முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 471

‘இது இன்னார்தான்’ என்று அறிய

Updated On : 6 பிப்ரவரி, 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:27 PM

பதச் சேதம்

சொற் பொருள்

காண ஒணாதது உருவோடு அரு அது பேச ஒணாதது உரையே தருவது காணும் நான் மறை முடிவாய் நிறைவது பஞ்ச பூத

Advertisement

 

 

காய பாசம் தனிலே உறைவது மாயமாய உடல் அறியா வகையது காயமானவர் எதிரே அவர் என வந்து பேசி

 

காய(ம்): உடல்; காயபாசம்: உடல்மீது வைக்கும் நேசம்; காயமானவர்: காயசித்தியை அடைந்தவர்;

பேண ஒணாதது வெளியே ஒளி அது மாயனார் அயன் அறியா வகை அது பேத பேதமொடு உலகாய் வளர்வது விந்து நாத

 

பேண ஒணாதது: போற்ற முடியாதது; வெளியே: ஆகாச வெளியிலே; மாயனார்: திருமால்; அயன்: பிரமன்; பேத பேதமொடு: பேத அபேதமொடு (ஒற்றுமை, வேற்றுமை அற்ற); விந்து: பீடம்; நாதம்: லிங்கம்;

பேருமாய் கலை அறிவாய் துரிய அதீதமானது வினையேன் முடி தவ பேறுமாய் அருள் நிறைவாய் விளைவது ஒன்று நீயே

 

பேருமாய்: பெயருடையதாகவும்; கலை அறிவாய்: நூலறிவாகவும்; அதீதமானது: கடந்தது; ஒன்று நீயே: இவை அனைத்தும் பொருந்திய ஒருவன் நீயே;

வீண் ஒணாதது என அமையாத அசுரரை நூறியே உயிர் நமன் நீ கொளு(ம்) என வேல் கடாவிய கரனே உமை முலை உண்ட கோவே

 

வீண் ஒணாதது: வீணான செயல்களை கூடாது என ஒதுக்கி; நூறியே: பொடியாக்கியே; கடாவிய: செலுத்திய; கரனே: கரத்தை உடையவனே;

வேத நான்முக மறையோனொடும் விளையாடியே குடுமியிலே கரமொடு வீற மோதின மறவா குறவர் குறிஞ்சியூடே

 

வீற மோதின: பலமாகக் குட்டின; குறிஞ்சியூடே: மலையிடத்திலே (வள்ளி மலையிலே);

சேண் ஒணாய் இடும் இதண் மேல் அரிவையை மேவியே மயல் கொள லீலைகள் செய்து சேர நாடிய திருடா அருள் தரு கந்த வேளே

 

சேண் ஒணாய்: மிக உயரமாக; இடும்: கட்டப்பட்ட; இதண்: பரண், மேடை; அரிவை: வள்ளி;

சேர ஒணா வகை வெளியே திரியும் மெய் ஞான யோகிகள் உளமே உறை தரு தேவனூர் வரு குமரா அமரர்கள் தம்பிரானே.

 

சேரஒணா வகை: நெருங்க முடியாத வகையிலே; உளமே உறைதரு: உள்ளத்தில் உறைந்திருந்து;

காணொணாதது உருவோ டருவது... காண முடியாததும்; உருவமாகவும் அருவமாகவும் விளங்குவதும்;

பேசொ ணாதது உரையே தருவது.. பேசி விளக்க முடியாததும்; (வேதம் முதலானவற்றால்) உரைக்கப் படுவதும்;

காணு நான்மறை முடிவாய் நிறைவது... விளங்குகின்ற நான்கு மறைகளுக்கும் முடிவான பொருளாக நிறைந்து விளங்குவதும்;

பஞ்சபூதக் காய பாசம தனிலே உறைவது... பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடலின் மேல் வைத்திருக்கும் நேசத்தினிலுள்ளும் உறைந்திருப்பதும்;

மாய(ம்) ஆயஉட லறியா வகையது... மாயமே வடிவாக அமைந்துள்ள இந்த உடலால் அறிய ஒண்ணாத வகையில் நிற்பதும்;

காய மானவ ரெதிரே யவரென வந்துபேசிப் பேணொணாதது வெளியே யொளியது... காயசித்தி பெற்றவரேயானாலும், தன் எதிரிலே தன்னைப் போலவே (வடிவம் கொண்டவனாக) வந்து பேசினாலும் ‘இவர் இன்னார்’ என்று அறிய முடியாததும்; ஆகாசவெளியிலே ஒளியாய் நிற்பதும்;

மாயனார் அயன் அறியா வகையது பேத அபேதமொடு உலகாய் வளர்வது... திருமாலாலும் பிரமனாலும் அறிய முடியாததும்; வேற்றுமை, ஒற்றுமை என்ற தன்மைகளோடு இந்த உலகமாக வளர்வதும்;

விந்துநாதப் பேருமாய் கலை யறிவாய் துரிய அதீதமானது... பீடம், லிங்கம்—சக்தி, சிவம்—என்ற பெயருடையதும்; (யோகியருடைய) உயர்வான துரிய நிலைக்கு அப்பாற்பட்டு விளங்குவதும்;

வினையேன் முடிதவ பேறு மாய் அருள் நிறைவாய் விளைவது ஒன்றுநீயே... வினையாற்றும் அடியேன் செய்து முடித்த தவத்தின் பயனாக நிற்பதும்; அருள் நிறைந்தாக விளங்குவதும்—இவை யாவையுமே பொருந்தியிருப்பது உன் ஒருவனுக்குத்தான். 

