பகுதி - 700
அடியேனை உன் பாதக்கமலத்தில் ஏற்றருள்
அடியேனை உன் பாதக்கமலத்தில் ஏற்றருள வேண்டும் என்று கோரும் இப்பாடல் காஞ்சித் தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் இரண்டு எழுத்துகளையும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளையும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்கள் ஒரு நெடில், இரண்டு குறில் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று ஆகியவற்றைக் கொண்டு அமைந்துளன.
தான தத்தனத் தான தானனத்
தான தத்தனத் தான தானனத்
தான தத்தனத் தான தானனத் தனதான
Advertisement
சீசி முப்புரக் காடு நீரெழச்
சாடி நித்திரைக் கோசம் வேரறச்
சீவன் முத்தியிற் கூட வேகளித் தநுபூதி
சேர அற்புதக் கோல மாமெனச்
சூரி யப்புவிக் கேறி யாடுகச்
சீலம் வைத்தருட் டேறி யேயிருக் கறியாமற்
பாசம் விட்டுவிட் டோடி போனதுப்
போது மிப்படிக் காகி லேனினிப்
பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் தடியேனைப்
பார டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித் தார மீதெனப்
பாத பத்மநற் போதை யேதரித் தருள்வாயே
தேசில் துட்டநிட் டூர கோதுடைச்
சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்
தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் தருள்வோனே
சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்
பாணி வித்துருப் பாத னோர்புறச்
சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் குருநாதா
காசி முத்தமிழ்க் கூடலேழ்மலைக்
கோவ லத்தியிற் கான நான்மறைக்
காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் புலிவேளூர்
காள அத்தியப் பால்சி ராமலைத்
தேச முற்றுமுப் பூசை மேவிநற்
காம கச்சியிற் சால மேவுபொற் பெருமாளே.