பகுதி - 475
விழுந்த விந்துதான் இந்த உடல்
பதச் சேதம் | சொற் பொருள் |
விழு தாது எனவே கருதாது உடலை வினை சேர்வதுவே புரிதாக Advertisement
| விழு: விழுவதான; தாது: சுக்கிலம், விந்து; |
விருதாவினிலே உலகாயதம் மேல் இடவே மடவார் மயலாலே
| விருதா: வீணாக; உலகாயதம்: ‘தேகமே ஆத்மா, போகமே மோட்சம்’ என்னும் மதம்; மடவார்: பெண்கள்; |
அழுது ஆ கெடவே அவமாகிட நாள் அடைவே கழியாது உனை ஓதி
| அழுதா கெடவே: அழுது, ‘ஆ’ என்று கதறிக் கெட்டுப்போய்; அவமாகிட: வீணாக; |
அலர் தாள் அடியேன் உறவாய் மரு ஓர் அழியா வரமே தருவாயே
| அலர்: மலர்; மரு: மருவும், சேர்க்கும், கூட்டிவைக்கும்; ஓர்: ஒப்பற்ற; |
தொழுதார் வினை வேர் அடியோடு அறவே துகள் தீர் பரமே தரு தேவா
| துகள்தீர்: குற்றமற்ற; பரம்: பதவி, உயர் நிலை; |
சுரர் பூபதியே கருணை ஆலயனே சுகிர்தா அடியார் பெரு வாழ்வே
| சுரர்: தேவர்; கருணாலயனே: கருணையின் ஆலயம்—இருப்பிடம்—ஆனவனே; சுகிர்தா: புண்ணியனே; |
எழுதா மறை மா முடிவே வடி வேல் இறைவா எனை ஆளுடையோனே
|
|
இறைவா எதுதா அதுதா தனையே இணை நாகையில் வாழ் பெருமாளே.
| எதுதா அதுதா: எதைத் தருவாயோ அதைத்தா; தனையே இணை நாகை: தன்னையே நிகரான நாகப்பட்டினம்; |
விழுதா தெனவே கருதா துடலை வினைசேர் வதுவே புரிதாக... இது விழுந்ததான விந்தினால் விளைந்த உடல் என்பதைப் புரிந்துகொள்ளாமல் மேலும்மேலும் வினைகளையே சேர்த்துக்கொள்வதை விரும்பிக் கொண்டு,
விருதா வினிலே உலகா யதமேலிடவே மடவார் மயலாலே... வீணாக உலகாயத (உடலை மெய்யாக நம்பி, உடலிச்சகளைத் துய்ப்பதே வாழ்வு என்னும் முடிவு) நாட்டம் ஏற்பட்டு பெண்களிடத்திலே மயக்கம் கொண்டு,
அழுது ‘ஆ’ கெடவே அவமாகிட நாளடைவே கழியாது உனையோதி... அழுதபடியும், ‘ஆ’ என்று அலறியபடியும் வாழ்கின்ற காலமெல்லாம் வீணாகக் கழிந்து போகாமல் உன் திருநாமத்தையும் புகழையும் ஓதியபடி இருந்து,
அலர்தா ளடியே னுறவாய் மருவோரழியா வரமே தருவாயே... மலர்கின்ற தாமரையைப் போன்ற உன்னுடைய திருவடிகளே எனக்கு உறவாகப் பொருத்தும்படியான ஒப்பற்ற வரத்தைத் தந்தருள வேண்டும்.
தொழுதார் வினை வே ர்யோ டறவே துகள்தீர் பரமே தருதேவா... தொழுபவர்களுடைய வினைச் சுமையானது வேரறக் களையும்படியான குற்றமற்ற உயர்பதத்தைத் தருகின்ற தேவனே!
சுரர்பூபதியே கருணா லயனே சுகிர்தா அடியார் பெருவாழ்வே... தேவர்களுடைய தலைவனே! கருணையின் இருப்பிடமே! புண்ணியனே! அடியவர்களுக்குப் பெரும் செல்வமாக விளங்குபவனே!
எழுதா மறைமா முடிவே வடிவேலிறைவா எனையாளுடையோனே... எழுதப்படாதவையான வேதங்களின் முடிவாக விளங்குபவனே! வடிவேலை ஏந்திய இறைவனே! என்னை ஆட்கொண்டிருப்பவனே!
இறைவா எதுதா அதுதா தனையே இணைநா கையில் வாழ் பெருமாளே... தனக்குத் தானே நிகர் என்று விளங்குகின்ற நாகப்பட்டினத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! இறைவனே! எனக்கு எதைத் தரவேண்டுமே அதைத் தா.
சுருக்க உரை
தொழுகின்ற அடியார்களுடைய வினையை வேரறக் களைகின்ற மேலான பதவியைத் தருகின்ற தேவனே! தேவர்களுக்குத் தலைவனே! கருணையின் இருப்பிடமே! புண்ணியனே! அடியார்களுடைய பெருஞ்செல்வமே! எழுதப்படாததான வேதங்களின் முடிவான பொருளே! வடிவேலை ஏந்தகின்ற இறைவனே! என்னை ஆட்கொண்டவனே! இறைவா, எனக்கு எதைத் தரவேண்டுமோ அதைத் தா. தனக்குத் தானே நிகராக விளங்குகின்ற நாகப்பட்டினத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
விழுந்த விந்துதான் இந்த உடல் என்பதைப் புரிந்துகொள்ளாமல், வினைகளை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ளும் கருவியாக்கிக்கொண்டும்; ‘உடலே நிலையானது; உடலிச்சையே போற்றத்தக்கது’ என்று பேசும் உலகாயத வாதத்தை வீணாக மேற்கொண்டும்; பெண்களிடத்திலே மயங்கியும்; அழுதபடியும் ‘ஆ’ என்று கதறியபடியும் கெட்டுப் போய் வாழ்நாள் வீணாகக் கழியாதபடி, உன்னைப் புகழ்ந்தும் துதித்தும்; மலர்கின்ற தாமரைய ஒத்த உன் திருவடிகளே எனக்கு உற்ற உறவாகக் கூட்டிவைக்கின்ற ஒப்பற்ற, நிலையான வரத்தைத் தந்தருள வேண்டும்.