பகுதி - 202
இன்றைய பாடல் உத்தரமேரூர் தலத்துக்கானது. பல தலங்களுடைய பெயர்க் காரணத்தைத் திருப்புகழாலே அறிகிறோம். உத்தர என்றால் வடக்கு. மேரூர் என்றால் மேரு ஊர் என்று பிரிந்து வடக்கேயுள்ள மேரு நகரம் எனப்
இன்றைய பாடல் உத்தரமேரூர் தலத்துக்கானது. பல தலங்களுடைய பெயர்க் காரணத்தைத் திருப்புகழாலே அறிகிறோம். உத்தர என்றால் வடக்கு. மேரூர் என்றால் மேரு ஊர் என்று பிரிந்து வடக்கேயுள்ள மேரு நகரம் எனப் பொருள்படுகிறது என்பதை இந்தப் பாடலால் அறிகிறோம். வடமேரு நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே என்று உத்தரமேரூர் பாலசுப்பிரமணிய சுவாமியை அழைக்கிறார். நான்கு திசை, ஏழு ரிஷிகள், அக்கினி மூன்று, நவநாதர் என்று வரிசையாகப் பலரின் எண்ணிக்கைகளைச் சொல்லியபடி நடக்கிறது பாடல். இவற்றின் விளக்கங்களை நாளை பொருள் சொல்லும்போது காண்போம். சிவபெருமான் அடிகளை அரியும் அயனும்தான் அறியமுடியவில்லை. முருகன் பதங்களை இவர்கள் அனைவராலும் அறியமுடியவில்லை எனச் சொல்லி, அப்படிப்பட்ட பாதங்களை நான் அறியும்படிச் செய்ய வேண்டும் என வேண்டுகிறார். இறுதிச் சீரின் மூன்றாம் எழுத்து மட்டுமே நெடில், மற்ற அனைத்தெழுத்துகளுமே குறில். அடிக்கு முப்பத்துநான்கு எழுத்துகள். இப்போது பாடலைப் பார்ப்போம்.
தனன தனன தனதான தனன தனன தனதான
தனன தனன தனதான தனதான
சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள்
துகளி லிருடி யெழுபேர்கள் சுடர்மூவர்
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
தொலைவி லுடுவி னுலகோர்கள் மறையோர்கள்
அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி
அரியு மயனு மொருகோடி யிவர்கூடி
அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
அறிவு ளறிவு மறிவூற அருள்வாயே
வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக
மகர சலதி அளறாக முதுசூரும்
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
மவுலி சிதறி இரைதேடி வருநாய்கள்
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிக ளலைமோத
நமனும் வெருவி யடிபேண மயிலேறி
நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு
நகரி யுறையு மிமையோர்கள் பெருமாளே.
Advertisement
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/257410040&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p><p align="justify"> </p>