முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 469

காதளவு ஓடியதும்; குமிழம்பூவைப் போன்ற

Updated On : 3 பிப்ரவரி, 2017 at 11:08 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:23 PM

பதச் சேதம்

சொற் பொருள்

இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட அணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே

Advertisement

 

குழை: காதணி, ஆகுபெயராகக் காது; கெண்டை: மீன்; குமிழ்: குமிழம் பூ—மூக்குக்கு உவமை; அணை: அனைய; சிலை: வில், புருவத்துக்கு உவமை; அணை: மெத்தை;

இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய

 

இருள்: கரிய; அளக(ம்): கூந்தல்; அளகபந்தி: கூந்தல் கற்றை; வஞ்சியில்: கொடிபோன்ற (இடையில்); இருங்கலை: சிறந்த ஆடை; குலைந்திட: நெகிழ்ந்திட; சிங்கி: நஞ்சு;

முருகொடு கலந்த சந்தன அளறு படு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழுந்தொறும் முருகு ஆர

 

முருகு: நறுமணம்; சந்தன அளறு: (அளறு—சேறு) சந்தனக் கலவை; முகடு: உச்சி; முருகு: அழகு; ஆர: நிரம்ப;

முழு மதி புரந்த சிந்துர அரிவையர் உடன் கலந்திடு முகடியும் நலம் பிறந்திட அருள்வாயே

 

புரந்த: நிகர்த்த; சிந்துர(ம்): திலகம்; முகடி: மூதேவி;

எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழி ஒடு அணிந்த சங்கரர் களி கூரும்

 

எரிவிடம்: எரிகின்ற நெருப்பைப் போல சிவந்த; நிமிர்ந்த குஞ்சி: உயர்ந்த சடை; இதழி: கொன்றை;

இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரிஅம்பகி பெரு வாழ்வே

 

த்ரியம்பகி: மூன்று கண்களை உடையவள்;

அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுரம் நெருங்கு தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட மயில் மேலே

 

அலம்பு: ஒலிக்கின்ற;

அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே.

 

முன்றில்: முன்புறம்;

இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட... இரண்டு காதுகளையும் தொடும் அளவுக்கு நீண்டதும், கெண்டை மீன்போன்றதும்; குமிழம் பூவை ஒத்த நாசியை நெருங்கும் அளவுக்கு அகலமானதுமான கண்(களை உடைய பெண்களோடு),

இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட... விற்களைப் போன்ற இரண்டு புருவங்களும் நெரிந்து நெற்றிக்கு ஏறவும்; இருண்ட கருங்கூந்தலும் கொடியைப் போன்ற இடையில் அணிந்திருக்கும் நல்ல ஆடையும் ஒன்றாக நெகிழ்ந்திடுமாறு,

இதழ் அமுது அருந்து சிங்கியின் மன(ம்) மாய... இதழில் ஊறும் அமுதத்தை உண்ணுகின்ற (ஆவலான) நஞ்சினால் என் மனம் அழிந்து போகவும்;

முருகொடு கலந்த சந்தன அளறு படு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழுந்தொறும் முருகு ஆர... நறுமணம் வீசும் சந்தனக் கலவையும் குங்குமச சாந்தும் மணக்கின்ற மார்பின் உச்சி விம்மி எழும்போதெல்லாம் அழகு நிரம்பி நிற்கவும்;

முழு மதி புரந்த சிந்துர அரிவையர் உடன் கலந்திடு முகடியு(ம்) நலம் பிறந்திட அருள்வாயே... பூரண சந்திரனை ஒத்த திலகத்தை அணிந்திருக்கும் பெண்களோடு கலக்கும் (மூதேவியான) கசடனான எனக்கும் நன்மைகள் உண்டாகுமாறு அருள வேண்டும்.

எரி விட(ம்) நிமிர்ந்த குஞ்சியி(ல்) நிலவொடும் எழுந்த கங்கையும் இதழி ஒடு அணிந்த சங்கரர் களி கூரும்... எரிகின்ற நெருப்பைப் போல ஒளிவிடுகின்றதும் நிமிர்ந்ததுமான சடாமுடியில் சந்திரனையும்; எழுகின்ற கங்கையையும்; கொன்றைப் பூவையும் தரித்திருக்கின்ற சங்கரானார் மனத்திலே மகிழ்ச்சியை உண்டாக்குகின்றவளும்;  

இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரி அம்பகி பெரு வாழ்வே... இமராசன் பெற்ற கரிய குயிலும்; பச்சை நிறத்தைக் கொண்ட கிளியும்; என்னுடைய உயிராக நான் போற்றுகின்ற முக்கண்ணியினுடைய செல்வமே!

அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுர(ம்) நெருங்கு தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட... இடுப்பிலே அணிந்திருக்கும் பொன்வடமும்; ஒலிக்கின்ற கிண்கிணியும்; சதங்கையும் ஒலியெழுப்பிக் கொஞ்சிட,

மயில் மேலே அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர... உள்ளம் பூரித்து மயிலின்மேலே என்றென்றும் வருகின்ற குமரனே!

முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே.... முற்றத்திலே அலைகள் வந்து மோதுவதான திருச்செந்தூர்த் தலத்திலே எழுந்தருளியுள்ள பெருமாளே!

சுருக்க உரை

எரிகின்ற நெருப்பைப்போல ஒளிசிந்துவதும் நிமிர்ந்ததுமான சடையிலே நிலவையும் கங்கையையும் கொன்றைப் பூவையும் அணிபவரான சங்கரருடைய மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவளும்; இமவான் பெற்றவளும்; கரிய குயிலையும் பச்சைக் கிளியையும் போன்றவளும்; என்னுடைய உயிரென்று நான் போற்றுகின்ற முக்கண்ணியாள் பெற்ற பெருஞ்செல்வமே!  இடுப்பிலே கட்டிய பொன் நாணும் சதங்கையும் கிண்கிணியும் சிலம்பும் ஒலியெழுப்புமாறு மயிலின்மேல் எப்போதும் உள்ள மகிழ்ச்சியோடு வருகின்ற குமரனே!  முற்றத்திலே அலைகள் புரள்வதான திருச்செந்தூரிலே எழுந்தருளியிருக்கின்ற பெருமாளே!

காதளவு ஓடியதும்; குமிழம்பூவைப் போன்ற நாசியை நெருங்கும் அளவுக்கு அகலமானதுமான பெரிய கண்களையும்; நெற்றியைத் தொடுவதுபோல வளைந்தெழும்பும் புருவமான இரண்டு விற்களையும் கொண்ட பெண்களோடு மெத்தையின் மேலே கிடக்கும்போது அவர்களுடைய இருண்ட கூந்தலும் இடையில் அணிந்திருக்கும் ஆடையும் நெகிழுமாறும்; இதழில் ஊறுவதான அமுதத்தைப் பருகத் தவிக்கின்ற ஆவலான நஞ்சால் என் மனம் அழியுமாறும்; நறுமணம் கமழும் சந்தன, குங்குமக் கலவைகளை அணிந்த மார்பகங்கள் பூரித்து எழுந்தோறும் அழகு நிரம்பி விளங்கவும்; பூரண சந்திரனைப் போன்ற திலகத்தை அணிந்துள்ள பெண்களோடு கலந்து கிடக்கின்ற மூதேவியைப் போன்ற கசடனான எனக்கும் நற்கதி கிடைக்குமாறு அருள்புரிய வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.