பகுதி 43 – திருவார்த்தை - 5
தூய வெள்ளை நீறு அணிகிற நம் பெருமான், சோதி வடிவான, மகேந்திர மலையின் தலைவன், தேவர்கள் எல்லாரும் வந்து தொழுகின்ற திருவடிகளைக் கொண்ட ஈசன், திருப்பெருந்துறையை ஆள்பவன், தென்னன், சிவபெருமான்,
இறைவனின் தன்மைகளைச் சொல்லும் மேலான வார்த்தை என்ற பொருளில் இப்பாடல்கள் அமைந்துள்ளன.
திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.
பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பு.
242
பாடலின்பம்
தூவெள்ளை நீறுஅணி எம்பெருமான், சோதி மகேந்திரநாதன், வந்து
தேவர் தொழும் பதம்வைத்த ஈசன், தென்னன், பெருந்துறை ஆளி அன்று
காதல் பெருகக் கருணை காட்டித் தன்கழல் காட்டிக் கசிந்துஉருகக்
கேதம் கெடுத்து என்னை ஆண்டுஅருளும் கிடப்புஅறிவார் எம்பிரான்ஆவாரே.
*
அம்கணன், எங்கள் அமரர் பெம்மான், அடியார்க்கு அமுதன், அவனிவந்த
எங்கள் பிரான், இரும் பாசம் தீர இகபரம் ஆயது ஓர் இன்பம் எய்தச்
சங்கம் கவர்ந்து வண் சாத்தினோடும் சதுரன், பெருந்துறை ஆளி அன்று
மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த வகைஅறிவார் எம்பிரான்ஆவாரே.
பொருளின்பம்
தூய வெள்ளை நீறு அணிகிற நம் பெருமான், சோதி வடிவான, மகேந்திர மலையின் தலைவன், தேவர்கள் எல்லாரும் வந்து தொழுகின்ற திருவடிகளைக் கொண்ட ஈசன், திருப்பெருந்துறையை ஆள்பவன், தென்னன், சிவபெருமான்,
அன்றொருநாள், என் மீது அவனுக்குக் காதல் பெருகியது, தன் கருணைவடிவை எனக்குக் காட்டினான், நான் வணங்குவதற்குத் தன் திருவடிகளைக் காட்டினான், மனம் கசிந்து உருகச்செய்தான், துன்பங்களையெல்லாம் அழித்து என்னை ஆண்டுகொண்டான், அந்த அருள்தன்மையை அறிந்தவர் யாரோ, அவரே எம் தலைவர்!
*
அழகிய கண்களைக் கொண்டவன், தேவர்களின் தலைவனான நம் பெருமான், அடியவர்களுக்கு அமுதாகத் திகழ்கிறவன், நமக்காகப் பூமிக்கு வந்த நம் தலைவன், இந்த உலகத்தில் உள்ள பொருள்களின் மீது நாம் வைத்திருக்கிற பெரிய பற்று நீங்கும்படி, இம்மைக்கும் மறுமைக்கும் இன்பத்தை அருளுபவன், எதையும் நன்கு நிறைவேற்றவல்ல சமர்த்தன், திருப்பெருந்துறையை ஆள்பவன், சிவபெருமான்,
அத்தகைய பெருமான், அன்று பிட்சாடனக் கோலத்தில் சென்று, தாருகாவனத்திலிருந்த முனிவர்களின் மனைவியருடைய கைகளில் இருந்த சங்கு வளையல்களைக் கவர்ந்துகொண்டான், வளமையான வணிகர்களின் கூட்டம் சுற்றிவர, பெண்கள் நிறைந்த மதுரையில் எழுந்தருளினான், அந்த அருள்தன்மையை அறிந்தவர் யாரோ, அவரே எம் தலைவர்!
சொல்லின்பம்
தூ: தூய்மை
மகேந்திர நாதன்: மகேந்திர மலையின் தலைவன்
பதம்: திருவடி
பெருந்துறை ஆளி: திருப்பெருந்துறையை ஆள்பவன்
கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம் / இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது
கேதம்: துன்பம்
கிடப்பு: தன்மை
பிரான்: தலைவன்
அம்கணன்: அழகிய கண்களை உடையவன்
பெம்மான்: பெருமான்
அமுதன்: அமுதம்போன்றவன்
அவனி: பூமி
இரும்பாசம்: பெரிய பாசம் / பற்று
இக பரம்: இம்மை, மறுமை
சங்கம்: சங்கு வளையல்
வண் சாத்து: வளமையான வணிகர் கூட்டம்
சதுரன்: சமர்த்தன்
மல்கும்: நிறைந்த