முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 44 – எண்ணப் பதிகம் - 2

எலும்புகளெல்லாம் உருகும்படி உன்னுடைய அருளைத் தந்து, மலர்த் திருவடிகளைக் காட்டி முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவனே, அனைத்து

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:10 PM
பகிர்:

இறைவனைப் பற்றிய அன்பரின் மனக்கருத்தை எடுத்துரைக்கும் பாடல்கள் இவை. பதிகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதில் ஆறு பாடல்கள் மட்டுமே உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

244

பாடலின்பம்

என்பே உருக நின் அருள் அளித்து உன் இணைமலர் அடிகாட்டி
முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா, முனிவர் முழுமுதலே,
இன்பே அருளி எனைஉருக்கி உயிர்உண்கின்ற எம்மானே,
நண்பே அருளாய் என்உயிர் நாதா நின்அருள் நாணாமே.

*

பத்திலனேனும் பணிந்திலனேனும் உன் உயர்ந்த பைங்கழல் காணப்
பித்துஇலனேனும் பிதற்றிலனேனும் பிறப்புஅறுப்பாய் எம் பெருமானே,
முத்துஅனையானே, மணிஅனையானே, முதல்வனே, முறையோஎன்று
எத்தனையானும் யான் தொடர்ந்துஉன்னை இனிப் பிரிந்துஆற்றேனே.

பொருளின்பம்

எலும்புகளெல்லாம் உருகும்படி உன்னுடைய அருளைத் தந்து, மலர்த் திருவடிகளைக் காட்டி முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவனே, அனைத்து முனிவர்களின் முழுமுதல் தெய்வமே, இன்பத்தையே தந்து என்னை உருக்கி உயிரை உண்கிற எங்கள் தலைவனே, சிவபெருமானே,

தொடர்ந்து உன்னுடைய அருளை நட்போடு எனக்கு அருள்வாய், பக்தனுக்கு வாரி வழங்கத் தயக்கம் என்ன? தடையென்ன?

*

எங்கள் பெருமானே,

எனக்கு உன்மீது பற்று இல்லை, நான் உன்னைப் பணியவில்லை, உன்னுடைய உயர்ந்த பைங்கழல்களை, திருவடிகளைக் காண வேண்டும் என்கிற பித்து எனக்கு இல்லை, உன்னை எண்ணி நான் பலவிதமாகப் பிதற்றவில்லை,

ஆனாலும், பெருமானே, நீ என்னுடைய பிறப்பு என்கிற சுழலை அறுப்பாய்!

எத்தனை நாளானாலும் சரி, சிவபெருமானே, முத்து போன்றவனே, மணி போன்றவனே, முதல்வனே, நீ என்னை வாட்டுவது முறையோ என்று சொன்னபடி உன்னைத் தொடர்ந்து நான் வருவேன், இனி, உன்னைப் பிரிந்து வாழ என்னால் இயலாது.

சொல்லின்பம்

என்பு: எலும்பு

இன்பு: இன்பம்

எம்மானே: எங்கள் தலைவனே

நண்பு: நட்பு

நாதா: தலைவா

நாணாமே: தயக்கமின்றி / சோர்வின்றி

பத்திலன்: பற்று இலன் / பற்று இல்லாதவன்

பணிந்திலன்: பணியாதவன்

பைங்கழல்: ஆண்கள் காலில் அணிகிற வீர ஆபரணம் / இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

முத்து அனையானே: முத்து போன்றவனே

எத்தனையானும்: எத்தனை நாளானாலும் / எவ்வளவு சிரமமானாலும் சரி

ஆற்றேனே: தாங்கமாட்டேனே

முழு கட்டுரையைப் படிக்க →