பகுதி 40 – குலாப் பத்து - 1
குலாவுதல் என்றால் மகிழ்ச்சியாக இருத்தல் என்று பொருள். தில்லையில் சிவபெருமானின் ஆடலைக்கண்டு மகிழ்ந்தது பற்றி மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் இவை.
குலாவுதல் என்றால் மகிழ்ச்சியாக இருத்தல் என்று பொருள். தில்லையில் சிவபெருமானின் ஆடலைக்கண்டு மகிழ்ந்தது பற்றி மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் இவை.
‘குலா’ என்ற சொல்லுக்கு விளக்கம் / விளங்கித் திகழ்தல் என்ற பொருளும் உண்டு. தில்லையில் சிவபெருமான் சிறப்பாகத் திகழ்வது பற்றி மகிழ்ந்து பாடிய பாடல்கள் என்றும் சொல்லலாம்.
இவை தில்லையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.
223
பாடலின்பம்
ஓடும் கவந்தியுமே உறவென்றிட்டு, உள்கசிந்து
தேடும் பொருளும் சிவன்கழலே எனத் தெளிந்து
கூடும் உயிரும் குமண்டைஇடக் குனித்துஅடியேன்
ஆடும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
*
துடிஏர் இடுகுஇடைத் தூய்மொழியார் தோள்நசையால்
செடிஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும்
முடியேன், பிறவேன், எனைத் தனதாள் முயங்குவித்த
அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
பொருளின்பம்
எம்பெருமானை வணங்கித் தெளிந்த பிறகு, வெறும் திருவோடும் கோவணமும்தான் எனக்கு உறவு என்று புரிந்துகொண்டேன், மற்ற உலக இன்பங்களில் பற்றற்று இருக்கப் பழகினேன்,
இறைவனை எண்ணி உள்ளம் கசிந்து, நான் தேடுகின்ற பொருள் சிவபெருமான் திருவடிதான் எனப் புரிந்துகொண்டேன், என்னுடைய உடலும் உயிரும் மகிழ்ச்சியுடன் துள்ளியது, வளைந்து நடனமாடுகின்ற, ஒளிநிறைந்த தில்லை ஆண்டானை நான் பற்றிக்கொண்டேனே!
*
உடுக்கை போன்ற, அழகிய, சுருங்கிய இடையையும் தூய்மையான பேச்சையும் உடைய பெண்களுடைய தோள்களைச் சேர வேண்டும் என்ற விருப்பத்தால், பாவம் தருகிற தீமைகள் பலவற்றைச் செய்தேன், ஆனாலும் நான் பிறப்பு, இறப்பு என்கிற சுழலில் சிக்கிக்கொள்ளவில்லை,
காரணம், எம்பெருமான், ஒளிநிறைந்த தில்லை ஆண்டான் என்னைத் தன்னுடைய திருவடிகளில் சேரச்செய்தான், நானும் அந்தத் திருவடிகளைப் பற்றிக்கொண்டேனே!
சொல்லின்பம்
ஓடு: திருவோடு
கவந்தி: கோவணம்
சிவன் கழலே: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம் கழல் / இங்கே சிவபெருமான் திருவடிகளைக் குறிக்கிறது
தெளிந்து: தெளிவடைந்து
கூடு: உடல்
குமண்டை இடக் குனித்து: மகிழ்ச்சியுடன் வளைந்து / குனிந்து
குலாத் தில்லை ஆண்டான்: விளங்கும் தில்லை ஆண்டவன் / சிவபெருமான்
துடி ஏர் இடுகு இடைத் தூய்மொழியார்: உடுக்கை போன்ற, அழகிய, சுருங்கிய இடையையும், தூய்மையான பேச்சையும் உடைய பெண்கள்
நசையால்: விருப்பத்தால்
செடி ஏறு தீமைகள்: துன்பத்தைத் தருகிற தீமைகள்
முடியேன்: இறக்கமாட்டேன்
தன தாள் முயங்குவித்த: தன்னுடைய திருவடிகளில் சேரச்செய்த