முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 465

திருமகளை நிகர்த்தவளான குறப்பெண்

Updated On : 29 ஜனவரி, 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:19 PM

பதச் சேதம்

சொற் பொருள்

இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி

Advertisement

 

இயல் இசையில்: இயல் தமிழிலும் இசைத் தமிழிலும்; உசித: தேர்ந்த; வஞ்சி: பெண்; அயர்வாகி: தளர்ச்சியடைந்து;

இரவு பகல் மனது சிந்தித்து உழலாதே

 

 

உயர் கருணை புரியும் இன்ப கடல் மூழ்கி

 

 

உனை எனதுள் அறியும் அன்பை தருவாயே

 

எனதுள்: எனக்குள்ளே, என் மனத்துக்குள்ளே;

மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல்

 

தகர்: ஆடு; கல்: மலை (கல் என்றாலே மலையென்றும் பொருள்); இடையர்: (இங்கே) வேடுவர்—மயில், ஆடு, மலை இவற்றுக்கு இடையே வாழ்பவர்கள்;

வனச குற மகளை வந்தித்து அணைவோனே

 

வனச: தாமரை; வனச குறமகள்: தாமரையில் உறையும் திருமகளை நிகர்த்த வள்ளி;

கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே

 

 

கரி முகவன் இளைய கந்த பெருமாளே.

 

 

இயலிசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி... இயல், இசைத் துறைகளில் நல்ல தேர்ச்சியடைந்த பெண்களிடத்திலே (ஈடுபட்டதனால்) தளர்ச்சியடைந்து,

இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே... என் மனமானது இரவும் பகலுமாக அவர்களையே சிந்தித்தபடிக் கிடந்து நான் திரியாமல் இருக்க,

உயர்கருணை புரியும் இன்பக்கடல்மூழ்கி... உன்னுடைய உயர்வான கருணை தருவதான பேரின்பக் கடலிலே முழுகி,

உனையெனதுள் அறியும் அன்பைத் தருவாயே... உன்னை என் உள்ளத்தினுள்ளே அறியும்படியான அன்பைத் தந்தருள வேண்டும். 

மயில் தகர்கல் இடையர் அந்தத் தினைகாவல்... மயில்களும் ஆடுகளும் நிறைந்ததான மலையினிடேயே வாழ்கின்ற வேடர்களுடைய தினைப்புனத்தைக் காத்துக் கொண்டிருந்த,

வனசகுற மகளை . வந்தித்து அணைவோனே .. திருமகளை நிகர்த்தவளான குறப்பெண் வள்ளியை வணங்கியும் அணைத்தும் செய்தவனே! 

கயிலைமலை யனைய செந்தில் பதிவாழ்வே... கயிலாய மலையை ஒத்ததான திருச்செந்திலில் வீற்றிருக்கும் செல்வமே! 

கரிமுகவ னிளைய கந்தப் பெருமாளே... யானை முகனான கணபதிக்கு இளையவனான கந்தப் பெருமாளே! 

சுருக்க உரை

மயில்களும் ஆடுகளும் நிறைந்த மலைகளுக்கிடையே வாழ்கின்ற வேடர்களுடைய தினைப்புனத்தைக் காத்தவளும்; திருமகளை நிகர்த்தவளுமான வள்ளியம்மையை வணங்கவும் அணைக்கவும் செய்தவனே!  திருக்கயிலாயத்தை ஒத்ததான செந்திலிலே வீற்றிருக்கும் செல்வமே!  யானை முகனான கணபதிக்கு இளையவனான கந்தப் பெருமாளே!

இயல், இசைத் தமிழிலே தேர்ச்சி பெற்ற பெண்களிடத்திலே மயங்கிப் போய், இரவிலும் பகலிலும் அவர்களையே சிந்தித்தபடியாக நான் திரியாமல், உன்னுடைய உயர்ந்த கருணையால் விளைவதான பேரின்பக் கடலிலே முழுகி, உன்னை என்னுடைய உள்ளத்திலே அறியும்படியான அன்பைத் தந்தருள்வாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.