முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 409

குப்பைக்குச் சமமான இந்த உடலைச் சுமந்து

Updated On : 14 நவம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:11 AM

பதச் சேதம்

சொற் பொருள்

கொக்குக்கு ஒக்க தலையில் பற்று சிக்கத்து அளக கொத்து உற்று உக்கு பிணி உற்றவனாகி

Advertisement

 

கொக்குக்கு ஒக்க: கொக்கைப் போல வெள்ளையாக (நரைத்து); தலையில் பற்று: தலையில் பற்றிக் கொண்டுள்ள; சிக்கத்து: (சிக்கம்+அத்து) சிக்கம்=குடுமி, குடுமியில்; அளகக் கொத்து: மயிர்த் திரட்சி; உக்கு: உதிர்ந்து;

குக்கி கக்கி கடையில் பல் தத்து உற்று கழல கொத்தை சொல் கற்று உலகில் பல பாஷை

 

குக்கி: இருமி (குக்கல்: இருமல்); கக்கி: வாந்தியெடுத்து; கடையில்: கடைசியில்; பல் தத்து உற்று: பல் ஆட்டம் கண்டு; கழல: உதிர; கொத்தைச் சொல்: இழிவான சொல்;

திக்கி திக்கி குளறி செப்பி தப்பி கெடு பொய் செற்றை சட்டை குடிலை சுமை பேணும்

 

செப்பி: சொல்லி; தப்பி: தவறான (பாதையை) மேற்கொண்டு; கெடு: கெடுகின்ற; செற்றை: செத்தை, குப்பை; குடிலை: உடலை;

சிக்கு உட்கு கருணை சுத்த சித்தி தமிழை திட்டத்துக்கு புகல பெறுவேனோ

 

சிக்கு: சிக்கல், தடை; உட்கு: ஒழிந்து; திட்டத்துக்கு: திடமாக, செவ்வையாக;

அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டி கிட்டி இட்டு எதிரிட்ட அத்ரத்து எற்றி கடுக பொரு சூரன்

 

அக்கிட்டு இக்கிட்டு: அங்கும் இங்கும்; ஒட்டி: துணிந்து; கிட்டி: நெருங்கி; அத்ரத்து எற்றி: ஆயுதத்தால் தாக்கி; கடுகப் பொரு சூரன்: விரைவாகப் போரிட்ட சூரன்;

அச்சு கெட்டு படை விட்டு அச்ச பட்டு கடலுள் புக்குப்பட்டு துருமத்து அடைவாக

 

அச்சுக் கெட்டு: உடலின் கட்டு குலைந்து; துருமத்து அடைவாக: (மா)மரத்தின் வடிவாக;

தக்கு திக்கு தறுகண் தொக்கு தொக்கு உற்றது கண் கை கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி

 

தக்குத் திக்கு: தக்குதிக்க என்று தடுமாறி; தறுகண்: அஞ்சாமை; தொக்கு: த்வக் எனப்படும் தோல், ஸ்பரிச உணர்ச்சி; தொக்குற்று: துவையலாகி; கைக்கொட்டு: கையைக் கொட்டுவது;

சத்தி குத்தி துடியில் சத்திக்க கை சமர் செய் சத்தி கச்சி குமர பெருமாளே.

 

சத்தி: சக்தியாயுதமாகிய வேல்; துடியில்: துடித்து; சத்திக்க: சப்திக்க, ஓலமிட; கைச்சமர்: முறையான போர்;

கொக்குக்கு ஒக்கத் தலையில் பற்றுச் சிக்கத்து அளகக் கொத்து உற்று உக்குப்... தலையைப் பற்றியுள்ள மயிர்த் தொகுதி கொக்கைப் போல வெளுத்தும், உதிர்ந்தும்போய்;

பிணி உற்றவனாகிக் குக்கிக் கக்கிக் கடையில் பல் தத்து உற்றுக் கழல... நோயுற்று; இருமி; வாந்தியெடுத்து; கடைசியில் பல் ஆட்டங்கண்டு உதிர்ந்துபோக;

கொத்தைச் சொல் கற்று உலகில் பல பாஷை திக்கித் திக்கிக் குளறிச் செப்பி... உலகத்தின் பல மொழிகளிலும் இழிந்த சொற்களைக் கற்றுக்கொண்டு, அதைத் திக்கித் திணறிக் குளறியபடி பேசி;

தப்பிக் கெடு பொய்ச் செற்றைச் சட்டைக் குடிலைச் சுமை பேணும் சிக்கு அற்று உட்கு... தவறான வழியை மேற்கொண்டு கெட்டுப் போகின்றதும்; பொய்மை நிறைந்ததும்; குப்பையைப் போன்றதுமான சட்டையாகிய இந்த உடலைச் சுமந்து திரிவதைப் போற்றுகின்ற சிக்கல் (துன்பம்) தீர்ந்து;

கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத் திட்டத்துக்குப் புகலப் பெறுவேனோ... கருணை நிறைந்ததும் தூய்மையானதும் நற்கதியைத் தரவல்லதுமான தமிழ்ப் பாக்களை, நான் உறுதிபெறும்படியாகச் சொல்கின்ற பேற்றை அடைவேனோ?

அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டிக் கிட்டி இட்டு எதிரிட்டு... அங்குமிங்குமாகப் பல இடங்களில் போர் செய்யத் துணிந்து; நெருங்கி வந்து எதிர்த்து;

அத்ரத்து எற்றிக் கடுகப் பொரு சூரன்... ஆயுதங்களால் தாக்கி விரைவாகப் போரிட்ட சூரன்,

அச்சுக் கெட்டுப் படை விட்டு அச்சப் பட்டுக் கடலுள் புக்குப்பட்டுத் துருமத்து அடைவாக... தன் உடற்கட்டு தளர்ந்து ஒழியவும்; ஆயுதங்களைக் கீழே போட்டும்; அச்சம் கொண்டும் கடலுக்குள்ளே புகுந்து மாமரத்தின் வடிவம் கொண்டு நிற்க;

தக்குத் திக்குத் தறுகண் தொக்குத் தொக்கு உற்றது கண்... (இருந்த) வீரமெல்லாம் ‘தக்குத் திக்கென்று’ தடுமாறிச் சிதற; கண்ணும், தொடு உணர்ச்சி முதலான மற்ற புலன்களும் துகையாலாகிப் போய்;

கைக் கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி... கைகளைக் கொட்டிக் கொண்டு ஆரவாரத்தோடு உடல்மட்டும் சில கணங்களுக்கு ஆட்டம் போட;

சத்திக் குத்தித் துடியில் சத்திக்கக் கைச் சமர் செய்... சக்தியாயுதமான வேற்படையால் குத்திய வலியால் அந்தச் சூரன் வலியால் துடித்து ஓலமிடும்படியாக முறையான போரைச் செய்தவனே!

சத்திக் கச்சிக் குமரப் பெருமாளே.... சக்திவேலைத் தாங்கியுள்ளவனும், காஞ்சியில் எழுந்தருளியிருப்பவனுமான குமரப் பெருமாளே!

சுருக்க உரை

அங்குமிங்குமாகப் பல இடங்களுக்கு விரைந்தோடி, போருக்குத் துணிந்து, நெருங்கி வந்து போரிட்டும்; அஸ்திரங்களைச் செலுத்தித் தாக்கியும் வேகமாகப் போரிட்டவனான சூரன், தன் உடல் தளர்ந்து, ஆயுதங்களைக் கைவிட்டு, அச்சம் கொண்டு, கடலுள் புகுந்து மாமர வடிவமாக நிற்க, அவனுடைய வீரம் நிலைகெட்டுக் கலங்கும்படியாகவும்; கண்ணும் இதர புலன்களும் துவையலாகி அழிந்துபடவும்; அந்த நிலையிலும் கைகளைக் கொட்டிக்கொண்டு ஆரவரித்த அவனைத் தாக்கிய வேற்படை தந்த வலியால் அவன் துடிதுடித்து அலறும்படியாக முறையான போரைச் செய்தவனே!  சக்திவேலனே!  கச்சிப் பதியில் எழுந்தருளியுள்ள குமரம் பெருமாளே1

தலையைப் பற்றியுள்ள மயிர்த் தொகுதி கொக்கைப் போல வெளுத்து; நோயுற்று; இருமியும் வாந்தியெடுத்தும்; இறுதியில் பல் ஆட்டம்கண்டும் உதிர்ந்தும் போகின்ற இந்த வாழ்விலே, உலகிலுள்ள மொழிகளிலெல்லாம் உள்ள இழிவான சொற்களைக் கற்றுக்கொண்டு அவற்றையும் திக்கித் திணறிக் குழறிக் குழறிப் பேசுகின்ற, குப்பைக்குச் சமமான இந்த உடலைச் சுமந்து திரிவதைப் போற்றுகின்ற சிக்கல் அழிந்து; கருணை நிறைந்ததும்; தூய்மையானதும்; நற்கதியைத் தரவல்லதுமான தமிழில் பலபாடல்களைப் பாடும் பாக்கியத்தைப் பெறுவேனோ (அடியேன் அப்பேற்றைப் பெறுமாறு செய்தருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.