முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 413

வணங்குவதாகிய தேவனூர்த் தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே!

Updated On : 18 நவம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:13 AM

பதச் சேதம்

சொற் பொருள்

ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் அறு(ம்) நாலும் ஆறும் ஆய

Advertisement

 

ஆறும் ஆறும்: பன்னிரண்டு; ஐந்தும் ஐந்தும்: பத்து—ஆக 22; இப்படி மூன்றுமுறை என்பதால் 66; அறுநாலும்: (6x4) இருபத்து நான்கு (ஆக 66+24=90); ஆறும் ஆய: (90+6) தொண்ணூற்றாறு ஆகிய;

சஞ்சலங்கள் வேறு அதா விளங்குகின்ற ஆரணம் ஆகமம் கடந்த கலையான

 

சஞ்சலங்கள்: மனம் ஒரு நிலையில் நில்லாமை சஞ்சலம் எனப்படும்; வேறுஅதா: வேறுபட்டு; ஆரணம்: வேதம்;

ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி ஏது வேறு இயம்பல் இன்றி ஒரு தானாய்

 

ஈறு: முடிவு, முடிவாக; நன்றி: நன்மை; ஏது: காரணம் (ஹேது); ஒரு: ஒப்பற்ற; தானாய்: தான் ஆகி நின்று;

யாவுமாய் மனம் கடந்த மோன வீடு அடைந்து ஒருங்கி யான் அவா அடங்க என்று பெறுவேனோ

 

மோன(ம்): மௌனம்; வீடு: வீடுபேறு; ஒருங்கி: ஒன்றுபட்டு;  அவா: ஆசை;

மாறு கூறி வந்து எதிர்ந்த சூரன் சேனை மங்க வங்க வாரி மேல் வெகுண்ட சண்ட வித தாரை

 

மாறு: பகை; எதிர்ந்த: எதிர்த்த; வங்க(ம்): கப்பல்; வாரி: கடல்; சண்ட(ம்): வேகம், கோபம் என்று இரண்டு பொருள்; தாரை: கூர்மையான;

வாகை வேல கொன்றை தும்பை மாலை கூ விளம் கொழுந்து வால சோமன் நஞ்சு பொங்கு பகு வாய

 

வாகை: வெற்றிக்கு அடையாளமான மலர், வெற்றி; கூவிளம்: வில்வம்; கொழுந்து: துளிர்; வால: பால; சோமன்: சந்திரன்; வாலசோமன்: பால சந்திரன், இளம்பிறை; பகுவாய: பிளந்த வாயையுடைய;

சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் தேசிகா கடம்பு அலங்கல் புனைவோனே

 

மாசுணம்: பாம்பு; கரந்தை: திருநீற்றுப் பச்சை; நம்பர்: பெருமான்; தேசிகா: குருவே; அலங்கல்: மாலை;

தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே.

 

 

ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் அறுநாலும் ஆறுமாய ... (விளக்கத்தை மேலே பதச்சேதத்தில் காணவும்) தொண்ணூற்று ஆறானதும்;

சஞ்சலங்கள் வேறதா விளங்குகின்ற... மனம் ஒரு நிலையில் நில்லாத துன்பங்களுக்குக் காரணமானதுமான தத்துவங்களுக்கு வேறுபட்டதாக விளங்குவதும்;

ஆரணாகமங் கடந்த கலையான... வேதங்களையும் ஆகமங்களையும் கடந்த உபதேசக் கலையாகிய சிந்தாந்தத்(தால்கூட);

ஈறு கூறரும் ... ‘இன்னதுதான்’ என்று முடிவாகக் கூற முடியாத,

பெருஞ்சுவாமியாய் இருந்த நன்றி ஏது வேறு இயம்பலின்றி... பெருந்தெய்வமாக விளங்குகின்ற நற்பொருளாக; (தன்னையன்றி வேறொரு) மூலகாரணம் எதுவுமில்லாமல்,

ஒருதானாய் யாவுமாய் ... ஒப்பற்ற தானாகவும்; மற்ற அனைத்துமாகவும் நின்று;

மனங்கடந்த மோன வீடு அடைந்து ஒருங்கி யான்... மனத்தைக் கடந்ததான மௌன நிலையாகிய முக்தியைப் பெற்று; சிந்தை ஒருமைப்பட்டு அடியேன்,

(வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) – விநாயகர் அகவல், ஒளவையார்)

அவா அடங்க என்று பெறுவேனோ ... ஆசைகளெல்லாம் அடங்குகின்ற நிலைமையை என்றைக்கு அடைவேனோ?

