினைஅகற்றிப்
பழமலம், பற்றுஅறுத்து ஆண்டவன்
பாணிப் பெரும்பதமே
முழுதுஉலகும் தருவான் கொடையே,
சென்று முந்துமினே.
பொருளின்பம்
மாயம் என்கிற அழகிய குதிரைமேல் ஏறி வருகிறவன் சிவபெருமான், அவன் நம்மை ஆட்கொண்டவுடன், இந்தப் பிறப்பு என்கிற பகைகள் நம்மைவிட்டுச் சென்றுவிடும், தன்னை வணங்கிய அடியவர்களுக்கு அரிய, பெரிய சிறப்புகளைக்கொண்ட தன்னுடைய அருளையே பெரும்கொடையாக வழங்குகிறவன் அந்தத் தென்பாண்டிநாட்டுப் பெருமான், அவனது சிவந்த, சிறந்த திருவடிகளைச் சென்றுசேருங்கள்.
*
அழிவில்லாத ஓர் ஆனந்தவெள்ளத்தில் நம்மை அழுத்தி, நமக்கு நீங்காத கருணையைக் காட்டி, வல்வினைகளை அகற்றி, பழைய குற்றங்கள், பற்றுகளை அறுத்து நம்மை ஆட்கொள்கிறவன் சிவபெருமான், பாண்டிப் பெருநாட்டை ஆள்கிற அந்தப் பெருமான் பக்தர்களுக்கு உலகம்முழுவதையும் தருவான், அவனுடைய பெரும்கொடையான முக்திநிலையைப் பெறுவதற்கு முந்துங்கள்.
சொல்லின்பம்
வனப்பரி: அழகிய குதிரை
அரும்பெரும்சீர்: அரிய, பெரிய சிறப்பு
சேய: சிறந்த/ செம்மையான
நெடும்கொடை: பெரிய கொடை
தென்னவன்: தென்பாண்டிநாட்டுப் பெருமான்/ சிவபெருமான்
சேவடி: சிவந்த/ சிறந்த திருவடி
சேர்மின்களே: சேருங்கள்
கழிவுஇல்: நீங்காத
கடியவினை: வலிமையான வினைகள்
பழமலம்: பழைய குற்றங்கள்
பெரும்பதமே: பெரிய நாடு
முந்துமினே: முந்துங்கள்