முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 393

ஒலிக்கின்ற கடல்சூழ்ந்த இந்த உலகில்

Updated On : 29 அக்டோபர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:05 AM

பதச் சேதம்

சொற் பொருள்

குரை கடல் உலகினில் உயிர் கொடு போந்து கூத்தாடுகின்ற குடில் பேணி

Advertisement

 

குரைகடல்: ஒலிக்கின்ற, இரைகின்ற கடல்; குடில்: குடிலாகிய உடல்;

குகை இட(ம்) மருவிய கரு இழி மாந்தர் கோட்டாலை இன்றி அவிரோதம்

 

குகைஇடம்: குகையைப் போன்ற இடம்; மருவிய: ஒத்த; கரு இழி: கர்ப்பத்திலிருந்து இறங்கும்; கோட்டாலை: துன்பம்; அவிரோதம்: விரோதம் இன்மை;

வர இரு வினை அற உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி

 

அனுபூதி: அனுபவம், ஞான அனுபவம்; உணர்வோடு தூங்குதல்: உணர்வோடு நிற்றல், இருத்தல்;

வடிவினை உனது அழகிய திரு வார்ந்த வாக்கால் மொழிந்து அருள வேணும்

 

 

திரள் வரை பக மிகு குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன் மறையோடு

 

திரள் வரை: திரண்டதாகிய மலை, கிரெளஞ்ச மலை; பக: பிளவுபட; குருகுல வேந்து: அர்ஜுனன்; தேர்ப்பாகன்: கண்ணன்; தேர்ப்பாகன் மைந்தன்: (திருமாலுடைய) மைந்தனான பிரமன்;

தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து தீ பாய இந்த்ர புரி வாழ

 

தெருமர: (தெருமரல் உற) கலக்கத்தை அடைய; நிசிசரர்: இரவிலே உலவுபவர்—அரக்கர்; இந்த்ரபுரி: தேவலோகம்;

விரி திரை எரி எழ முதல் உற வாங்கு வேல்கார கந்த புவி ஏழும்

 

விரிதிரை: விரிந்த (அலை வீசும்) கடல்; எரியெழ: தீ எழும்படியாக;

மிடி கெட விளைவன வள வயல் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே.

 

மிடி: வறுமை;

குகையிட மருவிய கருவிழி மாந்தர் கோட்டாலை யின்றி... குகையைப் போல (இருண்டதாகிய) கருப்பையிலிருந்து (தரையில்) இறங்குகின்ற மக்களுக்கு நேர்வதான எந்தத் துன்பமும் இல்லாமல்,

அவிரோதம் வர... விரோதமின்மை (யாரோடும், எதனோடும் பகைக்காத தன்மை) என்ற மனப்பக்குவத்தை அடைந்தும்;

இரு வினையற... நல்வினை தீவினைகளின் பயன்கள் மொத்தமாக அழிந்தும்;

உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி வடிவினை... ஞான நிலையில் தங்கிருப்பவர்களுக்கே விளங்குவதாகிய ‘அனுபவ ஞானம்’ என்னும் உன் அருட்பிரசாத வடிவத்தை,

உனது அழகிய திருவார்ந்த வாக்கால் மொழிந்தருளவேணும்... அழகும் மங்களகரமும் நிறைந்ததான உன்னுடை திருவாக்காலே உபதேசித்தருள வேண்டும்.

திரள்வரை பகமிகு... திரண்டு பெருத்ததான கிரெளஞ்ச பிளவுபடும்படியும்;

குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன்... குருகுல மன்னனாகிய அர்ஜுனனுக்குத் தேர்ப்பாகனாக விளங்கிய கண்ணனுடைய (திருமாலுடைய) மகனான பிரமனும்,

மறையோடு தெருமர... அவன் கற்ற மறைகளும் கலக்கமடையும்படியும்;

நிசிசரர் மனைவியர் சேர்ந்து தீப்பாய இந்த்ரபுரிவாழ.... அரக்கர்களுடைய மனைவியர் ஒன்றாகச் சேர்ந்து தீயில் பாய்ந்து இறக்கும்படியாகவும்; தேவலோகம் வாழும்படியாகவும்;

விரிதிரை யெரியெழ... விரிந்திருப்பதும், அலைகளை உடையதுமான கடலில் நெருப்பு பொங்கி எழும்படியாகவும்;

முதலுற வாங்கு வேற்கார கந்த... ‘முதல்வனாபவன் நானே (முருகனே)’ என்பதைத் தெரிந்துகொள்ளும்படியாக வேலாயுதத்தை வீசியவனே!  கந்தனே!

புவியேழும் மிடிகெட விளைவன... ஏழு உலகங்களும் தங்களுடைய வறுமையிலிருந்து விடுபடும்படியான பெரிய விளைச்சலைத் தருவதான,

வளவயல் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே.... வளமான வயல்களைக் கொண்ட வேப்பூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

திரண்டு பருத்ததான கிரெளஞ்சமலை பிளவுபடும்படியாகவும்; குருகுல வேந்தனாகிய அர்ஜுனனுக்குத் தேரோட்டிய (கண்ணனாக வந்த) திருமாலுடைய மகனான பிரமனும் அவன் கற்ற வேதங்களும் கலக்கமடையும்படியாகவும்; அசுரர்களுடைய மனைவியர் ஒன்றுகூடி தீப்பாய்ந்து இறக்கும்படியாகவும்; தேவலோகம் வாழ்வுபெறும்படியாகவும்; பரந்து விரிந்ததும் அலைகள் நிரம்பியதுமான கடலில் தீப்பற்றும்படியாகவும்; ‘நீயே முதல்வன்’ என்பது விளங்கும்படியாகவும் வேலாயுதத்தைச் செலுத்தியவனே!  கந்தனே!

ஒலிக்கின்ற கடல்சூழ்ந்த இந்த உலகில் உயிரைப் பெற்றுப் பிறந்து கூத்தாடுவதான இந்த உடலைப் போற்றி; மலைக்குகையைப் போல இருண்ட கருப்பையிலிருந்து பூமியில் வந்து விழுந்து அல்லல்படுகின்ற மக்களுக்கு உள்ள துன்பங்கள் எதுவுமில்லாமலும்; எதையும் யாரையும் விரோதிக்காத பண்பு முதிர்ச்சியை அடைந்தும்; நல்வினை தீவினை ஆகியனவற்றின் பயன்களிலிருந்து விடுபட்டும் உள்ள ஞான நிலையில் தங்கியிருப்பவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடியதான அனுபூதி அல்லது அனுபவ ஞான அருட்பிரசாதத்ததை, அழகும் மங்களகரம் பொருந்தியதுமான உன்னுடைய திருவாக்கால் உபதேசித்து அருளவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.