மாறு கூறி வந்தெதிர்ந்த சூரர் சேனை மங்க ... பகைத்துப் பேசி வந்து, எதிர்த்த சூரனுடைய சேனை அழிய,

வங்க வாரி மேல்வெகுண்ட சண்ட விததாரை... கப்பல்கள் மிதக்கின்ற கடலைக் கோபித்ததும்; வேகமும் கோபமும் கொண்டதுமான,

வாகை வேல ... வெற்றி வாகையைச் சூடிய வேலை ஏந்தியவனே!

கொன்றை தும்பை மாலை கூவிளங்கொழுந்து வால சோமன் ... கொன்றைப் பூ; தும்பைப் பூ; வில்வக் கொழுந்து; பிறைச்சந்திரன்;

நஞ்சு பொங்கு பகுவாய சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட... விஷத்தைக் கக்குவதும் பிளந்த வாயைக் கொண்டதும் சீற்றமுடையதுமான பாம்பு; திருநீற்றுப் பச்சை (எனப்படும் இலை); கங்கை ஆகியவற்றைச் சடாமுடியில் வைத்திருக்கின்ற,

நம்பர் தேசிகா ... பெருமானான சிவபிரானுடை குருநாதனே!

கடம்பு அலங்கல் புனைவோனே ... கடம்ப மாலையை அணிந்தவனே!

தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு.. தேவர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி, பூமிக்கு இறங்கிவந்து வணங்குவதான,

தேவ னூர்விளங்க வந்த பெருமாளே. ... தேவனூர் பெருமையடையும்படியாக வந்து வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

பகைமை பேசி எதிர்த்து வந்த சூரனுடைய சேனைகள் அழியும்படியாக, கப்பல்கள் செல்கின்ற கடலைச் சீறியதும்; வேகமும், கோபமும், கூர்மையும் கொண்டதுமான வெற்றி வாகையைச் சூடிய வேலை ஏந்தியவனே!  கொன்றை; தும்பை; வில்வக் கொழுந்து; பிறைச்சந்திரன்; விஷத்தைக் கக்குவதும்; பிளந்திருப்பதும்; சீறுவதுமான பாம்பு; திருநீற்றுப் பச்சை; கங்கை ஆகியவற்றைச் சடாமுடியில் அணியும் பெருமானான சிவனாருடைய குருமூர்த்தியே!  கடப்ப மாலையை அணிந்தவனே!  தேவர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி பூமிக்கு இறங்கி வந்து உன்னை வணங்குவதாகிய தேவனூர்த் தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே!

துன்பங்களுக்குக் காரணமான தொண்ணூற்றாறு தத்துவங்களுக்கு வேறுபட்டு விளங்குவதும்; வேதங்களையும் ஆகமங்களையும் கடந்ததும்; உபதேச கலையாகி சிந்தாந்தத்தாலேயே விளக்கிச் சொல்லமுடியாத பெருந்தெய்வ நற்பொருளாகவும்; மூலகாரணமாகச் சுட்டுவதற்கு வேறொன்று இல்லாத ஒப்பற்ற நிலையில் தானே அனைத்துமாக விளங்கி; மனம் கடந்ததான மோன நிலையில் அடைவதான முக்தியை அடைந்து; என் மனம் ஒருமைப்பட்டு; அனைத்து ஆசைகளும் அழியும்படியான பேற்றை என்று பெறுவேனோ.  (அப்படிப்பட்ட நிலையை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.