முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 411

பொழில் சூழ்ந்த திருச்செந்தூரில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே!

Updated On : 16 நவம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:13 AM

பதச் சேதம்

சொற் பொருள்

கொங்கை பணையில் செம் பொன் செறிவில் கொண்டல் குழலில் கொடிதான

Advertisement

 

பணை: பருத்த; செம்பொன்: பொன்னாலான ஆபரணங்கள்; செறிவில்: அடர்ந்து, மிகுந்து இருப்பதில்; கொண்டல்: மேகம்; குழல்: கூந்தல்;

கொன் தை கணை ஒப்ப அந்த கயலில் கொஞ்சு கிளி உற்று உறவான

 

கொன்: வலிய; தை: தைக்கின்ற; கணை: அம்பு; கயலில்: மீனை ஒத்த கண்;

சங்க தொனியில் சென்று இல் கடையில் சந்திப்பவரை சருவாதே

 

சங்கத் தொனியில்: சங்கைப் போன்ற த்வனி, குரல்; இல்கடை: வீட்டின் வெளிப்புறம்; சருவுதல்: பழகுதல், கொஞ்சிக் குலவுதல்;

சந்த படி உற்று என்றன் தலையில் சந்தம் பதம் வைத்து அருள்வாயே

 

சந்தப்படி: பேரின்ப நிலை; சந்தப் பதம்: அழகிய பாதம்;

அங்கு அப்படை விட்டு அன்றை படுகைக்கு அந்தி கடலில் கடிது ஓடா

 

அப்படை: அந்த சேனை; படுகை: நீர்நிலை—இங்கே செந்தில்; அந்திக் கடல்: சந்திக்கும் இடமாகிய கடல்; கடிது: விரைந்து; ஓடா: ஓடி, தாண்டி;

அந்தப் பொழிலில் சந்து தலை உற்று அஞ்ச பொருது உற்று ஒழியாதே

 

பொழிலில்: இடமாக இருக்கிற; சந்து: (பல பொருள் கொண்டது.  இங்கே) தூது; தலையுற்று: மேற்கொண்ட;

செம் கை கதிர் உற்று ஒன்றி அ கடலில் சென்று உற்றவர் தற் பொருள் ஆனாய்

 

செங்கைக் கதிர்: சிவந்த கிரணங்களை உடைய சூரியன்; கடலில் சென்றுற்றவர்: (இங்கே) வீரபாகு தேவர்;

சிந்தை கனிவை தந்து அ பொழிலில் செந்தில் குமர பெருமாளே.

 

 

கொங்கைப் பணையில் செம் பொன் செறிவில்... பருத்த மார்பகத்தாலும்; (அழகைக் கூட்டுகின்ற) பொன்னாலான ஆபரணங்களாலும்;

கொண்டல் குழலில் கொடிதான கொன் தைக் கணை ஒப்ப அந்தக் கயலில்... மேகத்தை ஒத்த கரிய கூந்தலாலும்; மிக்க வலிமையோடு தைக்கின்ற அம்புக்கு இணையானதும், மீன்போன்றதமான கண்களாலும்;

கொஞ்சுக் கிளி உற்று உறவான சங்கத் தொனியில் சென்று இல் கடையில் சந்திப்பவரைச் சருவாதே... (பேச்சாலே) கொஞ்சுகின்ற கிளிக்கு உறவானதும்; சங்கம்போன்று தொனியை உடைய குரலாலும் கவரப்பட்டு; தம்மைச் சந்திக்க வருபவரை வீட்டுக்கு வெளிப்புறத்தில் (புறக்கடையில்) சந்திப்பவர்களான பெண்களுடன் கொஞ்சிக் குலவிக்கொண்டிராமல்;

சந்தப் படி உற்று என்றன் தலையில் சந்தப் பதம் வைத்து அருள்வாயே... நான் பேரின்ப நிலையை அடையுமாறு எனது தலைமீது உன்னுடைய அழகிய பாதத்தை வைத்து ஆண்டுகொள்ள வேண்டும்.

அங்கு அப் படை விட்டு அன்றைப் படுகைக்கு அந்திக் கடலில் கடிது ஓடா... அந்த இடத்தில் தன் சேனையை விட்டுச்சென்று, (செந்திலும் சூரன் தலைநகரமான மகேந்திரபுரியும்) சந்திக்கும் இடமாக உள்ள கடலை விரைவாகத் தாண்டிக் கடந்து;

அந்தப் பொழிலில் சந்துத் தலை உற்று அஞ்சப் பொருது உற்று ஒழியாதே... (மகேந்திரபுரமாகிய) அந்த இடத்துக்குத் தூதுவனாகச் சென்றும்; அரக்கர் அஞ்சும்படியாகப் போர்புரிந்தும்; அந்த இடத்தைவிட்டு நீங்காமலும் நின்றவர்;

செம் கைக் கதிர் உற்று ஒன்றி அக் கடலில் சென்று உற்றவர் தற் பொருள் ஆனாய்... சிவந்த கிரணங்களை உடைய சூரியனைப் போல அந்தக் கடலைக் கடந்து சென்று வெற்றியோடு திரும்பிய (வீரபாகு தேவரின்) ஆத்மார்த்தமான தலைவனாக ஆனவனே!

சிந்தைக் கனிவைத் தந்து அப் பொழிலில் செந்தில் குமரப் பெருமாளே.... மனத்தில் அன்பைக் கொண்டிருக்கின்றவனே!  அழகிய பொழில் சூழ்ந்த திருச்செந்தூரில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே!

சுருக்க உரை

தன் படையை விட்டு நீங்கி; செந்திலும் சூரனுடைய தலைநகரான மகேந்திரபுரியும் சந்திக்கும் இடமான கடலை விரைவாகத் தாண்டிச் சென்று; மகேந்திரபுரிக்குத் தூதுவனாகச் சென்றவரும்; அரக்கர்களோடு போரிட்டவரும்; அங்கிருந்து நீங்காமல் நின்றவருமான வீரபாகுத் தேவரின் ஆத்மார்த்தமான நாயகனே!  சிந்தையில் அன்பு கொண்டவனே!  பொழில் சூழ்ந்த திருச்செந்தூரில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே!

பருத்த மார்புகளாலும்; அணிந்திருக்கும் ஆபரணங்களாலும்; மேகத்தை ஒத்த கரிய கூந்தலாலும்; வலிமையாகத் தைக்கும் அம்புக்கு நிகரானவையும், மீனைப் போன்றவையுமான கண்களாலும்; கொஞ்சிப் பேசுவதில் கிளிக்கு உறவுள்ளதும்; சங்கத்தைப் போல தொனிப்பதுமான குரலாலும் கவரப்பட்டு வருபவர்களை வீட்டுக்குப் புறக்கடையில் சந்திக்கும் தன்மைகொண்ட பெண்களோடு கொஞ்சிக்குலவிக் கொண்டிருக்காமல் அடியேன் பேரின்ப நிலையை எய்துமாறு என்னுடைய தலைமீது உன்னுடைய அழகிய திருப்பாதத்தைப் பதித்தருள வேண்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.