முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 571

மலர்ப்பாதத்தில் வைத்த பக்தியில்

Updated On : 31 மே, 2017 at 4:26 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:08 PM

பதச் சேதம்

சொற் பொருள்

அகத்தினை கொண்டு இப்புவி மேல் சில தினத்து மற்று ஒன்று அறியாது பின் அவத்துள் வைக்கும் சித்தசனார் அடு கணையாலே

Advertisement

 

அகத்தினைக் கொண்டு: அகங்காரத்தைக் கொண்டு; மற்றொன்று அறியாது: வேறு எந்த சன்மார்க்கத்தையும் அறியாமல்; அவத்துள்: கேட்டினுள்; சித்தசனார்: மன்மதன்; அடு கணை: எய்யும் அம்பு;

அசுத்த மை கண் கொட்பு உறு பாவையர் நகைத்து உரைக்கும் பொய் கடல் மூழ்கியே அலக்க(ண்)ணில் சென்று தடுமாறியே சில நாள் போய்

 

கொட்புறு: சுழற்றுகின்ற; அலக்கண்: துன்பம்;

இகத்தை மெய் கொண்டு இப்புவி பாலர் பொன் மயக்கில் உற்று அம் பற்றை விடாது உடலில் இளைப்பு இரைப்பும் பித்தமுமாய் நரை முதிர்வா(கி)யே

 

இகத்தை: இம்மையை, இவ்வுலக வாழ்வை; அம் பற்றை: அப் பற்றை;

எம கயிற்றில் சிக்கி நிலா முன் உன் மலர் பதத்தின் பத்தி விடா மனது இருக்கு(ம்) நல் தொண்டர்க்கு இணையாக உன் அருள் தாராய்

 

நிலாமுன்: நிற்பதன் முன்னால்; பத்தி: பக்தி;

புகழ் சிலை கந்தர்ப்பனுமே பொடி பட சிரித்து அண் முப்புரம் நீறு செய் புகை கனல் கண் பெற்றவர் காதலி அருள் பாலா

 

சிலை: வில்; கந்தர்ப்பன்: மன்மதன்; அண்: அணுகிய;

புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு அனைத்தும் முற்றும் செற்றிடவே பகை புகட்டி வைக்கும் சக்கிர பாணி தன் மருகோனே

 

புவிக்குள்: பூமியில்; யுத்தம்: யுத்தம் வரவும்; செற்றிட: பகைகொள்ள; சக்கிரபாணி: (பாணி: கை) சக்கரத்தை ஏந்திய கையன்—திருமால்;

திகழ் கடப்பம் புட்பமது ஆர் புயம் மறைத்து உரு கொண்ட அற்புதமாகிய தினை புனத்து இன்புற்று உறை பாவையை அணை சீலா

 

 

செகத்தில் உச்சம் பெற்ற அமராவதி அதற்கும் ஒப்ப என்று அழகே செறி திருக்கழுக் குன்றத்தினில் மேவிய பெருமாளே.

 

அமராவதி: விண்ணுலகம்;

அகத்தினைக் கொண்டு இப்புவி மேல் சில தினத்து மற்று ஒன்று உற்று அறியாது... அகங்காரத்தைக் கொண்டு இந்த உலகிலே சிலகாலத்துக்கு வேறொரு சன்மார்க்கத்தையும் அறிந்துகொள்ளாமல்;

பின் அவத்துள் வைக்கும் சித்தசனார் அடு கணையாலே அசுத்த மைக் கண் கொட்பு உறு பாவையர் நகைத்து உரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ... அதற்குமேலே, கேட்டைய தருகின்ற மன்மதன் எய்கின்ற அம்புகளால் (ஆட்கொள்ளப்பட்டு) தூய்மையற்றதும் மை பூசியதுமான கண்களைச் சுழற்றுகின்ற பெண்கள் சிரித்துச் சிரித்துப் பேசுகின்ற பொய் என்ற கடலில் மூழ்கி;

அலக்க(ண்)ணில் சென்றுத் தடுமாறியெ சில நாள் போய் இகத்தை மெய்க் கொண்டு இப்புவி பாலர் பொன் மயக்கில் உற்று... துன்பத்தில் அகப்பட்டு, தடுமாற்றம் அடைந்து இவ்வாறு சிலநாட்கள் கழிந்தபின்னால்; இவ்வுலக வாழ்வை மெய்யாகக் கருதி, நிலம், குழந்தைகள், செல்வம் போன்றவற்றின் மயக்கத்துக்கு ஆட்பட்டு;

அம் பற்றை விடாது உடலில் இளைப்பு இரைப்பும் பித்தமுமாய் நரை முதிர்வா(கி)யே எமக் கயிற்றின் சிக்கி நி(ல்)லா முன்... அந்தப் பற்றுகளை விடாதபடி இருந்து; உடலில் சோர்வும்; மூச்சிரைப்பும் பித்தமும் ஏற்பட்டு; தலை நரைத்து; வயதேறிப்போய் யமனுடைய பாசக்கயிற்றில் அகப்பட்டுக்கொண்டு நான் நிற்பதற்கு முன்னே,

உன் மலர்ப் பதத்தின் பத்தி விடா மனது இருக்கு(ம்) நல் தொண்டர்க்கு இணையாக உன் அருள் தாராய்... உன்னுடைய மலர்ப் பாதங்களில் வைத்துள்ள பக்தியை விட்டுவிடாத மனம்கொண்டுள்ள நல்ல அடியார்களுக்குச் சமமாக இருக்கும்படியாக உன்னுடைய திருவருளைத் தந்தருள வேண்டும்.

