முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 601

சிவனாருக்குக் குருவாக விளங்கி

Updated On : 7 ஜூலை, 2017 at 3:22 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:52 PM

பதச் சேதம்

சொற் பொருள்

இரு வினை பிறவி கடல்மூழ்கி

Advertisement

இருவினை: நல்வினை, தீவினை;

இடர்கள் பட்டு அலையபுகுதாதே

புகுதாதே: புகாமல்;

திரு அருள் கருணைப்ரபையாலே

ப்ரபையாலே: ஒளியாலே;

திரம் என கதியைபெறுவேனோ

திரம் என: ஸ்திரம் என (உறுதியான, நிலையான);

அரி அயற்கு அறிதற்குஅரியொனே

அரி அயற்கு: திருமாலுக்கும் பிரமனுக்கும்;

அடியவர்க்கு எளியற்குஅற்புத நேயா

நேயா: அன்பனே;

குரு என சிவனுக்கு அருள்போதா

போதா: ஞானாசாரியனே;

கொடுமுடி குமரபெருமாளே

 


இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி... நல்வினை, தீவினை ஆகியவற்றின் பயனாக ஏற்படும் பிறவியாகிய கடலிலே மூழ்கி,

இடர்கள்பட்டு அலையப் புகுதாதே... துன்பங்களை அடைந்து அலைவதற்குப் புகாதபடி,

திருவருட் கருணைப் ப்ரபையாலே... உன்னுடைய திருவருளான கருணையின் ஒளியாலே,

திரமெனக் கதியைப் பெறுவேனோ... (என்றும்) நிலைப்பதான நற்கதியை நான் அடைவேனோ (அடைய அருள வேண்டும்).

அரியயற்கு அறிதற்கு அரியானே... திருமாலாலும் பிரமனாலும்(கூட) அறிய முடியாதவனே!

அடியவர்க்கு எளிய அற்புதநேயா...அடியார்களால் எளிதாக அடைய முடிந்த அற்புதமான அன்பனே!

குருவெனச் சிவனுக்கு அருள்போதா... சிவனாருக்குக் குருவாக விளங்கி (உபதேசித்து) அருளிய ஞானாசாரியனே!

கொடுமுடிக் குமரப் பெருமாளே.... கொடுமுடியிலே வீற்றிருக்கின்ற குமரப் பெருமாளே!


சுருக்க உரை

திருமாலாலும் பிரமனாலும்கூட அறிய ஒண்ணாதவனே!  அன்பர்களால் எளிதில் அடைய வல்லவனே!  சிவனாருக்கு குருவாக இருந்து உபதேசித்தருளியவனே!  கொடுமுடியிலே வீற்றிருக்கும் குமரப் பெருமாளே!

நல்வினை, தீவினை ஆகியவற்றின் பயனாக ஏற்படும் பிறவிக் கடலிலே முழுகி, துயரங்களால் அவதிப்பட்டு அலைச்சலுறாதபடிக்கு உன்னுடைய திருவருளாகிய கருணைச் சுடரைக் கொண்டு நான் நிலையான நற்கதியைப் பெறுமாறு அருளவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.