பதச் சேதம் | சொற் பொருள் |
திரு உரூப நேராக அழகதான மா மாய திமிர மோகமானார்கள் கலை மூடும்
| திரு: திருமகள்; உரூப: உருவத்துக்கு; நேராக: இணையாக; திமிர: இருண்ட; கலை: ஆடை; |
சிகரி ஊடு தே மாலை அடவி ஊடு போய் ஆவி செருகும் மால் அனாசார வினையேனை
| சிகரி: மலை, (இங்கே) மார்பகம்; தே: இனிய; அடவி: காடு (இங்கே) கூந்தல்; மால்: மயக்கம்; |
கரு விழாது சீர் ஓதி அடிமை பூணலாமாறு கனவில் ஆள் சுவாமி நின் மயில் வாழ்வும்
| கரு விழாது: கருவிலே விழாதபடி, பிறப்பெடுக்காதபடி; |
கருணை வாரி கூர் ஏக முகமும் வீர(ம்) மாறாத கழலு(ம்) நீப வேல் வாகு(ம்) மறவேனே
| கருணை வாரி: கருணைக் கடல்; ஏக முகம்: ஒரே முகம்; நீப: கடப்ப (மாலை); வாகு: தோள்; |
சருவ தேவ தேவாதி நமசிவாய நாமாதி சயில நாரி பாக ஆதி புதல்வோனே
| நாமாதி: பெயரை உடைய; சயில நாரி: மலை மங்கை, உமை; பாகாதி: பாகத்திலே உடைய; |
சத மகீ வல் போர் மேவு குலிச பாணி மால் யானை சகசமான சாரீ செய் இளையோனே
| சத மகீ: நூறு யாகங்களைச் செய்தவன், இந்திரன்; குலிச(ம்): வஜ்ராயுதம்; பாணி: கையில் பற்றிய; சகசமான: சகஜமான, வழக்கமான; சாரீ: சாரி—வட்டமாக வளைய வருதல், உலாப் போதல்; |
மருவு லோகம் ஈரேழும் அளவிட ஒ(ண்)ணாவன வரையில் வீசு தாள் மாயன் மருகோனே
| ஒணாவானவரை: முடியாதபடி; |
மநு நியாய சோழ நாடு தலைமை யாகவே மேலை வயலி மீது வாழ் தேவர் பெருமாளே.
| மநு நியாய: மனுநீதி(ச் சோழன்); சோணாடு: சோழ நாடு; வயலி: வயலூர்; |
திரு உரூப நேராக அழகதான மா மாய திமிர மோக மானார்கள்... திருமகளுக்கு இணையான அழகையும்; பெருமாயத்தைக் கொண்டதும் இருண்டதுமான மோகத்தை ஊட்டுகின்ற மான்போன்ற பெண்களுடைய,
கலை மூடும் சிகரி ஊடு தே மாலை அடவி ஊடு போய் ஆவி செருகும் மால் அனாசார வினையேனை... ஆடையில் மறைந்திருக்கின்ற மார்பகங்களிலும்; பூ மாலையை அணிந்திருக்கின்ற காட்டைப் போல அடர்த்தியான கூந்தலிலும் உயிர் சிக்கிக் கொள்வதான மயக்கத்தையும் ஒழுக்கமற்ற தன்மைமையும் கொண்ட வினைநிறைந்த என்னை,
கரு விழாது சீர் ஓதி அடிமை பூணலாமாறு கனவில் ஆள் சுவாமீ... கருவிலே திரும்பவும் விழாதபடி உனது புகழைப் பாடி உனக்கு அடிமையாக ஆகும்படியாக என்னைக் கனவிலே வந்து ஆண்டுகொண்ட சுவாமியே!
நின் மயில் வாழ்வும் கருணை வாரி கூர் ஏக முகமும் வீர(ம்) மாறாத கழலு(ம்) நீப வேல் வாகு(ம்) மறவேனே... மயில்மீது வீற்றிருக்கின்ற உன்னுடைய தோற்றத்தையும்; கருணை, கடலாகத் ததும்புகின்ற ஒரு முகத்தையும்*; வீரத்தில் என்றும் மாற்றமில்லாத உன்னுடை கழல்களையும்; கடப்ப மாலையையும்; வேலை ஏந்தியிருக்கும் தோளையும் என்றும் மறக்க மாட்டேன்.
