முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 45 – யாத்திரைப் பத்து - 3

இதுதான் சரியான நேரம், வாருங்கள், கூட்டமாகச் சிவபுரத்துக்குச் செல்வோம், நம்மை அடிமையாகக் கொண்ட சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வோம்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:10 PM
பகிர்:

யாத்திரை என்றால், பயணம் என்பது பொருள். உலக இன்பங்களை விட்டு, சிவபுரத்துக்குச் செல்லும் மோட்சப் பயணத்தைப் பற்றிய பாடல்கள் இவை.

தில்லையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.

248

பாடலின்பம்

விடுமின் வெகுளி, வேட்கை நோய், மிக ஓர்காலம் இனிஇல்லை,

உடையான் அடிக்கீழ் பெரும்சாத்தோடுஉடன்போவதற்கே ஒருப்படுமின்,

அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள், அணிஆர் கதவுஅதுஅடையாமே

புடைபட்டு உருகிப் போற்றுவோம் புயங்கன், ஆள்வான் புகழ்களையே.

*

புகழ்மின், தொழுமின், பூப்புனைமின் புயங்கன் தாளே புந்திவைத்திட்டும்,

இகழ்மின் எல்லா அல்லலையும், இனிஓர் இடையூறு அடையாமே

திகழும் சீர்ஆர் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கி நாம்

நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே.

பொருளின்பம்

அடியவர்களே, உங்களுடைய கோபம், ஆசை போன்ற நோய்களை விட்டுவிடுங்கள்,

இதுதான் சரியான நேரம், வாருங்கள், கூட்டமாகச் சிவபுரத்துக்குச் செல்வோம், நம்மை அடிமையாகக் கொண்ட சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வோம்,

அங்குள்ள அழகிய கதவு நம்மைக்கண்டதும் அடைபடாமல் இருக்க வேண்டும், அதற்கு, நாம் நெருங்கி நின்று, மனம் உருகி வணங்குவோம், பாம்பை அணிந்தவன், நம்மை ஆள்கிறவனாகிய சிவபெருமானுடைய புகழைப் போற்றுவோம்.

*

பாம்பை அணிந்த பெருமானின் திருவடிகளையே மனத்தில் வைத்துப் புகழ்வோம், தொழுதிடுவோம், மலர்களைத் தூவி அவனது திருவடிகளை அழகுபடுத்துவோம்,

மற்ற எல்லாத் துயரங்களையும் இகழ்ந்து ஒதுக்கிடுவோம், இனிமேல் நம்முடைய பணிகள் எவற்றிலும் எந்த இடையூறும் வராமல் இருப்பதற்காக, சிறந்து விளங்கும் சிவபுரம் செல்வோம், சிவபெருமானின் திருவடிகளை வணங்குவோம், அங்கே நமக்குமுன் சென்றிருக்கும் அடியவர்களுக்குமுன்னே சென்று நெஞ்சம் உருகி நிற்போம், வாருங்கள்.

சொல்லின்பம்

விடுமின்: விடுங்கள்

வெகுளி: கோபம்

வேட்கை: ஆசை

உடையான்: நம்மை அடிமையாக உடையவன்

பெரும்சாத்து: பெரும்கூட்டம்

ஒருப்படுமின்: ஒன்றுசேருங்கள்

அணி: அழகு

புடைபட்டு: நெருங்கிப் பக்கங்களில் சேர்ந்து

புயங்கன்: பாம்பை அணிந்தவன்

ஆள்வான்: நம்மை ஆள்கிறவன்

புகழ்மின்: புகழுங்கள்

தொழுமின்: தொழுதிடுங்கள்

புனைமின்: அழகுபடுத்துங்கள்

தாள்: திருவடிகள்

புந்தி: சிந்தனை

இகழ்மின்: இகழுங்கள்

அல்லல்: துன்பம்

திகழும் சீர்: சிறந்து விளங்கும்

நிகழும்: தங்கியிருக்கும்

முழு கட்டுரையைப் படிக்க →