பகுதி 47 – திருவெண்பா - 1
திருப்பெருந்துறையில் அருளப்பட்ட பாடல்கள் இவை. பதினொரு பாடல்களின் தொகுப்பு.
சிவபெருமானைப் பற்றிய வெண்பாக்களைக் கொண்ட பகுதி இது.
திருப்பெருந்துறையில் அருளப்பட்ட பாடல்கள் இவை. பதினொரு பாடல்களின் தொகுப்பு.
252
பாடலின்பம்
வெய்ய வினைஇரண்டும் வெந்துஅகல மெய்உருகிப்
பொய்யும் பொடிஆகாது என்செய்கேன்? செய்ய
திருஆர் பெருந்துறையான் தேன்உந்து செந்தீ
மருவாது இருந்தேன் மனத்து.
*
ஆர்க்கோ, அரற்றுகோ, ஆடுகோ, பாடுகோ,
பார்க்கோ பரம்பரனே, என்செய்கேன், தீர்ப்புஅரிய
ஆனந்தமால் ஏற்றும் அத்தன், பெருந்துறையான்
தான்என்பர் ஆர்ஒருவர் தாழ்ந்து.
*
செய்த பிழையறியேன், சேவடியே கைதொழுதே
உய்யும்வகையின் உயிர்ப்புஅறியேன், வையத்(து)
இருந்து உறைஉள் வேல்மடுத்து என் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்.
பொருளின்பம்
சிவந்த, சிறப்பு நிறைந்த, தேன் சிந்துகிற, தீயைப் போன்ற திருமேனியைக் கொண்ட திருப்பெருந்துறை இறைவனை, சிவபெருமானை நான் மனத்தில் நினைக்கவில்லை,
அதனால், என்னுடைய வெம்மையான வினைகள் இரண்டும் வெந்து நீங்கவில்லை, என் உடல் உருகவில்லை, பொய்யான எண்ணங்கள் பொடிப்பொடியாகவில்லை, நான் என்செய்வேன்!
*
பரம்பொருளே,
நான் இப்போது என்ன செய்வது? ஆரவாரம் செய்வதா? அரற்றுவதா? ஆடுவதா? பாடுவதா? பார்ப்பதா?
'தீர்க்க இயலாத ஆனந்த மயக்கத்தை உண்டாக்குகிற நம் தந்தை, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் இவன்தான்' என்று உன்னை எனக்குக் காட்டுபவர்கள் யார்?
*
நான் என்ன பிழை செய்தேன்? எனக்குத் தெரியவில்லை!
திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் பிரான் இந்தப் பூமிக்கு வந்து, தன்னுடைய உறையிலிருந்து ஞானவேலை எடுத்து என்னுடைய நெஞ்சில் அழுத்தினான், ஆனால் அப்போதும், சிவபெருமானின் சிவந்த திருவடிகளை வணங்கியபடி பிழைக்கும் உயிர்த்துடிப்பு எனக்குள் எழவில்லையே, நான் என்ன செய்வேன்?
சொல்லின்பம்
வெய்ய: வெம்மையான
மெய்: உடல்
என்செய்கேன்: என்ன செய்வேன்
செய்ய: சிவந்த
திரு ஆர்: சிறப்பு நிறைந்த
தேன் உந்து செந்தீ: தேன் சிந்துகிற, சிவந்த நெருப்பு போன்ற
மருவாது: அணைக்காது
ஆர்க்கோ: ஆரவாரம் செய்வேனா
அரற்றுகோ: அரற்றுவேனா
ஆடுகோ: ஆடுவேனா
பாடுகோ: பாடுவேனா
பார்க்கோ: பார்ப்பேனா
தீர்ப்புஅரிய: தீர்க்க இயலாத
ஆனந்த மால்: ஆனந்த மயக்கம்
அத்தன்: தந்தை
சேவடி: சிவந்த திருவடி
உய்யும்வகை: பிழைக்கும்வகை
வையத்து: உலகத்தில்
வேல்மடுத்து: ஞானவேலை அழுத்தி
பெருந்துறையில் மேய பிரான்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் தலைவன்