பகுதி 45 – யாத்திரைப் பத்து - 4
நிலையில்லாத இந்த உலகத்தில் நிற்பவர்கள் நிற்கட்டும், நாம் இங்கே நிற்கமாட்டோம், செல்வோம்,
யாத்திரை என்றால், பயணம் என்பது பொருள். உலக இன்பங்களை விட்டு, சிவபுரத்துக்குச் செல்லும் மோட்சப் பயணத்தைப் பற்றிய பாடல்கள் இவை.
தில்லையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.
249
பாடலின்பம்
நிற்பார் நிற்க நில்லாஉலகில், நில்லோம், இனி நாம் செல்வோமே,
பொற்பால் ஒப்பாம் திருமேனிப் புயங்கன், ஆள்வான் பொன்அடிக்கே
நிற்பீர் எல்லாம், தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற்குஅரியன் பெருமானே.
*
பெருமான் பேரானந்தத்துப் பிரியாதுஇருக்கப் பெற்றீர்காள்,
அருமால்உற்றுப் பின்னை நீர் அம்மா, அழுங்கி அரற்றாதே,
திருமாமணிசேர் திருக்கதவம் திறந்தபோதே சிவபுரத்துத்
திருமால் அறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே.
பொருளின்பம்
நிலையில்லாத இந்த உலகத்தில் நிற்பவர்கள் நிற்கட்டும், நாம் இங்கே நிற்கமாட்டோம், செல்வோம்,
பொன்போன்ற சிறந்த திருமேனியைக் கொண்டவன், பாம்பை அணிந்தவன், நம்மை ஆள்பவன், அந்தச் சிவபெருமானுடைய பொன் திருவடிகளைச் சென்று சேர வேண்டும் என்று நிற்பவர்களே, அதனை நிறைவேற்ற வேண்டும் என்கிற சிந்தனையில் மனத்தை, உடலை ஒன்றுபடுத்திச் செலுத்துங்கள், புறப்படுங்கள், செல்வோம்,
இங்கேயே நின்று தற்பெருமை பேசிக்கொண்டு நேரத்தை வீணடித்தால், இறைவனைச் சென்றடைவது எளிதல்ல, அந்தப் பெருமான் கிடைப்பதற்கு அரியவன்.
*
எம்பெருமானின் பேரானந்தத்தைப் பிரியாமல் அவனை வணங்கியபடி இருக்கும் வரத்தைப் பெற்றவர்களே,
ஒருபோதும் அரிய மயக்கத்தில் ஆழ்ந்துவிடாதீர்கள், (அவனை மறந்துவிடாதீர்கள்,)
அதன்பிறகு நீங்கள் ‘ஆஆ’ என்று மனம் புழுங்கி அரற்றிப் பலன் இல்லை, (அவன் கிடைப்பதற்கு அரியவன்,)
சிவபுரத்தின் சிறந்த, உயர்ந்த மணிகள் பதிக்கப்பட்ட திருக்கதவு திறந்திருக்கும்போதே உள்ளே நுழைந்துவிடுவோம், திருமாலும் அறியாத சிறப்பைக் கொண்டவன், பாம்பை அணிந்த அந்தச் சிவபெருமானுடைய திருவடிகளைச் சென்று சேர்வோம்.
சொல்லின்பம்
நில்லோம்: நிற்கமாட்டோம்
பொற்பு: பொன்
ஒப்பாம்: ஒப்பான / இணையான
புயங்கன்: பாம்பை அணிந்தவன்
ஆள்வான்: நம்மை ஆள்கிறவன்
நிற்பீர்: நிற்கிறவர்களே
தாழாதே: தாமதப்படுத்தாமல்
ஒருப்படுமின்: ஒன்றுசேருங்கள்
பிற்பால்: பிறகு
பேழ்கணித்தால்: தற்பெருமை பேசினால்
பெற்றீர்காள்: பெற்றவர்களே
அருமால்: அரிய மயக்கம்
அம்மா: இரக்கக் குறிப்பு
அழுங்கி: மனம் வருந்தி
திரு மா மணிசேர் திருக்கதவம்: சிறப்பு நிறைந்த, பெரிய மணிகள் பதிக்கப்பட்ட திருக்கதவு
திருத்தாள்: திருவடி