முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 567

ஆனைமுகனுக்கு இளையவனாகிய கந்தன்

Updated On : 28 மே, 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:07 PM

பதச் சேதம்

சொற் பொருள்

ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர் அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே

Advertisement

 

ஐங்கரனை ஒத்த மனம்: வேகத்தாலே (உலகம் வலம் வந்த) ஐங்கரனை ஒத்த மனம்;

அம் புவி தனக்குள் வளர் செம் தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே

 

செந்தமிழ் வழுத்தி: செந்தமிழால் வாழ்த்தி;

தங்கிய தவத்து உணர்வு தந்து அடிமை முத்தி பெற சந்திர வெளிக்கு வழி அருள்வாயே

 

தங்கிய: நிலைபெற்ற;

தண்டிகை கனப் பவுசு எண் திசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே

 

தண்டிகை: பல்லக்கு; கனப் பவுசு: பெரிய கௌரவம்; சம்ப்ரம: சிறப்பான;

மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் எனு(ம்) உற்ற மனம் உன்றனை நினைத்து அமைய அருள்வாயே

 

 

மண்டலிகர் ரப் பகலும் வந்து சுபரட்சை புரி வந்து அணைய புத்தியினை அருள்வாயே

 

மண்டலிகர்: அதிகாரிகள், அரசர்; ரப் பகலும்: இரவும் பகலும் (ராப் பகலும் என்பதன் குறுக்கல் விகாரம்); சுபரட்சை: நன்முறையில் காப்பதற்கான; புரி: புரிவதற்காக; வந்தணைய: வந்து சூழ;

கொங்கில் உயிர் பெற்று வளர் தென் கரையில் அப்பர் அருள் கொண்டு உடல் உற்ற பொருள் அருள்வாயே

 

 

குஞ்சர முகற்கு இளைய கந்தன் என வெற்றி பெறு கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே.

 

 

ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர் அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே... (உலகை வலம் வந்த) விநாயகனை ஒத்த (வேகத்தையுடைய) மனத்தையும்* ஐம்புலன்களையும் நீக்கி, அதன் விளைவாக ஏற்படும் இரவு-பகல் அற்ற நிலையை அருள்வாயாக.

(* இதையே ‘மனோவேகம்’ என்கிறோம்.)

அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தியுனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே... இந்த உலகத்திலே பெருகிச் செழித்திருக்கின்ற செந்தமிழாலே உன்னைப் போற்றி அன்போடு துதிக்கின்ற மனத்தை அருள்வாயாக.

தங்கிய தவத் துணர்வு தந்து அடிமை முத்தி பெற சந்திர வெளிக்கு வழி அருள்வாயே...நிலைபெற்றிருப்பதான தபோநிலை உணர்வைத் தந்து, உன்னுடைய அடிமையாகிய நான் முக்தியை அடைவதற்காக, சந்திரவெளியைக் காணும்படியான யோக மார்க்கத்தைக் காட்டி அருள்வாயாக.

தண்டிகை ககனப்பவுசு எண்டிசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே... எட்டுத் திக்கிலும் உள்ளவர்களும் மதிக்கும்படியான சிறப்பான வகையிலே பல்லக்கையும் பெருமையையும் கௌரவத்தையும் அருள்வாயாக.

மங்கையர் சுகத்தை வெகு இங்கிதமெனுற்றமனம் உன்றனை நினைத் தமைய அருள்வாயே...பெண்களுடைய சுகமே இனிமையானது என்றெண்ணிக்கிடந்த என் மனம், உன்னையே நினைத்த நிலையில் அமைந்திருக்க அருள்வாயாக.

மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி வந்தணைய புத்தியினை அருள்வாயே... மன்னர்களும் அதிகாரிகளும் மக்களை இனிதே காக்கின்ற வழிகளை அறிவதற்காக என்னைவந்து சூழும்போது, (அவர்களுக்கு விளக்குவதற்கான) புத்தியினை எனக்கு அருள்வாயாக.

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையில் அப்பரருள் கொண்டு உடலுற்ற பொருள் அருள்வாயே...கொங்கு தேசத்தில் தென்கரை நாடான திருப்புக்கொளியூரில் ‘அவிநாசி’ அப்பரான சிவனருளால் உயிர்பெற்று எழுந்திருந்த (முதலை உண்ட பாலனுடைய உடலில்*) உயிர் மீண்டும் பொருந்திய ரகசியப் பொருளை எனக்கு உபதேசித்து அருள்வாயாக.

(* சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடி, முதலையுண்ட பாலனை உயிர்த்தெழச் செய்த வரலாறு நேற்று சொல்லப்பட்டது.)

குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றி பெறு கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே....ஆனைமுகனுக்கு இளையவனாகிய கந்தன் என்னும் வெற்றிக் கீர்த்தியைப் பெற்றவனே!  கொங்கணகிரி என்ற மலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

ஆனைமுகனுக்கு இளையவனாகிய கந்தன் என்னும் வெற்றிப் புகழைப் பெற்றவனே!  கொங்கணகிரி என்னும் மலைத்தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

உலகத்தை வலம்வந்த விநாயகப் பெருமானை ஒத்த வேகத்தைக் கொண்டதாகிய மனத்தையும் ஐம்புலன்களையும் அறச் செய்து; அதனால் கிடைக்கின்ற இரவு-பகலற்ற நிலைமையை அருள்வாயாக.  இந்த உலகத்திலே செழித்துப் பரவியிருக்கின்ற செந்தமிழைக் கொண்டு உன்னைப் போற்றித் துதிக்கின்ற மனோநிலையை அருள்வாயாக.  எப்போதும் நிலைத்திருப்பதான தபோநிலையாகிய உணர்வைத் தந்து, அடிமையான நான் முக்தியைப் பெறுவதற்காக சந்திரவெளியைக் காணும்படியான யோகமார்க்கத்தைக் காட்டி அருள்வாயாக.  எட்டுத் திசைகளில் உள்ளோரும் மதிக்கும்படியான பல்லக்கையும் பெருமையையும் கௌரவத்தையும் சிறப்பான முறையிலே தந்தருள்வாயாக.  பெண்களிடம் பெறுகின்ற இன்பமே இனிதானது என்று நினைக்கின்ற என் மனம், எப்போதும் உன்னுடைய நினைவில் நிலைபெற்று நிற்க அருள்வாயாக.  அரசர்களும் அதிகாரிகளும் மக்களை நல்ல முறையில் காப்பதற்கான ஆலோசனையைப் பெறவேண்டி என்னைச் சூழ்கையிலே, அவர்களுக்கு உரிய ஆலோசனையைத் தருவதற்கான புத்தியை எனக்குத் தந்தருள்வாயாக. 

கொங்கு தேசத்தின் தென்கரை நாடான திருப்புக்கொளியூரில் முதலை விழுங்கிய பாலகனை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிகம் பாடி, அவினாசியப்பரான சிவனருளால் அந்த பாலகனுடைய உயிர் அவனுடைய உடலில் மீண்டும் பொருந்தியும்; அந்த உடல் நல்ல வளர்ச்சிபெற்றதாகவும் மீண்டெழுந்ததன் ரகசியப் பொருளை எனக்கு உபதேசித்து அருள்வாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.