பகுதி 45 – யாத்திரைப் பத்து - 1
யாத்திரை என்றால், பயணம் என்பது பொருள். உலக இன்பங்களை விட்டு, சிவபுரத்துக்குச் செல்லும் மோட்சப் பயணத்தைப் பற்றிய பாடல்கள் இவை.
யாத்திரை என்றால், பயணம் என்பது பொருள். உலக இன்பங்களை விட்டு, சிவபுரத்துக்குச் செல்லும் மோட்சப் பயணத்தைப் பற்றிய பாடல்கள் இவை.
தில்லையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.
246
பாடலின்பம்
பூஆர் சென்னிமன்னன், எம் புயங்கப்பெருமான், சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்து உணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆஆ என்னப்பட்டு அன்பாய் ஆட்பட்டீர், வந்துஒருப்படுமின்,
போவோம், காலம் வந்ததுகாண், பொய்விட்டு, உடையான் கழல்புகவே.
*
புகவே வேண்டாம் புலன்களில்நீர், புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின், மிக்கஎல்லாம் வேண்டா, போகவிடுமின்கள்,
நகவே ஞாலத்துள் புகுந்து நாயேஅனைய நமைஆண்ட
தகவேஉடையான்தனைச் சாரத் தளராதுஇருப்பார் தாம்தாமே.
பொருளின்பம்
மலர்கள் சிறந்து விளங்குகின்ற சடைமுடியைக் கொண்டவர், நம் மன்னர், பாம்பைக் கழுத்தில் அணிந்த பெருமான்,
அத்தகைய சிவபெருமான், சிறியவர்களாகிய நம்மை ஒருகணமும் நீங்காமல், நமது உள்ளத்தில் கலந்து உணர்வாகத் திகழ்ந்து உருக்குகின்றான், நம் நிலைமையைக் கண்டு பரிதாபப்பட்டுக் கருணை வெள்ளத்தை நம் மீது பொழிகின்றான், அதனால் நாம் அவனுடைய அன்புக்கு அடிமைகளாகிறோம்,
அடியவர்களே, எல்லாரும் வாருங்கள், நாம் சிவபுரத்தை நோக்கிச் செல்லும் காலம் வந்துவிட்டது, போவோம், பொய்யான விருப்பங்களை விடுவோம், நமது தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகளை அடைவோம்.
*
அன்பர்களே, ஐம்புலன்களின் மீது ஆசை வேண்டாம்,
பாம்பை அணிந்த பெருமானின் மலர்த் திருவடிகளை மட்டுமே நினையுங்கள், மற்ற எதுவும் நமக்கு வேண்டாம், விட்டுவிடுங்கள்,
நாய்போன்ற நமக்கும் எம்பெருமான் அருள்செய்கிறான், அதற்காகப் பூமிக்கு வருகிறான், இதைக்கண்டு பிறர் சிரிக்கிறார்கள், (அதை அவன் பொருட்படுத்துவதில்லை, நாமும் பொருட்படுத்தவேண்டாம்),
எல்லாத் தகுதிகளையும் உடைய பெரும் தலைவனான அவனைச் சேர்ந்துவிட்டால், அதன்பிறகு மனத்தளர்ச்சி நமக்கு இல்லை. வாருங்கள்!
சொல்லின்பம்
பூஆர் சென்னி: மலர்கள் திகழ்கிற சடைமுடி
புயங்கம்: பாம்பு
சிறியோம்: சிறியவர்கள்
ஓவாது: இடைவிடாது
ஆஆ: உருக்கம் / பரிதாப உணர்வு
ஆட்பட்டீர்: அடிமையானீர்கள்
ஒருப்படுமின்: ஒன்றுசேருங்கள்
உடையான்: நம்மை அடிமையாக உடையவன்
கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம் / இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது
நீர்: நீங்கள்
பூங்கழல்கள்: மலர்த் திருவடிகள்
நினைமின்: நினையுங்கள்
வேண்டா: வேண்டாம்
விடுமின்கள்: விடுங்கள்
நகவே: பிறர் சிரிக்கும்படி
ஞாலத்துள்: உலகத்தில்
அனைய: போன்ற
நமை ஆண்ட: நம்மை ஆண்ட
தகவே: தகுதியே
சார: சார்ந்திருக்க / சேர்ந்திருக்க