புகழ்ச் சிலைக் கந்தர்ப்பனுமே பொடி படச் சிரித்து அண் முப்புர(ம்) நீறு செய் புகைக் கனல் கண் பெற்றவர் காதலி அருள் பாலா... புகழ்வாய்ந்த (கரும்பு) வில்லை ஏந்திய மன்மதன் எரிந்து சாம்பலாகும்படியாகச் சிரித்து; தன்னை நெருங்கி வந்த திரிபுரங்களையும் சாம்பலாக்கிய நெருப்புவிழியைப் பெற்றவரான சிவனாருடைய காதலியான உமாதேவியார் பெற்ற மகனே! 

புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு அனைத்து(ம்) முற்றும் செற்றிடவே பகை புகட்டி வைக்கும் சக்கிர பாணி தன் மருகோனே... உலகத்தில் போர் மூளும்படியும்; (திருதிராஷ்டிரனுடைய) பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளும் மற்ற அரசர்களும் பகைகொள்ளும்படியாக (பாரதப்) போரைத் தூண்டி நடத்தியவனும்; சக்ராயுதத்தை ஏந்தியவனுமான திருமாலின் மருகனே!

திகழ்க் கடப்பம் புட்பமது ஆர் புய(ம்) மறைத்து உருக் கொண்ட அற்புதமாகிய தினைப் புனத்து இன்புற்று உறை பாவையை அணை சீலா... திகழ்கின்ற கடப்ப மாலைகள் பருத்த தோள்களை மறைக்கின்ற கோலத்தைக் கொண்டிருப்பவனே!  அற்புதமான தினைப்புனத்தில் இன்புற்று வாழ்ந்த குறமகளைத் தழுவுகின்ற குணசீலனே! 

செகத்தில் உச்சம் பெற்ற அமராவதி அதற்கும் ஒப்ப என்று அழகே செறி திருக் கழுக் குன்றத்தினில் மேவிய பெருமாளே.... எல்லா உலகங்களிலும் உயர்ந்தது என்ற சிறப்பைப்பெற்ற தேவலோகத்துக்கு ஈடாகும்படியாக விளங்குவதும் அழகு நிறைந்ததுமான திருக்கழுக்குன்றத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

புகழ்பெற்ற கரும்பு வில்லை ஏந்திய மன்மதனும்; நெருங்கி வந்தவையான திரிபுரங்களும் சாம்பலாகிப் போகும்படியாக தீயெழும்புகின்ற நெற்றிவிழியைக் கொண்ட சிவனாருடைய காதலியான உமையம்மை அருளிய பாலகனே!  உலகத்தில் யுத்தம் ஏற்படும்படியாக திருதிராஷ்டிரனுடைய பிள்ளைகள், பேரன்கள், இதர அரசர்கள் யாவரும் பகைகொள்ளுமாறு செய்து போரைத் தூண்டி நடத்திய சக்ரபாணியாகிய திருமாலுடைய மருமகனே!  நிறைந்திருக்கும் கடப்ப மலர் மாலைகள் மறைக்கின்ற பருத்த தோள்களை உடைய கோலத்தில் விளங்குபவனே!  அற்புதமான தினைப்புனத்திலே இன்புற்றிருந்த வள்ளியைத் தழுவுகின்ற குணசீலனே!  எல்லா உலகங்களிலும் மேம்பட்டதான அமராவதிக்கு இணையானதும் அழகு நிறைந்ததுமான திருக்கழுக்குன்றத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

அகந்தையைக் கொண்டு இந்த உலகத்திலே வேறொரு சன்மார்க்கம் எதையும் அறியாமலும்; அதற்கடுத்ததாக கேடு விளைவிக்கின்ற மன்மதன் எய்கின்ற சரங்களுக்கு ஆட்பட்டும்; தூய்மையற்றதும் மை பூசியதுமான கண்களைச் சுழற்றுகின்ற பெண்கள் சிரித்துச் சிரித்துப் பேசுகின்ற பொய்மையாகிய கடலில் மூழ்கியும் சில நாட்களைக் கழித்து;  இவ்வுலக வாழ்வே உண்மையானது என்றெண்ணி நிலம், பொருள், குழந்தைகள் என்று பலவகையான பற்றுகளில் அகப்பட்டு, அவற்றை ஒழிக்க முடியாமல்; உடலில் தளர்ச்சி தோன்றி, மூச்சிரைத்து, தலை நரைத்து, வயதேறி, யமனுடைய பாசக்கயிற்றிலே அகப்பட்டுக்கொண்டு நிற்பதற்கு முன்னாலே உன்னுடைய மலர்ப்பாதத்தில் வைத்த பக்தியில் மாறாமல் நிற்கின்ற அன்பர் திருக்கூட்டத்துக்கு இணையாக அடியேன் இருக்கும்படியாக உன்னுடைய திருவருளைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.