பகுதி - 397
வியாச முனிவர் திருவடிகளை
பதச் சேதம் | சொற் பொருள் |
வதை பழகு அ(ம்) மறலி விறல் மதனன் வழி படுதும் என வயிரம் மரகத மகரம் அளவாக Advertisement
| வதைபழகு: வதைக்கின்ற தொழிலைப் பழகும்; அ(ம்) மறலி: அந்த யமனும்; விறல்: வலிமை, வெற்றி; மரகத மகர: மரகதத்தால் ஆன மீன்போன்ற; அளவாக: (குழையை அணிந்த) காதுவரையில் (நீண்டு); |
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலக விழி வளை இளைஞர் உயிர் கவர வரும் மாய
| வரி சிதறி: ரேகைகள் பரவி; விடமளவி: விஷம் கலந்து; வளை இளைஞர்: வளைக்கப்பட்ட இளைஞர்; |
இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறி ஒழுகி எழு பிறவி நெறி ஒழிய வழி காணா
| இதையம்: இதயம்; எழுபிறவி: எழுவதான பிறவி, எடுத்த பிறவி; |
இடர்கள் படு குருடன் எனை அடிமை கொள மகிழ்வோடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே
|
|
பதயுகளம் மலர் தொழுது பழுது இல் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா முப்
| பதயுகளம்: இரண்டு திருவடிகள்; யுகளம்: இரண்டு; இடா: இட்டு; |
பழமும் இனிது உதவி முனி பகர வட சிகரி மிசை பரிய தனி எயிறு கொண்டு குரு நாடர்
| முனி: வியாசர்; வடசிகரி: வடக்கிலுள்ள மேரு மலை; பரிய: பெரிய; தனி எயிறு: ஒற்றைத் தந்தத்தால்; குருநாடர்: குருவம்சத்தவர்களுடைய; |
கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதி வேக
|
|
கலப கக(ம்) மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே.
| கலப: தோகை; கக(ம்): பறவை; நிருதர்: அசுரர்; கஜ: யானை; ரத: தேர்; துரக(ம்): குதிரை; கடகம்: காலாட்படை; |
வதை பழக மறலிவிறல் மதனன்வழி படுதும் என... வதைக்கும் தொழிலில் தேர்ந்தவனாகிய யமனும்; வெற்றி வாய்ந்த மன்மதனும் (கொல்லும் தொழிலைக் கற்பதற்காக) ‘உங்களை வழிபடுவோம்’ என்று சொல்லிக்கொண்டு வணங்குவதான;
வயிர மரகத மகரம் அளவாக வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலகவிழி... வைரத்தாலும் மரகதத்தாலும் செய்யப்பட்ட மகரமீன் போன்ற குண்டலங்களை அணிந்த காதளவுக்க நீண்டதும்; காமப் போருக்குச் சித்தமானதுமான இரண்டு விழிகளாலே;
வளை இளைஞர் உயிர் கவர வரு மாய... இளைஞர்களை வளைத்து அவர்களுடைய உயிரைக் கவர்வதற்காக வருகின்ற மாயக்காரிகள்;
இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறியொழுகி... ‘இதயம் இத்தகையது’ என்று அளவிட முடியாத பெண்கள் ஆகியோரின் வழியைப் பின்பற்றி;
எழுபிறவி நெறி ஒழிய வழிகாணா இடர்கள்படு குருடன் எனை அடிமைகொள... எடுத்த பிறவிக்கு உரிய நெறியைக் கைவிட்டு; இதிலிருந்து மீள்வதற்கான வழியைக் காணமுடியாமல் துன்பப்படுகின்ற குருடனாகிய என்னை,
மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே... மகிழ்ச்சி கொண்டு உன்னுடைய இருவிழிகளால் பார்த்து, கருணையைச் சற்றேனும் அருளவேண்டும்.
பதயுகள மலர்தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா... இரண்டு திருவடிகளையும் மலர்கொண்டு வணங்கி; குற்றமற்ற பொரி, அவல், துவரை, பயறு போன்றவற்றை பெருவயிறு நிரம்பும்படியாக அளித்து;
முப்பழமும் இனிது உதவி முனி பகர வட சிகரிமிசை பரிய தனி எயிறு கொடு... முக்கனிகளை அன்போடு படைத்து; வியாச முனிவர் சொல்லச்சொல்ல வடமேரு மலையில் தன்னுடைய பெரிய ஒற்றைக் கொம்பால்,
குருநாடர் கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட... குரு தேசத்தவரான பாண்டவர், கௌரவர்களின் கதையான மகாபாரதத்தை எழுதிய ஒப்பற்ற யானையான விநாயகர் பிளிறிடும்படியாக;
நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதிவேகக் கலப கக மயில் கடவி... நீண்ட கடல் சூழ்ந்த இந்த உலகத்தை ஒரு நொடிப்போதிலிலே வலம் வந்த; அதிவேகமான தோகையையுடைய மயிலைச் செலுத்தியும்;
நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே.... அசுரர்களுடைய ரத, கஜ, துரக, பதாதியான நாற்படைகளுடனும் போர்புரிந்த பெருமாளே!
சுருக்க உரை
வியாச முனிவர் திருவடிகளை மலர்கொண்டு பூசித்து, பொரி, அவல், துவரை, பயறு முதலானவற்றைப் பெருவயிறு நிரம்ப அளித்து; முக்கனிகளையும் படைத்து; அவர் சொல்லச் சொல்ல குருநாட்டவர்களான பாண்டவ, கௌரவர்களின் கதையான மகாபாரதத்தை வடமேரு மலையில் எழுதிய யானையான கணநாதர் பிளிறிடும்படியாக,
நீண்ட கடலால் சூழப்பட்ட உலகத்தை ஒருநொடியில் வலம் வந்த, அதிவேகமான தோகை மயிலைச் செலுத்தி; அரக்கர்களுடைய நால்வகைப் படைகளோடும் போரிட்ட பெருமாளே!
வதைக்கும் தொழிலை நன்கு பழகிய யமனும்; வெற்றியே நிறைந்த மன்மதனும்கூட, ‘நாங்கள் உங்களிடத்திலே தொழில் பழகவேண்டும்’ என்று வழிபட்டு வணங்கக்கூடியதும்; வைரத்தாலும் மரகதத்தாலும் ஆகிய மகர குண்டலங்கள் ஆடும் காதளவுக்கு நீண்டதும்; செவ்வரி ஓடியதும்; விஷம் கலந்ததுமான இரண்டு விழிகளைக் கொண்டு இளைஞர்களை வளைத்துப் போட்டு அவர்களுடைய உயிரைக் கொள்ளைகொள்ளும் மாயம்வல்ல பெண்களுடைய வழியையே மேற்கொண்டும்; இந்தப் பிறவி எடுத்ததற்கான நெறியைக் கைவிட்டும் துன்பங்களை அடைகின்ற குருடனான அடியேன்மேல் உன்னுடைய மகிழ்ச்சி நிறைந்த இரண்டு கண்களாலும் கடாட்சித்து கருணை புரிந்தருள வேண்டும்.