பகுதி 47 – திருவெண்பா - 3
எம்பெருமான், நம் தந்தை, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்,
சிவபெருமானைப் பற்றிய வெண்பாக்களைக் கொண்ட பகுதி இது.
திருப்பெருந்துறையில் அருளப்பட்ட பாடல்கள் இவை. பதினொரு பாடல்களின் தொகுப்பு.
254
பாடலின்பம்
பித்துஎன்னை ஏற்றும், பிறப்புஅறுக்கும், பேச்சுஅரிதாம்,
மத்தமேஆக்கும் வந்து என் மனத்தை, அத்தன்,
பெருந்துறையான், ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்து, இறவாப்பேரின்பம் வந்து.
*
வாராவழி அருளி, வந்து எனக்கு மாறுஇன்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே, சீர்ஆர்
திருத்தென்பெருந்துறையான், என் சிந்தைமேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி.
பொருளின்பம்
எம்பெருமான், நம் தந்தை, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான், நம்மை ஆட்கொண்டு பேரருளோடு பார்க்கும் மருந்து, குறையில்லாத பேரின்பம், அவன் நேரில் வந்து, என் மனத்தில் புகுந்து என்னைப் பித்தனாக்கினான், என்னுடைய பிறவிச்சுழலை அறுத்தான், பேசாத உன்மத்த நிலைக்கு ஆளாக்கினான்.
*
சிறப்பு நிறைந்த, அழகிய, தென்திசையில் உள்ள திருப்பெருந்துறையில் எழுந்தருளியவன், என்னுடைய சிந்தனையிலும் எழுந்தருளிய தனித்துவமானவன், அந்தச் சிவபெருமான் எனக்குள் பெருக்கிய ஒளி, நான் மீண்டும் பிறக்காத நிலையை அருளியது, வேறுபாடற்ற தன்மையோடு வந்து கலந்து, எனக்குத் தெவிட்டாத அமுதமாகவும் ஆனது.
சொல்லின்பம்
பேச்சு அரிதாம் மத்தம்: பேச்சு குறைந்த உன்மத்த நிலை
அத்தன்: தந்தை
இறவாப் பேரின்பம்: குறையாத பேரின்பம்
வாராவழி: பிறவாத நிலை
ஆரா அமுது: தெவிட்டாத அமுதம்
சீர் ஆர் திருத்தென்பெருந்துறையான்: சிறப்பு நிறைந்த, அழகிய, தென்திசையில் உள்ள திருப்பெருந்துறையில் எழுந்தருளியவன் / சிவபெருமான்
மேய: எழுந்தருளிய
ஒருத்தன்: தனித்துவமானவன்