முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 37 – பிடித்த பத்து - 3

உனக்கு இணையாக யாரும் இல்லாதபடி சிறந்து விளங்குபவனே, என்னுடைய உள்ளத்தில் ஒளிர்கின்ற ஒளியே,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:09 PM
பகிர்:

சிவபெருமானின் திருவடிகளைப் பிடித்துக்கொண்டது பற்றிப் பாடிய பாடல்கள் இவை. திருத்தோணிபுரம் எனப்படும் சீர்காழியில் பாடப்பட்டவை.

பத்து பாடல்களின் தொகுப்பு.

214

பாடலின்பம்

ஒப்புஉனக்குஇல்லா ஒருவனே, அடியேன்

உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே,

மெய்ப்பதம் அறியா வீறுஇலியேற்கு

விழுமியது அளித்ததோர் அன்பே,

செப்புதற்குஅரிய செழுஞ்சுடர் மூர்த்தீ,

செல்வமே, சிவபெருமானே,

எய்ப்பிடத்துஉன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,

எங்கு எழுந்துஅருளுவது இனியே.

*

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டுஆண்டு

அளவுஇலா ஆனந்தம்அருளிப்

பிறவிவேர் அறுத்து என்குடிமுழுது ஆண்ட

பிஞ்ஞகா, பெரிய எம் பொருளே,

திறவிலே கண்ட காட்சியே, அடியேன்

செல்வமே, சிவபெருமானே,

இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,

எங்கு எழுந்துஅருளுவது இனியே.

பொருளின்பம்

உனக்கு இணையாக யாரும் இல்லாதபடி சிறந்து விளங்குபவனே, என்னுடைய உள்ளத்தில் ஒளிர்கின்ற ஒளியே,

மெய்ப்பொருளை அறியாதவன் நான், மேன்மையற்றவன், எனினும் எனக்குச் சிறந்த அருளை வழங்கிய அன்பனே,

சொற்களில் விவரிக்க இயலாத செழுஞ்சுடர் மூர்த்தியே, செல்வமே, சிவபெருமானே,

இளைத்துச் சலித்த நான் உன்னைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டேன், இனி நீ வேறு எங்கு செல்ல இயலும்!

*

ஆதரவற்றவனான என் மனத்தையே உன்னுடைய கோயிலாகக் கொண்டு ஆட்சிசெய்து, அளவில்லாத ஆனந்தத்தை அருளி, என்னுடைய பிறவிவேரை அறுத்து, என் குலம் முழுவதையும் ஆண்ட பிஞ்ஞகனே,

எங்கள் பெரிய பரம்பொருளே, வெளிப்படையாக என்முன் தோன்றி திருக்காட்சி தந்தவனே, என்னுடைய செல்வமே, சிவபெருமானே,

நிறைவாக நான் உன்னைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டேன், இனி நீ வேறு எங்கு செல்ல இயலும்!

சொல்லின்பம்

ஒருவனே: ஒப்பற்றவனே

மெய்ப்பதம்: உயர்ந்த மெய்ப்பொருள்

வீறுஇலி: மேன்மை இல்லாதவன்

விழுமியது: சிறந்தது

செப்புதற்கு அரிய: சொற்களில் விவரிக்க இயலாத

மூர்த்தீ: மூர்த்தியே

எய்ப்புஇடத்து: இளைத்தபோது

அறவையேன்: ஆதரவற்றவன்

குடி: குலம்

பிஞ்ஞகா: சிவபெருமானே

திறவிலே: வெளிப்படையாக

இறவிலே: முடிவாக / நிறைவாக

முழு கட்டுரையைப் படிக்க →