வீணொணாதென அமையாத அசுரரை நூறியே உயிர் நமனீ கொளுவென... வீணான செயல்களைச் செய்யாமல் விலக்காத அசுரர்களைப் பொடியாக்கி, அவர்களுடைய உயிரை யமனிடத்திலே ‘நீ எடுத்துக்கொள் என்று),

வேல்க டாவிய கரனே உமைமுலையுண்ட கோவே... வேலைச் செலுத்திய கரத்தை உடையவனே!  உமையம்மையிடம் முலைப்பால் (ஞானப்பால்) அருந்திய இறைவனே!

வேத நான்முக மறையோனொடும் விளையாடியே குடு மியிலே கரமொடு வீற மோதின மறவா குறவர் குறிஞ்சியூடே... வேதத்தை அறிந்தவனான பிரமன் என்ற அந்தணனோடு (பேசியபடி) விளையாடி, அவனுடை உச்சி மண்டையில் பலமாகக் குட்டிய வீரனே!  குறவர்களுக்கு உரியதான வள்ளி மலையிலே,

சேணொ ணாயிடு மிதண்மேல் அரிவையை மேவியே மயல்கொள லீலைகள்செய்து சேர நாடிய திருடா அருள் தரு கந்தவேளே... மிக உயரமுள்ளதாகக் கட்டப்பட்டுள்ள பரணின் மீது )இருந்தவண்ணம் புனத்தைக் காத்த) பெண்ணான வள்ளியிடத்திலேநெருங்கி, காதலை விளைவிக்கும்படியான திருவிளையாடல்களைப் புரிந்து அவளைத் தழுவ விரும்பிய திருடனே!  அருளைத் தருபவனான கந்தவேளே! 

சேரொணாவகை வெளியே திரியும் மெய்ஞ்ஞான யோகிகளுளமே உறைதரு... யாரும் தம்மிடத்திலே நெருங்க முடியாதபடி வெளியிடங்களிலே திரிபவர்களான மெய்ஞ்ஞானியர், யோகியருடைய உள்ளங்களில் குடியிருப்பவனே!

தேவ னூர்வரு குமரா அமரர்கள் தம்பிரானே... தேவனூரில் உறைபவனே!  தேவர்களுடைய தம்பிரானே! 

சுருக்க உரை

வீணான செயல்களைச் செய்யாமல் விலக்காதவர்களான அசுரர்களைப் பொடியாக்கி, யமனிடத்திலே ‘அவர்களுடைய உயிரை நீ கொள்வாயாக’ என்று கொடுக்கும்படியாக வேலைச் செலுத்திய திருக்கரத்தனே!  உமையம்மையிடம் ஞானப்பாலை அருந்தியவனே!  வேதத்தை அறிந்தவனான நான்முக பிரமனோடு பேசி விளையாடியபடி அவனுடைய உச்சி மண்டையிலே பலமாகக் குட்டிய வீரனே!  குறவர்களுக்கு உரியதான வள்ளி மலையிலே, மிக உயரமாக அமைக்கப்பட்ட பரணில் இருந்தபடி தினைப்புனம் காத்த பெண்ணான வள்ளியம்மையிடத்திலே நெருங்கி, அவருக்குக் காதலை ஊட்டும் வண்ணமாகத் திருவிளையாடல்களைப் புரிந்த திருடனே!  அருள் நிறைந்தவனான கந்தனே!  யாராலும் தம்மை நெருங்க முடியாதபடி வெளியிலே திரிந்து கொண்டிருக்கும் யோகியர், ஞானியருடைய உள்ளங்களில் வீற்றிருப்பவனே!  தேவனூரில் எழுந்தருளியிருக்கும் குமரனே!  தேவர்களுடைய தம்பிரானே!

பார்க்க முடியாததும்; உருவமும் அருவமுமாக இருப்பதும்; பேசி விளக்க முடியாததும்; வேதங்கள் முதலானவற்றால் பலவிதங்களில் உரைக்கப்படுவதும்; அந்த வேதங்களுக்கு முடிவான பொருளாக இருப்பதும்; பஞ்சபூதங்களால் ஆன இந்த உடலின்மேல் வைத்திருக்கும் நேசத்தினுள்ளும் இருப்பதும்; காயசித்தி பெற்றவர்களேயானாலும் அவர்களுக்கு எதிரிலேயே தோன்றி, அவர்களோடு உரையாடியபோதிலும், ‘இது இன்னார்தான்’ என்று அறிய முடியாததாக விளங்குவதும்; வானத்தில் ஒளியாக விளங்குவதும்; திருமாலாலும் பிரமனாலும் உணர முடியாததும்; பேத அபேதங்களோடு உலகவடிவாக நிற்பதும்; பீடமும் லிங்கமுமாய் சக்தி—சிவல் என்ற பெயரைத் தாங்கி நிற்பதும்; நூலறிவாக இருப்பதும்; உயர்நிலையை அடைந்த யோகியருக்கும் அப்பாற்பட்டதும்; செயலாற்றுகின்ற அடியேனுடைய தவப்பயனாக இருப்பதுவும்; திருவருள் நிறைந்ததாக விளங்குவதுமான—

இத்தனை இலக்கணங்களும் பொருந்தி விளங்குபவன் நீ ஒருவனே! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.