பகுதி 37 – பிடித்த பத்து - 4
பாசம் என்கிற பற்றின் வேரை அறுக்கும் பழம்பொருளே, உன்னைப் பற்றுகின்ற வழியை எனக்குச் சொல்லித் தந்து அருள் செய்தவனே,
சிவபெருமானின் திருவடிகளைப் பிடித்துக்கொண்டது பற்றிப் பாடிய பாடல்கள் இவை. திருத்தோணிபுரம் எனப்படும் சீர்காழியில் பாடப்பட்டவை.
பத்து பாடல்களின் தொகுப்பு.
214
பாடலின்பம்
பாசவேர்அறுக்கும் பழம்பொருள்தன்னைப்
பற்றுமாறு அடியனேற்குஅருளிப்
பூசனை உகந்து என் சிந்தையுள்புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே,
தேசுஉடை விளக்கே, செழுஞ்சுடர் மூர்த்தீ,
செல்வமே, சிவபெருமானே,
ஈசனே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,
எங்கு எழுந்துஅருளுவது இனியே.
*
அத்தனே, அண்டர் அண்டமாய் நின்ற
ஆதியே, யாதும் ஈறுஇல்லாச்
சித்தனே, பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே, சிவபெருமானே,
பித்தனே, எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,
எங்கு எழுந்துஅருளுவது இனியே.
பொருளின்பம்
பாசம் என்கிற பற்றின் வேரை அறுக்கும் பழம்பொருளே, உன்னைப் பற்றுகின்ற வழியை எனக்குச் சொல்லித் தந்து அருள் செய்தவனே, என் பூசைகளை ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து, சிந்தனையில் புகுந்து உன்னுடைய மலர்த் திருவடிகளைக் காட்டியவனே, பரம்பொருளே, ஒளி நிறைந்த விளக்கே, செழுமையாகச் சுடர்விடும் மூர்த்தியே, செல்வமே, சிவபெருமானே,
ஈசனே, நான் உன்னைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டேன், இனி நீ வேறு எங்கு செல்ல இயலும்!
*
எங்கள் தந்தையே, தேவர்களாகவும் அனைத்து உலகங்களாகவும் நின்ற முதல்வனே, எந்தவகையிலும் முடிவில்லாத சித்தனே, பக்தர்கள் சிக்கெனப் பிடிக்கும் செல்வமே, சிவபெருமானே,
பித்தனே, எல்லா உயிர்களுமாகப் பெருகி நிற்பவனே, அதேசமயம் அவற்றில் எவையுமாக இல்லாமல் தனித்துத் திகழ்கிறவனே,
பல மாயங்களைச் செய்கிற எத்தனே, நான் உன்னைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டேன், இனி நீ வேறு எங்கு செல்ல இயலும்!
சொல்லின்பம்
பற்றுமாறு: பற்றும் விதம்
பூசனை உகந்து: பூசைகளால் மகிழ்ந்து
சிந்தை: சிந்தனை
பூங்கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம் / இங்கே சிவபெருமானின் மலர்த் திருவடிகளைக் குறிக்கிறது
தேசு: ஒளி
செழுஞ்சுடர்: செழுமையான சுடர்
அத்தனே: தந்தையே
அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே: தேவர்கள், உலகங்களாக நின்ற முதல்வனே
ஈறுஇல்லா: முடிவில்லாத
பத்தர்: பக்தர்
அல்லையாய்: இல்லாமல்
எத்தனே: மாயம் செய்கிறவனே