(* முருகன் தன் கனவில் ஏக முகமாகக் காட்சிகொடுத்ததைச் சொல்கிறார்.)
சருவ தேவ தேவாதி நமசிவாய நாமாதி சயில நாரி பாக ஆதி புதல்வோனே... எல்லா தேவர்களுக்கும் தேவனாக விளங்குபவனும்; நமசிவாய என்னும் திருநாமத்தைக் கொண்டவனும்; மலைமகளான உமையைத் தன் இடபாகத்தில் கொண்டவனுமான சிவபெருமானின் புதல்வனே!
சத மகீ வல் போர் மேவு குலிச பாணி மால் யானை சகசமான சாரீ செய் இளையோனே... நூறு (அசுவமேத) யாகங்களைச் செய்தவனும்; வலியதான போரில் ஈடுபட்டவனும்; வஜ்ராயுதத்தைக் கையில் தரித்திருப்பவனுமான இந்திரனுடைய பெரிய யானையாகிய ஐராவதத்தில் ஏறிக்கொண்டு வெகு இயல்பாக உலவிவருகின்ற இளையவனே!
மருவு லோகம் ஈரேழும் அளவிட ஒ(ண்)ணாவான வரையில் வீசு தாள் மாயன் மருகோனே... பொருந்தியிருப்பதான பதினான்கு உலகங்களிலும் உள்ளவர்காளல் அளவிடமுடியாதபடிக்குத் தன் திருவடியால் (மண்ணையும் விண்ணையும்) அளந்த திருமாலுடைய மருகனே!
மநு நியாய சோ (ழ) நாடு தலைமை யாகவே மேலை வயலி மீது வாழ் தேவர் பெருமாளே.... நியாயம் தவறாத மனுநீதிச் சோழன் அரசாண்ட சோழநாடு தலைமை ஏற்கவேண்டும் என்பதற்காக மேலை வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கின்றவனும் தேவர்களின் தலைவனுமான பெருமாளே!
சுருக்க உரை
எல்லா தேவர்களுக்கும் தேவனாக விளங்குபவரும்; நமசிவாய என்ற திருநாமத்தைக் கொண்டவரும்; மலை மகளான உமையம்மையை இடபாகத்தில் வைத்தவருமான சிவபெருமானுடைய புதல்வனே! நூறு அசுவமேத யாகங்களைச் செய்துமுடித்தவனும்; வலிய போரில் ஈடுபட்டவனும்; வச்சிராயுதத்தைக் கையிலே தாங்கியவனுமான இந்திரனுடன் அவனுடைய ஐராவதத்தின் மீது ஏறிக்கொண்டு வெகு இயல்பாக உலா வருகின்ற இளையவனே! பதினான்கு உலகங்களில் உள்ளவர்களாலும் அளவிட்டுக் காண முடியாத அளவுக்குத் தன் திருவடியை நீட்டி மண்ணையும் விண்ணையும் அளந்த திருமாலின் மருகனே! நியாயம் தவறாமல் அரசாண்ட மனுநீதிச் சோழன் ஆண்டதாகிய சோழநாடு உயர் நிலையை அடைவதற்காகவென்றே மேலை வயலூரில் வீற்றிருப்பவனே! தேவர்களுடைய பெருமாளே!
திருமகளுக்கு இணையான அழகையும்; இருண்டதும் பெருமாயத்தை உடையதுமான மான்போன்ற கண்களை உடைய பெண்களுடைய ஆடையில் மறைந்திருக்கின்ற மார்பகங்களிலும்; அடர்த்தியான கூந்தலிலும் போய்ச் சிக்கிக்கொண்டு தொலைந்து போன உயிரைக் கொண்டவனும்; ஒழுக்கமற்றவனுமான என்னை, இனி ஒருபோதும் பிறவாதபடி உன்னுடைய புகழைப் பாடும்படியாக ஒற்றை முகத்தோடு என் கனவில் வந்து ஆண்டு கொண்டதையும்; கருணைக் கடலாகக் காட்சியளித்த திருமுகத்தையும்; கழலணிந்த திருவடிகளையும்; வேலேந்திய தோளையும் நான் என்றும் மறவேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.