பகுதி 46 – திருப்படை எழுச்சி - 1
நம்மை ஆன்மிகவழியில் செல்லவிடாமல் தடுக்கும் மாயைக்கு எதிராக அருள் என்கிற படையை எழுப்பிச் செலுத்த வேண்டும் என்று கோருகின்ற பாடல்கள் இவை.
நம்மை ஆன்மிகவழியில் செல்லவிடாமல் தடுக்கும் மாயைக்கு எதிராக அருள் என்கிற படையை எழுப்பிச் செலுத்த வேண்டும் என்று கோருகின்ற பாடல்கள் இவை.
தில்லையில் அருளப்பட்டவை. இரண்டு பாடல்கள் மட்டுமே இந்தப் பகுதியில் உள்ளன.
251
பாடலின்பம்
ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறைஅறைமின்,
மானமா ஏறும்ஐயர் மதிவெண் குடைகவிமின்,
ஆனநீற்றுக்கவசம் அடையப் புகுமின்கள்
வானவூர் கொள்வோம் நாம் மாயப்படை வாராமே.
*
தொண்டர்காள், தூசிசெல்லீர், பத்தர்காள், சூழப்போகீர்,
ஒண்திறல் யோகிகளே, பேரணி உந்தீர்கள்,
திண்திறல் சித்தர்களே, கடைக்கூழை செல்மின்கள்,
அண்டர்நாடு ஆள்வோம்நாம், அல்லல்படை வாராமே.
பொருளின்பம்
ஞானம் என்கிற வாளை ஏந்திவரும் நம் தலைவர், சிவபெருமான், அவருடைய நாதம் என்கிற முரசைக்கொட்டி முழக்குங்கள்,
பெருமை நிறைந்த காளையின் மீது ஏறிவரும் நம் தலைவர், அவருக்கு நிலாபோன்ற வெண்கொற்றக்குடையைப் பிடியுங்கள்,
போருக்குச் செல்லப் பாதுகாப்புக் கவசமாக, நன்மைதரும் திருநீறு பூசிக்கொள்ளுங்கள்.
மாயப்படை எதிரில் வந்து தாக்காமல் நாம் முன்னேறுவோம், வானம் என்கிற ஊரைக் கைப்பற்றுவோம், அருள்வாழ்வு வாழ்வோம்.
*
தொண்டர்களே, மாயத்துக்கு எதிரான போரில் நீங்கள்தான் காலாட்படை, முன்னேறி வாருங்கள்,
பக்தர்களே, நீங்கள் அந்தத் தொண்டர் படையினரைச் சுற்றி நடந்துவாருங்கள்,
நுண்ணறிவு கொண்ட யோகிகளே, நீங்கள் பேரணியாக வாருங்கள்,
உறுதியான ஆற்றல் கொண்ட சித்தர்களே, நீங்கள் கூழை என்கிற பின் அணியாக நடந்துவாருங்கள்,
நாம் எல்லாரும் இவ்வாறு படையெடுத்துச் சென்று, வானவர் நாட்டைக் கைப்பற்றுவோம், சிவபெருமான் அருளால் துன்பம் என்கிற படையை வெல்வோம், அருள்வாழ்வு வாழ்வோம்.
சொல்லின்பம்
ஐயர்: தலைவர்
பறைஅறைமின்: பறையறையுங்கள்
மான மா: பெருமைமிக்க காளை
மதி: சந்திரன்
குடைகவிமின்: குடைபிடியுங்கள்
ஆன நீற்றுக் கவசம்: நன்மை தரும் திருநீறு என்கிற கவசம்
புகுமின்கள்: புகுந்துவாருங்கள்
தொண்டர்காள்: தொண்டர்களே
தூசி: காலாட்படை
பத்தர்காள்: பக்தர்களே
ஒண்திறல்: நுண்ணறிவு
உந்தீர்கள்: முன்னே செலுத்துங்கள்
திண்திறல்: வலிமைத்திறன்
கடைக்கூழை: பின்னே வரும் கூழை என்கிற படை
செல்மின்கள்: செல்லுங்கள்
அண்டர்நாடு: தேவர்களின் நாடு/ வானவுலகம்
அல்லல்படை: துன்பம் என்கிற படை