முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 47 – திருவெண்பா - 4

அனைத்துத் தெய்வங்களுக்கும் மேலானவன் சிவபெருமான், அளவில்லாத சிறப்புகளை உடையவன்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:10 PM
பகிர்:

சிவபெருமானைப் பற்றிய வெண்பாக்களைக் கொண்ட பகுதி இது.

திருப்பெருந்துறையில் அருளப்பட்ட பாடல்கள் இவை. பதினொரு பாடல்களின் தொகுப்பு.

255

பாடலின்பம்

யாவர்க்கும் மேலாம் அளவுஇலாச் சீர்உடையான்

யாவர்க்கும் கீழாம் அடியேனை, யாவரும்

பெற்றுஅறியா இன்பத்துள் வைத்தாய்க்கு என் எம்பெருமான்

மற்றுஅறியேன் செய்யும் வகை.

*

மூவரும் முப்பத்து மூவரும் மற்றுஒழிந்த

தேவரும் காணாச் சிவபெருமான், மாஏறி

வையகத்தே வந்துஇழிந்த வார்கழல்கள் வந்திக்க

மெய்அகத்தே இன்பம் மிகும்.

பொருளின்பம்

அனைத்துத் தெய்வங்களுக்கும் மேலானவன் சிவபெருமான், அளவில்லாத சிறப்புகளை உடையவன்,

நானோ, அனைவருக்கும் கீழானவன். எனினும், என்னை அவன் ஏற்றுக்கொண்டு அருள்செய்தான், இதுவரை யாரும் பெற்று அறியாத இன்பநிலைக்குள் என்னை வைத்தான்,

எம்பெருமானே, இப்படி எனக்கு அருள்செய்த உனக்கு நான் என்ன செய்யப்போகிறேன்? எனக்குத் தெரியவில்லையே!

*

மும்மூர்த்திகள், முப்பத்து மூன்று தேவர்கள், மற்ற தேவர்கள் என யாராலும் காண இயலாத சிறப்பைக்கொண்டவன் சிவபெருமான்,

நமக்காக அவன் குதிரையின்மீது ஏறி இந்த உலகத்துக்கு வந்தான், அவனது திருவடிகளை வணங்கினால், நம் உடலுக்குள் இன்பம் பெருகும்.

சொல்லின்பம்

சீர்: சிறப்பு

மற்று அறியேன் செய்யும் வகை: வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை

மா: குதிரை

வார்கழல்கள்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம் / இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

வந்திக்க: போற்ற

மெய் அகத்தே: உடலினுள்

முழு கட்டுரையைப் படிக்க →