பகுதி - 481
கூந்தல் கலையும்படியாக, எட்டு
பதச் சேதம் | சொற் பொருள் |
குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு குருகின் இசை பாடி முகம் மீதே Advertisement
| ஓதி: கூந்தல்; வீறு: பொலிவுடைய; குருகின் இசை: கோழி முதலான எட்டு வகையான பறவைகளின் குரலில் இசையெழுப்புதல்; |
குறு வியர்வு உலாவ அமுதின் இனிதான குதலையும் ஒரு ஆறு படவே தான்
| வியர்வு: வியர்வை; குதலை: மழலை, குழறிப் பேசுதல்; ஆறுபட: ஆறுபோலப் பெருக; |
பல வித விநோதமுடன் உபய பாத பரிபுரமும் ஆட அணை மீதே
| உபய பாத: இரண்டு கால்களிலும் (உபய: இரண்டு); பரிபுரம்: சதங்கை, சிலம்பு; அணை: படுக்கை; |
பரிவு தரும் ஆசை விட மனம் ஒ(வ்)வாத பதகனையும் ஆள நினைவாயே
| பரிவுதரும் ஆசை: அன்பை ஏற்படுத்துகின்ற ஆசை; பதகன்: பாதகன் (குறுக்கல் விகாரம்) |
சிலை மலை அதான பரமர் தரு பால சிகி பரியதான குமரேசா
| சிலை: வில்; மலை: மேரு; சிகி: மயில்; பரி: குதிரை; |
திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழு ஏற வருவோனே
|
|
கலின் வடிவமான அகலிகை பெணான கமல பத மாயன் மருகோனே
| கலின் வடிவமான: கல்லின் வடிவமான; பெணான: பெண்ணான; கமலபத: தாமரைப் பாத; மாயன்: திருமால், ராமன்; |
கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது கர புரியில் வீறு பெருமாளே.
| கமுகு: பாக்கு மரம்; கரபுரி: விரிஞ்சிபுரம்; |
குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு குருகின் இசை பாடி முக(ம்) மீதே குறு வியர்வு உலாவ... கூந்தல் மயிர் கலையும்படியாக (கோழி முதலான எட்டு வகைப்) பறவைகளின் குரலில் இசை பாடி; முகத்திலே சிறுவியர்வை எழும்ப;
அமுதின் இனிதான குதலையும் ஒர் ஆறு படவே தான் பல வித விநோதமுடன் உபய பாத பரிபுரமும் ஆட அணை மீதே... அமுதத்தை விடவும் இனிய குரலில், குழறுகின்ற சொற்கள் ஆறுபோலப் பெருக; பலவிதமான விநோதங்களுடன், இரண்டு கால்களிலும் அணிந்திருக்கும் சதங்கைகள் ஒலியெழுப்ப; படுக்கையின் மேலே,
பரிவு தரும் ஆசை விட மனம் ஒ(வ்)வாத ப(பா)தகனையும் ஆள நினைவாயே... அன்பினால் எழும் ஆசையை விட்டுவிடுவதற்கு மனம் சம்மதிக்காத இந்தப் பாதகனையும் ஆண்டருள நினைத்தருள வேண்டும்.
சிலை மலை அதான பரமர் தரு பால சிகி பரியதான குமரேசா... மேரு மலையை வில்லாகக் கொண்ட பரமரான சிவனாரின் மகனே! மயிலென்னும் குதிரையை வாகனமாகக் கொண்ட குமரேசனே!
திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழு ஏற வருவோனே... மதுரைத் திருத்தலத்தில் இருந்த சமணர் குலத் திருடர்களைக் கழுவேற்றுவதற்காக (ஞானசம்பந்தராக) வந்தவனே!
க(ல்)லின் வடிவமான அகலிகை பெ(ண்)ணான கமல பத மாயன் மருகோனே... கல் வடிவத்திலே கிடந்த அகலிகைவைப் பெண்ணாக எழச்செய்த தாமரைப் பாதங்களை உடைய திருமாலின் மருகனே!
கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது கர புரியில் வீறு பெருமாளே.... கழனிகளிலே இருக்கின்ற பெரிய வாளை மீன்கள், பாக்கு மரங்கள் ஒடியுமாறு எழுந்து துள்ளுகின்ற கரபுரி எனப்படும் விரிஞ்சிபுரத்தில் பொலிவுடன் வீற்றிருக்கின்ற பெருமாளே!
சுருக்க உரை
(திரிபுரங்களை அழிப்பதற்காக) மேரு மலையை வில்லாக ஏந்திய சிவனாருடைய பாலகனே! மயிலைக் குதிரைபோன்ற வாகனமாகக் கொண்ட குமரேசனே! மதுரையிலிருந்த சமணர்களைக் கழுவேற்றுவதற்காகத் திருஞான சம்பந்தராக வந்தவனே! கல்லாகக் கிடந்த அகலிகை, பெண்ணாக எழும்படியாகச் செய்த தாமரைப் பாதங்களை உடைய திருமாலின் மருகனே! கழனிகளிலுள்ள பெரிய வாளை மீன்கள், பாக்கு மரங்கள் ஒடிந்து போகுமாறு எழுந்து துள்ளுகின்ற கரபுரி எனப்படும் விரிஞ்சிபுரத்தில் பொலிவுடன் வீற்றிருக்கின்ற பெருமாளே!
கூந்தல் கலையும்படியாக, எட்டுவகையான பறவைகளின் இனிய குரலில் இசைபெழுப்பி; இரு கால்களிலும் அணிந்திருக்கும் சதங்கள் விநோதமான பலவகை ஒலிகளை எழுப்ப, முகத்தில் சிறுவியர்வை தோன்ற; அமுதிலும் இனிய குரலால் குதலைச் சொற்கள் ஆறுபோலப் பெருக; அன்பு நிறைந்தது போலத் தோற்றம் தரும் அந்தக் கணத்தின்மேல் வைத்திருக்கும் ஆசையை ஒழிக்கச் சம்மதமில்லாத இந்தப் பாதகனையும் ஆண்டருள வேண்டும்.