பகுதி - 569
கதிர்காமத்தை அடைந்து வீற்றிருக்கும் முருகோனே
பதச் சேதம் | சொற் பொருள் |
சரத்தே உதித்தாய் உரத்தே குதித்தே சமர்த்தாய் எதிர்த்தே வரு சூரை Advertisement
| சரத்தே உதித்தாய்: நாணற் காட்டில் தோன்றினாய்; உரத்தே: வலிமையுடன்; |
சரி போன மட்டே விடுத்தாய் அடுத்தாய் தகர்த்தாய் உடல் தான் இரு கூறா
| சரிப்போன மட்டே: சரியாக நடந்துகொண்ட வரையில்; அடுத்தாய்: நெருங்கினாய்; |
சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய் செகுத்தாய் பல தார் விருதாக
| சிரத்தோடு: தலையோடு; உரத்தோடு: மார்போடு; செகுத்தாய்: கொன்றாய்; பல தார்: பல மாலைகளை; விருதாக: வெற்றிச் சின்னமாக; |
சிறை சேவல் பெற்றாய் வலக்காரம் உற்றாய் திரு தாமரை தாள் அருள்வாயே
| சிறைச் சேவல்: சிறகை உடைய சேவல்; வலக்காரம்: வெற்றி; |
புரத்தார் வரத்தார் சரம் சேகரத்தார் பொரத்தான் எதிர்த்தே வரு போது
| புரத்தார்: திரிபுரத்தவர்கள்; சரச் சேகரத்தார்: அம்புகளின் கூட்டத்தைக் கொண்டவர்கள்; |
பொறுத்தார் பரித்தார் சிரித்தார் எரித்தார் பொரித்தார் நுதல் பார்வையிலே பின்
| பரித்தார்: (போர்க்கோலத்தைத்) தாங்கினார்; பொரித்தார்: பொரிந்துபோகச் செய்தார்; |
கரி தோல் உரித்தார் விரித்தார் தரித்தார் கருத்தார் மருத்து ஊர் மதனாரை
| கரித்தோல்: யானையின் தோலை; மருத்து: காற்று, தென்றல்; மருத்து ஊர்: தென்றலில் ஊர்ந்துவரும்; மதனாரை: மன்மதனை; |
கரி கோலம் இட்டார் க(ண்)ணுக்கு ஆன முத்தே கதிர்காமம் உற்றார் முருகோனே.
| கரிக்கோலம் இட்டார்: சாம்பலாக்கினார்; கணுக்கான முத்தே: (அப்படிப்பட்டவருடைய) கண்ணுக்கு ஆன முத்தே; |
சரத்தே யுதித்தாய் உரத்தே குதித்தே சமர்த்தாய் எதிர்த்தே வருசூரை... நாணல் காடாகிய சரவணப் பொய்கையிலே உதித்தவனே! வலிமையோடு குதித்தபடி ஆற்றலோடு எதிர்த்து வந்த சூரபத்மனை,
சரிப்போன மட்டே விடுத்தாய் அடுத்தாய் தகர்த்தாய் உடற்றான் இருகூறா... சரியான முறையிலே நடந்துகொண்ட வரையிலே விட்டுவைத்தாய்; (அத்துமீறிய போது) நெருங்கினாய்; உடலை இரண்டு கூறாகும்படியாகப் (பிளந்தாய்);
சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய் செகுத்தாய்... (அவனுடைய சைனியங்களின்) தலைகளையும் மார்புகளையும் அறுத்துக் குவித்தாய்; கொன்றாய்;
பலத்தார் விருதாகச் சிறைச்சேவல் பெற்றாய் வலக்காரம் உற்றாய் திருத்தாமரைத்தாள் அருள்வாயே... வெற்றிச் சின்னமாகப் பல மாலைகளையும் சிறகுடைய சேவலையும் பெற்றாய்; வெற்றியடைந்தாய்; (இப்படிப்பட்ட நீ உன்னுடைய) தாமரைப் பாதங்களைத் தந்து ஆண்டருள வேண்டும்.
புரத்தார் வரத்தார் சரச்சேகரத்தார் பொரத்தான் எதிர்த்தே வருபோது.... திரிபுரத்தில் இருந்தவர்களும்; வரம்பெற்றவர்களும்; கூட்டமான பல அம்புகளை உடையவர்களுமான மூன்று அசுரர்களும் போர்புரிவதற்காக எதிர்த்து வந்தபோது,
பொறுத்தார் பரித்தார் சிரித்தார் எரித்தார் பொரித்தார் நுதற்பார்வையிலே .... ஆரம்பத்தில் பொறுத்துக்கொண்டார்; பின்னர் போர்க்கோலம் தரித்தார்; சிரித்துப் புரமெரித்தார்; தன் நெற்றி விழியைத் திறந்து பொரிந்துபோகும்படிச் செய்தார்;
பின்கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்... அதற்குப் பிறகு கஜமுகாசுரனாகிய யானையின் தோலை உரித்து, விரித்து, அதனை ஆடையாக அணிந்துகொண்டார்;
கருத்தார் மருத்தூர் மதனாரை கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே கதிர்க்காம முற்றார் முருகோனே... (தேவர்களின்) கருத்துக்கு இணங்க தென்றல் காற்றைத் தேராகக்கொண்டு ஏறிவந்த மன்மதனைச் சாம்பலாக்கிய சிவனாருடைய கண்ணுக்கு இனிய முத்தே! கதிர்காமத்தை அடைந்து வீற்றிருக்கும் முருகோனே!
சுருக்க உரை
திரிபுரத்தில் இருந்தவர்களும்; வரங்களைப் பெற்றவர்களும்; பல ஆயுதங்களைத் தாங்கியவர்களுமான அசுரர்கள் போருக்கு எழுந்து வந்தபோது முதலிலே பொறுத்துக்கொண்டவரும்; சிரித்துப் புரமெரித்தவரும்; தன் நெற்றிக் கண்ணாலே சுட்டெரித்தவரும்; கஜமுகாசுரனாகிய யானையின் தோலை உரித்தவரும்; விரித்தவரும்; அதை ஆடையாகத் தரித்தவரும்; தேவர்களின் கருத்துக்கிணங்க தென்றல் காற்றையே தேராகக் கொண்டு வந்த மன்மதனைச் சாம்பலாக்கியவருமான சிவபிரானுடைய கண்ணுக்கு இனிய முத்தே! கதிர்காமத்தை அடைந்து வீற்றிருக்கும் முருகோனே!
சரவணப் பொய்கையிலே உதித்தவனே! வலிமையுடன் குதித்து ஆற்றலுடன் எதிர்த்து வந்த சூரன், சரியாக நடந்துகொண்டவரையிலே சும்மா இருந்து; (அவன் வரம்பு மீறியதும்) அவனை நெருங்கி, உடல் இரண்டு கூறாக ஆகும்படிப் பிளந்தவனே! சூரனுடைய சைனியங்களின் தலைகளையும் மார்புகளையும் அறுத்துக் குவித்தவனே! கொன்றவனே! பல மாலைகளையும் சிறகுடைய சேவலையும் வெற்றிச் சின்னமாகப் பெற்றவனே! உன்னுடைய தாமரைப் பாதங்களை அடியேனுக்குத் தந்து ஆண்டருள வேண்டும்.