முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 36 – திருப்பாண்டிப் பதிகம் - 5

மனிதர்கள் தாங்கள் செய்த தீவினைகளால் பிறப்பு என்கிற பெருங்கடலில் சிக்க நேர்கிறது, அந்தக் கடலைக் கடக்க விரும்பும் அன்பர்கள்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:09 PM
பகிர்:

தென்பாண்டி நாடுடைய சிவபெருமான் மாணிக்கவாசகரை ஆட்கொள்வதற்காக எழுந்தருளினான். அப்போது, தான் அனுபவித்த பேரின்பத்தை மாணிக்கவாசகர் இந்தப் பாடல்களில் எழுதியுள்ளார்.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.

211

பாடலின்பம்

விரவிய தீவினை மேலைப்

பிறப்பு முந்நீர்கடக்கப்

பரவிய அன்பரை என்புஉருக்கும்

பரம் பாண்டியனார்

புரவியின்மேல் வரப் புந்திகொளப்பட்ட

பூங்கொடியார்

மரஇயல் மேல்கொண்டு தம்மையும்

தாம் அறியார் மறந்தே.

*

கூற்றைவென்று, ஆங்குஐவர் கோக்களையும்

வென்றுஇருந்து அழகால்

வீற்றிருந்தான் பெரும்தேவியும்

தானும் ஓர் மீனவன்பால்

ஏற்றுவந்தார் உயிர்உண்ட

திறல் ஒற்றைச் சேவகனே,

தேற்றம்இலாதவர் சேவடி

சிக்கெனச் சேர்மின்களே.

பொருளின்பம்

மனிதர்கள் தாங்கள் செய்த தீவினைகளால் பிறப்பு என்கிற பெருங்கடலில் சிக்க நேர்கிறது, அந்தக் கடலைக் கடக்க விரும்பும் அன்பர்கள், சிவபெருமானை வணங்குகிறார்கள், அப்படி வணங்கும் அன்பர்களுடைய எலும்பை உருக்கி ஆட்கொள்கிறான் இறைவன்.

அத்தகைய பாண்டிநாட்டுத் தலைவன், சிவபெருமான் குதிரையின்மீது ஏறி வர, அதைக்கண்டு பூங்கொடிபோன்ற பெண்கள் எல்லாரும் (சிவன் வழியில் நடக்கிற பக்குவமான ஜீவன்கள் எல்லாரும்) தங்கள் உள்ளத்தைப் பறிகொடுக்கிறார்கள், தங்களையும் அறியாமல் மரம்போல் உறைந்து நின்றுவிடுவார்கள்.

*

சிவபெருமான் எமனை வென்றவன், ஐம்புலன்களாகிய மன்னர்களையும் வென்றவன், பேரழகுடன் திகழ்கிறவன், தன்னுடைய தேவியான உமையம்மையுடன் பாண்டிய அரசனின் நாட்டில் விருப்பத்துடன் எழுந்தருளியவன், எதிர்த்துவந்தவர்களின் உயிர்குடிக்கும் திறன்கொண்ட இணையற்ற வீரன்,

மனத்தெளிவு இல்லாதவர்களே, இத்தகைய சிறப்புவாய்ந்த எம்பெருமானின் சிறந்த, சிவந்த திருவடிகளைச் சிக்கெனப் பற்றிக்கொள்ளுங்கள்.

சொல்லின்பம்

விரவிய: கலந்த

பிறப்பு முந்நீர்: பிறவிக்கடல்

பரவிய: வணங்கிய

என்பு: எலும்பு

பரம் பாண்டியனார்: உயர்ந்த இறைவன் / சிவபெருமான்

புரவி: குதிரை

புந்தி கொளப்பட்ட: அறிவை மறந்த

மர இயல் மேல்கொண்டு: மரம்போன்ற இயல்பைக்கொண்டு

கூற்றை வென்று: எமனை வென்று

ஐவர் கோக்களையும் வென்று: ஐம்புலன்களாகிய அரசர்களையும் வென்று

மீனவன்பால்: பாண்டியனின் நாட்டில்

ஏற்றுவந்தார்: எதிர்த்துவந்தார்

திறல் ஒற்றைச் சேவகனே: திறன் கொண்ட, இணையற்ற வீரன்

தேற்றம் இலாதவர்: தெளிவில்லாதவர்

சேவடி: சிவந்த/ சிறந்த திருவடிகள்

சிக்கெனச் சேர்மின்களே: சிக்கென்று சேருங்கள்

முழு கட்டுரையைப் படிக்க →