பகுதி - 208
திருவண்ணாமலைத் தலத்துக்கான திருப்புகழ் இது. ‘விக்ரம துட்டிகள்’, ‘துர்ச்சன பொட்டிகள்’, ‘செகத்து நீலிகள்’, ‘பப்பர மட்டைகள்’ என்று விசித்திரமான சொற்களை....
திருவண்ணாமலைத் தலத்துக்கான திருப்புகழ் இது. ‘விக்ரம துட்டிகள்’, ‘துர்ச்சன பொட்டிகள்’, ‘செகத்து நீலிகள்’, ‘பப்பர மட்டைகள்’ என்று விசித்திரமான சொற்களை அடுக்கிக்கொண்டே போகிறார். நீலி என்பது பொதுவாக உமையம்மையைக் குறிக்கும் பெயர். “மகிடன் தலைமேல் அந்தரி, நீலி, அழியாத கன்னிகை” என்று அபிராமி பட்டர் அம்பிகையைப் பாடுகிறார். இருப்பினும், ‘இந்த நீலித்தனமெல்லாம் எதுக்கு’ என்றும் ‘அதென்ன திருவாலங்காட்டு நீலித்தனம்’ என்றும் இன்னும் பலவிதங்களிலும் ‘நீலி’ என்ற பெயர் பழிப்பதற்கு உரிய பெயராக வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.
ஒருவன் தன் மனைவியின் கற்பின்மீது சந்தேகம் கொண்டு அவளைக் கொன்றுவிட்டான். அடுத்த பிறவியில் திருவாலங்காட்டில் ஒரு செட்டி மகனாகப் பிறந்து, ஒரு பெண்ணை மணந்து, கர்ப்பமாக இருக்கும் அவளைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில், போனபிறவியில் இவனுடைய மனைவியின் பிரமஹத்தி, இந்தப் பிறவியில் இவனுடைய மனைவியின் வடிவத்தில் வந்து, ‘உங்களைப் பிரிந்திருக்க முடியாமல் கிளம்பி வந்துவிட்டேன்’ என்று சொல்ல, அவன் ‘நீ என் மனைவியில்லை’ என்று மறுக்க, இது திருவாலங்காட்டுப் பழையனூர் வேளாளர்கள் முன்பு வழக்காக வந்தது. அவர்கள் முன்னிலையில் அந்த பிரமஹத்தி, ‘நான் இவருடைய மனைவிதான். இன்றொரு இரவுமட்டும் இவரோடு தங்க விரும்புகிறேன்’ என்று சொல்ல, வேளாளர்கள், ‘அப்படியே தங்கட்டும். பயப்படவேண்டாம். உன் உயிருக்கு ஏதேனும் ஆயிற்றென்றால் நாங்கள் எழுபதுபேரும் எங்கள் உயிரைக் கொடுப்போம்’ என்று உறுதிசொன்னார்கள். பொழுது விடிந்தது. அந்தப் பெண்ணைக் காணவில்லை. இவன் கிழிபட்டு இறந்துகிடந்தான். வேளாளர்கள் எழுபது பேரும் தாங்கள் சொன்னபடியே உயிரை விட்டார்கள். இந்தக் கதைக் குறிப்பை சம்பந்தர் தன்னுடைய திருவாலங்காட்டு தேவாரத்தில்,
துஞ்சவருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
Advertisement
நெஞ்சம்புகுந்தென்னை நினைவிப்பாரு முனைநட்பாய்
வஞ்சப்படுத்தொருத்தி வாணாள்கொள்ளும் வகைகேட்
டஞ்சும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.
‘முற்பிறவியில் நட்பாய் இருப்பதுபோலக் காட்டித்தன்னை வஞ்சனை செய்து கொன்ற கணவனை மறுபிறப்பில் அடைந்து அவனது வாழ்நாளைக் கவர்ந்த பெண்ணின் செயலுக்குத் துணைபோன வேளாளர்கள் அஞ்சி உயிர்த்தியாகம் செய்த திருவாலங்காட்டில் உறையும் எம் அடிகள்’ என்பது பின்னிரண்டு அடிகளுக்கான பொருள். நீலி என்பதற்கு வேடம் தரித்து வஞ்சனையுடன் கொல்லும், பழிவாங்கும் பெண் என்பதும் பொருள் என்பதற்காக இதைச் சொல்லப் புகுந்தோம்.
முற்றிலும் வல்லொற்றுகளாலேயே அமைந்துள்ள இப்பாடலில், அடிக்கு (ஒற்றுநீக்கி) நாற்பது எழுத்துகள். பொருளை நாளைக்குக் காண்போம்.
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன தனதான
திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்
மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்
செகத்து நீலிகள் கெட்டப ரத்தைகள் மிகநாணார்
சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிக
ளெடுப்பு மார்பிக ளெச்சிலு தட்டிகள்
சிரித்து மாநுடர் சித்தமு ருக்கிகள் விழியாலே
வெருட்டி மேல்விழு பப்பர மட்டைகள்
மிகுத்த பாவிகள் வட்டமு கத்தினை
மினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணி மிகநீறால்
விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள்
தமக்கு மால்கொடு நிற்கும ருட்டனை
விடுத்து நானொரு மித்திரு பொற்கழல் பணிவேனோ
தரித்த தோகன தக்கண செக்கண
குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
தகுத்த தீதிகு தக்குகு திக்குகு எனதாளந்
தடக்கை தாளமு மிட்டியல் மத்தள
மிடக்கை தாளமு மொக்கந டித்தொளி
தரித்த கூளிகள் தத்திமி தித்தென கணபூதம்
அருக்க னாரொளி யிற்ப்ரபை யுற்றிடு
மிரத்த மாமுடி யைக்கொடு கக்கழ
லடக்கை யாடிநி ணத்தையெ டுத்துண அறவேதான்
அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறி
திருக்கை வேல்தனை விட்டரு ளிப்பொரும்
அருட்கு காவரு ணைப்பதி யுற்றருள் பெருமாளே.
</p><p align="justify"></p><p align="justify"></p><p align="justify"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/258430550&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>