முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 575

அத்திக்கரை என்னும் தலத்தை

Updated On : 5 ஜூன், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:10 PM

பதச் சேதம்

சொற் பொருள்

தொக்கை கழுவி பொன் தகும் உடை சுற்றி கலன் இட்டு கடி தரு சொக்கு புலி அப்பி புகழ் உறு களியாலே

Advertisement

 

தொக்கு: த்வக்—தோல் (இங்கே உடல் என்று பொருள்கொள்ள வேண்டும். விளக்கத்தில் காண்க); பொன்தகும்: பொன் எனத் தகும்; சொக்கு: சொக்க வைக்கும்; புலி: (பீதம், கலவை, வட்டிகை, புலி என்னும்) நான்குவகைச் சாந்துகளில் (pastes) ஒன்று;

சுத்தத்தை அகற்றி பெரியவர் சொல் தப்பிய அகத்தை புரி புல(ன்) சுற்றத்துடன் உற்று புவி இடை அலையாமல்

 

அகத்தைப் புரி: பாவச் செயல்களை செய்யும்; புலன்: ஐம்புலன்கள்;

முக் குற்றம் அகற்றி பல கலை கற்று பிழை அற்று த(ன்)னை உணர் முத்தர்க்கு அடிமை பட்டு இலகிய அறிவாலே

 

முக்குற்றம்: காமம், வெகுளி, மயக்கம்; இலகிய: விளக்கமுறுகின்ற;

முத்தி தவ(ம்) சுற்று கதி உறு சத்தை தெரிசித்து கரை அகல் முத்தி புணரிக்குள் புக வரம் அருள்வாயே

 

தவம் சுற்று: தவநிலையை அடைந்து; கதியுறு: நற்கதியை அடையச் செய்யும்; சத்தை: ‘சத்’ எனப்படும் மெய்ப்பொருள்; புணரி: கடல்;

திக்கு எட்டும் அடக்கி கடவுளருக்கு பணி கற்பித்து அருளறு சித்தத்தோடு அடுத்து படை கொடு பொரு சூரர்

 

பணி கற்பித்து: இட்ட ஏவல்களைச் செய்ய வைத்து; அருளறு: அருளற்ற;

செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த(ம்) துயர் கெட்டு பதி பெற அருள்வோனே

 

செச்சை: (ஒழுகும் ரத்தத்தால்) சிவந்த; சத்திப் படை: வேல்; சுரர்பதி: இந்திரன்; பதிபெற: தன்னுடைய பொன்னுலகைப் பெற;

அக்கை புனை கொச்சை குற மகள் அச்சத்தை ஒழித்து கரி வரும் அத்தத்தில் அழைத்து பரிவுடன் அணைவோனே

 

அக்கை—அக்கு: சங்குமணி; கொச்சைக் குறமகள்: குழறிப் பேசும் கொச்சைச் சொல்லை உடையவளான வள்ளி (கொச்சை என்பதற்குப் பலரும் கொள்ளும் ‘இழிந்த குலத்தவளான வள்ளி’ என்னும் பொருள் அருணகிரியாரின் இதயத்துக்கு ஒவ்வாதது); அத்தத்தில்: வழியில்;

அப்பை பிறையை கட்டிய சடை அத்தர்க்கு அருமை புத்திர விரி அத்திக்கரை இச்சித்து உறை தரு பெருமாளே.

 

அப்பை: நீரை (கங்கையை);

தொக்கைக் கழுவிப் பொன் தகும் உடை சுற்றி கலன் இட்டுக் கடி தரு சொக்குப் புலி அப்பிப் புகழ் உறு களியாலே... உடலை* (மட்டும்) கழுவிக்கொண்டும்; பொன் எனத்தகும் ஆடையைச் சுற்றிக்கொண்டும்; அபரணங்களை அணிந்துகொண்டும்; சொக்க வைக்கின்ற சாந்துக் கலவையைப்ப் பூசிக்கொண்டு திரியும் (பெண்களைப்) புகழ்வதால் ஏற்படுகின்ற மனமகிழ்ச்சியால்;

(* மனத்தின் அழுக்கை அப்படியே வைத்துக்கொண்டு உடலை மட்டுமே சுத்தப்படுத்திக்கொள்பவர்கள் என்பதனால் ‘உடலழுக்குப் போக’ என்றுகூடச் சொல்லாமல், வெறும் தோலைக் கழுவிக்கொள்பவர்கள் என்று குறித்தார்.  இதையே வள்ளுவரும் ‘மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாதர் பலர்’ என்றார்.)

