பகுதி - 199
இந்த உடலெடுத்ததன் பயன், விதவிதமான போகங்களை அனுபவித்தாலும், எல்லாம் போக இறுதியிலே ஒருபிடி சாம்பலாகத்தானே போகப் போகிறது. இந்த உடலைச் சுமந்ததன் உண்மையான பயனைப் பெற வேண்டாமோ? அதற்கு நீ துணைநிற்க வேண்டும்.
பதச் சேதம் | சொற் பொருள் |
தினமணி சார்ங்கபாணி என மதிள் நீண்டு சால தினகரன் ஏய்ந்த மாளிகையில் ஆரம் Advertisement
| தினமணி: கதிரவன்; சார்ங்க பாணி: (பாணி: கை), சார்ங்கம் என்ற வில்லைக் கையில் பிடித்த திருமால்; மதிள்: மதில்; தினகரன்: கதிரவன்; ஏய்ந்த: பொருந்தி இருக்கும்; ஆரம்: முத்து; |
செழு மணி சேர்ந்த பீடிகையில் இசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட இருபாலும்
| செழுமணி: செழுமையான ரத்தினம்; பீடிகை: பீடம்; வயிரியர்: பாணர்கள்; இருபாலும்: இரண்டு பக்கங்களிலும்; |
இன வளை பூண் கையார் கவரி இட வேய்ந்து மாலை புழுகு அகில் சாந்து பூசி அரசாகி
| இனவளை: ஒரே மாதிரியான வளையல்; பூண்கையார்: பூண்ட கையை உடைய பெண்கள்; வேய்ந்து மாலை: மாலையைச் சூட்டிக் கொண்டு; புழுகு: புனுகு; சாந்து: சந்தனம்; |
இனிது இறுமாந்து வாழும் இரு வினை நீண்ட காயம் ஒரு பிடி சாம்பலாகி விடலாமோ
| இறுமாந்து: பெருமிதம் கொண்டு; காயம்: உடல்; |
வனசரர் ஏங்க வான முகடு அற ஓங்கி ஆசை மயிலொடு பாங்கிமார்கள் அருகாக
| வனசரர்: வனத்தில் திரிபவர்கள், வேடர்கள்; ஏங்க: (ஆச்சரியத்தால்) ஆரவாரிக்க; முகடு: உச்சி; ஆசை மயில்: ஆசையாய் வளர்த்த மயில்—வள்ளி; பாங்கிமார்கள்: தோழியர்; |
மயிலொடு மான்கள் சூழ வள வரி வேங்கையாகி மலை மிசை தோன்று(ம்) மாய வடிவோனே
| வளவரி: செழித்து உயர்ந்த; வேங்கை: வேங்கை மரம்; மலைமிசை: வள்ளிமலையின் மேலே; |
கன சமண் மூங்கர் கோடி கழு மிசை தூங்க நீறு கருணை கொள் பாண்டி நாடு பெற
| மூங்கர்: ஊமையர்; தூங்க: தொங்க; நீறு: திருநீறு; |
வேத கவி தரு காந்த பால கழுமல பூந்தராய் கவுணியர் வேந்த தேவர் பெருமாளே.
| வேத கவி: வேதங்களே அனைய தேவாரப் பாடல்; காந்த: ஒளி நிறைந்த; பால: ஞானசம்பந்தராய் அவதரித்த குழந்தையே; கவுணிய: கவுணியர் குலத்தவனே; |

தினமணி சார்ங்க பாணி யென ... சூரியன் என்றும்; சார்ங்கம் என்ற வில்லைக் கையில் ஏந்திய திருமால் என்றும் (பிறர் புகழ்ந்து பேசும்படி);

மதிள் நீண்டு சால தினகரன் ஏய்ந்த மாளிகையில் ...நீண்டு உயர்ந்த மதில்களைக் கொண்ட; சூரியன் வந்து பொருந்தும்படியாக (தங்கும்படியாக) உயர்ந்திருக்கும் மாளிகையில்,

ஆரஞ் செழுமணி சேர்ந்த பீடிகையில் ... முத்தும் செழுமையான ரத்தினக் கற்களும் பதிக்கப்பட்ட பீடத்தில் (அமர்ந்து),

இசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட ... பண் நிறைந்த போற்றிப் பாடல்களைப் பாணர்கள் ஒன்றாகச் சேர்ந்து பாடவும்;

இருபாலும் இனவளை பூண்கையார்க வரியிட ... இரண்டு பக்கங்களிலும் (அளவும் வடிவமும் ஒத்த) வளையல்களை அணிந்த பெண்கள் கவரி வீசவும்;

வேய்ந்து மாலை புழுககில் சாந்து பூசி ... மாலைகளைச் சூட்டிக்கொண்டும்; புனுகு, அகில், சந்தனம் ஆகியவற்றைப் பூசிக்கொண்டும்;

அரசாகி ... அரசனாக விளங்கி;

இனிதிறுமாந்து வாழும் ... பெருமிதத்துடன் இனிதே வாழ்கின்ற,

இருவினை நீண்ட காயம் ... நல்வினை, தீவினைகளால் பிணிக்கப்படுவதான இந்தப் பெரிய உடலானது,

ஒருபிடி சாம்ப லாகி விடலாமோ ... (இறுதியில், எரிக்கப்பட்டு) ஒருபிடி சாம்பலாகிப் போகலாமோ?