சுத்தத்தை அகற்றிப் பெரியவர் சொல் தப்பி அகத்தைப் புரி புல(ன்) சுற்றத்துடன் உற்றுப் புவி இடை அலையாமல்... பரிசுத்த நிலை ஒழித்தும்; பெரியவர்களுடைய புத்திமதிக்கு மாறாக நடந்துகொண்டும்; பாவச் செயல்களை செய்வதான ஐம்புலன்களான சுற்றத்தார்கள் (காட்டும்வழியில்) சென்றும் இந்த உலகத்திலே திரியாதபடி;

முக் குற்றம் அகற்றிப் பல கலை கற்றுப் பிழை அற்று தன்னை உணர் முத்தர்க்கு அடிமைப் பட்டு இலகிய அறிவாலே... காமம், கோபம், மயக்கம் ஆகிய மூன்று குற்றங்களையும் நீக்கி; கலைநூல்கள் பலவற்றைக் கற்று; பிழைகளைக் களைந்து; தன்னை உணர்ந்தவர்களான ஞானியருக்கு அடிமைபூணுவதால் விளக்கம்பெறுகின்ற அறிவைக்கொண்டு;

முத்தித் தவ(ம்) சுற்றுக் கதி உறு சத்தைத் தெரிசித்து கரை அகல் முத்திப் புணரிக்குள் புக வரம் அருள்வாயே... முக்தியைத் தரவல்லதாகிய தவநிலையை அடைந்து; வீட்டுப் பேற்றை அளிக்கவல்லதான மெய்ப்பொருளைக் கண்டுணர்ந்து; கரையற்றதான ‘முக்தி’ என்னும் கடலுக்குள் நான் புகுமாறு எனக்கு வரம் தந்தருள வேண்டும். 

திக்கு எட்டும் அடக்கிக் கடவுளருக்குப் பணி கற்பித்து அருள் அறு சித்தத்தோடு அடுத்துப் படை கொடு பொரு சூரர்... எட்டுத் திக்குகளையும் அடக்கி வென்று; தேவர்களைக் குற்றேவல் செய்யவைத்து; அருளற்ற மனத்தோடு அணுகிவந்து ஆயுதங்களைக் கொண்டு போரிட்ட சூரர்களுடைய,

செச்சைப் புயம் அற்றுப் புக ஒரு சத்திப் படை விட்டு சுரர் பதி சித்த(ம்) துயர் கெட்டுப் பதி பெற அருள்வோனே... (வழிகின்ற குருதியால்) சிவந்த தோள்கள் வெட்டுண்டு விழும்படியாக ஒப்பற்ற சக்தியாயுதமான வேலை வீசி; இந்திரன் மனத்துயரம் நீங்கித் தன்னுடைய பொன்னுலகத்தை மீண்டும் பெறும்படியாக அருளியவனே!

அக்கைப் புனை கொச்சைக் குற மகள் அச்சத்தை ஒழித்து கரி வரும் அத்தத்தில் அழைத்துப் பரிவுடன் அணைவோனே... சங்குமாலையை அணிந்தவளும்; குழறிப் பேசும் கொச்சைச் சொல்லை உடைய குறமகளுமான வள்ளியுடைய பயத்தைப் போக்கி; (விநாயகனான) யானை வருகின்ற வழியில் அவளை அருகிலே அழைத்து அன்போடு அணைத்தவனே!

அப்பைப் பிறையைக் கட்டிய சடை அத்தர்க்கு அருமைப் புத்திர விரி அத்திக்கரை இச்சித்து உறை தரு பெருமாளே... கங்கையாற்றையும் பிறைச் சந்திரனையும் முடிந்துள்ள சடாமுடியை உடைய சிவனாரின் அருமைப் புத்திரனே!  பொலிவுடையதாகிய அத்திக்கரை என்னும் தலத்தை விரும்பி அங்கே வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

எட்டுத் திசைகளையும் அடக்கி வெற்றிகொண்டு; தேவர்களைக் குற்றேவல் புரியவைத்த கருணையற்றவர்களான சூரர்கள் போருக்கு ஆயுதங்களோடு வருகையிலே ஒப்பற்ற சக்தியாயுதத்தால் (வழிகின்ற குருதியால்) சிவந்திருக்கம் அவர்களுடைய தோளைத் துணித்து, இந்திரன் மனத்துயரம் கெட்டு, தன்னுடைய பொன்னுலகை மீண்டும் பெறுமாறு அருளியவனே!  மழலைச் சொல் பேசுகின்ற குறமகளான வள்ளிக்கு எதிரே விநாயகனான யானை வரவும், அவளுடைய அச்சத்தைப் போக்கி, அருகில் அழைத்து அணைத்துக் கொண்டவனே!  அத்திக்கரை என்னும் தலத்தை விருப்பத்தோடு அடைந்து அங்கே வீற்றிருக்கின்ற பெருமாளே! 

அக அழுக்குப் போகாமல் வெறும் தோலைமட்டும் தேய்த்துக் குளித்தும்; நல்ல ஆடைகளை உடுத்தும்; ஆபரணங்களைப் பூண்டும்; வாசனைக் கலவைகளைப் பூசியும் இருப்பவர்களான பெண்களைப் புகழ்ந்தும்; பெரியோர் காட்டும் தூய நெறியிலிருந்து விலகியும்; ஐம்புலன்களாகிய சுற்றத்தார் காட்டுகின்ற வழிகளில் திரிந்தும் இவ்வுலகத்தில் நான் மயங்காதபடி,

காமம், கோபம், மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் விலக்கி; பல நூல்களைக் கற்றுணர்ந்து; முக்தியைத் தரும் தவநிலையில் நிற்பவர்களான ஞானியருக்கு அடிமைபூண்டு, அதன் மூலமாக ஞானம் என்னும் கரையற்ற கடலுள் முழுகும்படியான வரத்தைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.