(இந்த உடலெடுத்ததன் பயன், விதவிதமான போகங்களை அனுபவித்தாலும், எல்லாம் போக இறுதியிலே ஒருபிடி சாம்பலாகத்தானே போகப் போகிறது. இந்த உடலைச் சுமந்ததன் உண்மையான பயனைப் பெற வேண்டாமோ? அதற்கு நீ துணைநிற்க வேண்டும்.)

வனசரர் ஏங்க வான முகடுற வோங்கி ... காட்டில் திரிபவர்களான வேடர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டு ஆரவாரிக்கும்படி, வானத்தின் உச்சியைத் தொடும்படியாக உயர்ந்திருப்பதும்;

ஆசை மயிலொடு பாங்கிமார்கள் அருகாக ... வேடர்கள் ஆசையாக வளர்த்த மயிலான வள்ளிப் பிராட்டியும் தோழியரும் அருகே இருக்க;

மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி ... மயில்களும் மான்களும் சூழ்ந்திருக்கும்படி, செழித்து வளர்ந்த வேங்கை மரமாக

மலைமிசை தோன்று மாய வடிவோனே ... (வனசரர் ஏங்க.. என்பதிலுள்ள ‘வானத்தின் உச்சியைத் தொடும்படி உயர்ந்திருக்கும்’ என்பதை இங்கே கூட்டவும்) வானத்தின் உச்சியைத் தொடும்படி உயர்ந்திருக்கும் வள்ளிமலையின் மேலே, (வேங்கை மரமாகத்) தோன்றிய மாய வடிவத்தை உடையவனே!

கனசமண் மூங்கர் கோடி ... மிகுதியான சமண ஊமையர்கள் பற்பலரும்

(வாதிலே தோற்றவர்கள் என்பதால், ஊமையர்கள் என்றார். ஊமையர் வாதிட்டால் என்ன, வாதிடாவிட்டால்தான் என்ன!)

கழுமிசை தூங்க ... (வாதத்திலே தோற்றுப்போய்) கழுமரத்தின் முனையிலே தொங்க,

நீறு கருணைகொள் பாண்டி நாடு பெற ... திருநீறானது, உன்னுடைய கருணைக்குப் பாத்திரமான பாண்டிநாட்டிலே பரவ (சைவம் தழைக்க),

வேதக் கவிதரு காந்த ... வேதங்களே ஒத்த தேவாரப் பண்ணைப் பாடியருளிய ஒளிபடைத்த மேனியை உடைய

பால கழுமல பூந்த ராய ... பாலகனான திருஞானசம்பந்தராக அவதரித்தவனே! கழுமலம், பூந்தராய் என்ற பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியில் வீற்றிருப்பவனே!

கவுணியர் வேந்த தேவர்பெருமாளே. ...கவுணியர் குலத்தின் அரசன் (எனும்படி அவதரித்தவனே), தேவர்களுடைய பெருமாளே!

சுருக்க உரை

காட்டில் திரியும் வேடர்கள் ஆச்சரியத்துடன் ஆரவாரிக்கும்படி வானத்தின் உச்சியைத் தொடுமாறு உயர்ந்து நிற்கும் வள்ளிமலையில், அவர்கள் ஆசையாய் வளர்த்த வள்ளியான மயிலும்; அவளுடைய தோழிமாரும்; இதர மயில்களும் மான்களும் சூழ்ந்து நிற்கும்படி செழித்து உயர்ந்த வேங்கை மரமாகி நின்ற மாயத்தில் வல்லவனே! வாதில் தோற்ற சமணர்கள் கழுவில் ஏறவும், உன் அருளுக்குப் பாத்திரமான பாண்டிய நாட்டிலே சைவம் தழைத்தோங்கவும், வேதத்தை ஒத்த தேவாரப் பண்களைப் பாடியருளியவரும்; கவுணியர் குலத்தின் வேந்தன் எனப்படும்படியானவருமான திருஞான சம்பந்தராக வந்து அவதரித்தவனே! கழுமலம், பூந்தராய் என்ற பெயர்களை உடைய சீகாழித் திருத்தலத்தில் வீற்றிருப்பவனே! தேவர் பெருமாளே!

சூரியன் வந்து பொருந்தும் அளவுக்கு உயர்ந்த மதில்களை உடைய மாளிகையில், முத்தும் ரத்தினமும் பதிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்துகொண்டு; இருபுறங்களிலும் வளைகளை அணிந்த பெண்கள் கவரி வீச; பாணர்கள் இசையோடு கூடிய பாடல்களால், ‘இவர் சூரியனோ, சார்ங்கம் என்ற வில்லை ஏந்திய திருமாலோ’ என்று போற்றிப் பாடல்களைப் பாட, அதைக் கேட்டவண்ணம் பெருமிதம் கொண்டும்; புனுகு, அகில் சந்தனம் முதலிய வாசனைப் பொருட்களைப் பூசிக்கொண்டும் (அனுபவித்த), வினைகளுக்கு இடமான இந்த பாரமான உடல் (சுமந்ததன் பயனைப் பெறாமல் வீணே) சுடுகாட்டில் எரிந்து ஒருபிடி சாம்பலாகப் போய்விடலாமோ? (இதற்காகவா இதைச் சுமக்கிறேன்? உடலைச் சுமப்பது, உன்னடியில் அடைக்கலம் புகும் உண்மைப் பயனையடைவதற்கல்லவா? அதைப் பெற அருளவேண்டும்.)