பகுதி - 809
துள்ளும் மத வேள் கை...
பதச் சேதம் | சொற் பொருள் |
துள்ளும் மத வேள் கை கணையாலே Advertisement
| மதவேள்: மன்மதன்; கைக் கணையாலே: கையால் எய்யும் மலர்க் கணைகளாலும்; |
தொல்லை நெடு நீல கடலாலே
| தொல்லை: பழமையான |
மெள்ள வரு(ம்) சோலை குயிலாலே
| சோலைக் குயிலாலே: என்பது குயிலின் இசையைக் குறிக்கும்; |
மெய் உருகும் மானை தழுவாயே
|
|
தெள்ளு தமிழ் பாட தெளிவோனே
| தெளிவோனே: தெளிந்த ஞானசம்பந்தராக வந்தவனே; |
செய்ய குமரேச திறலோனே
| செய்ய: சிவந்த; |
வள்ளல் தொழு(ம்) ஞான கழலோனே
| வள்ளல்: சிவன்; |
வள்ளி மணவாள பெருமாளே. |
|
துள்ளுமத வேள் கைக் கணையாலே... துள்ளி வருகின்ற மன்மதன் கையின் மலர்க் கணைகளாலும்,
தொல்லைநெடு நீலக் கடலாலே... பழமையானதும் துன்பத்தைத் தருவதுமான நீலக் கடல் (எழுப்பும் ஒலியாலும்),
மெள்ளவரு சோலைக் குயிலாலே... (காதில்) மெதுவாக வந்து விழுகின்ற சோலைக் குயிலின் (சோக) கீதத்தாலும்,
மெய்யுருகு மானைத் தழுவாயே... (காதல்கொண்டு) உடல் உருகுகின்ற என்னை அணத்துக்கொள்ள வேண்டும்.
தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே... தெளிந்த தமிழ்ப்பாடல்களைப் பாட (அவதரித்த) ஞான சம்பந்தப் பெருமானே!
செய்யகும ரேசத் திறலோனே... செம்மை வாய்ந்த குமரேசன் என்று பெயர்கொண்ட வீரனே!
வள்ளல்தொழு ஞானக் கழலோனே...வள்ளலாகிய சிவபெருமான் தொழுகின்ற ஞானத் திருவடிகளைக் கொண்டவனே!
வள்ளிமண வாளப் பெருமாளே.... வள்ளிக்கு மணவாளனாக விளங்குகின்ற பெருமாளே!
சுருக்க உரை
இனிய, தெளிவான தேவாரப் பாடல்களைப் பாடுவதற்காக திருஞான சம்பந்தராக அவதரித்தவனே! செம்மை வாய்ந்தவனே! குமரேசன் என்று பெயர்பெற்ற வீரனே! சிவபெருமான் தொழுகின்ற ஞானத் திருவடிகளைக் கொண்டவனே! வள்ளியை மணம்புரிந்தவனான பெருமாளே!
துள்ளி வருகின்ற மன்மதனுடைய கையின் மலர்க் கணைகளாலும்; பழையதும் துன்பத்தைத் தரும் ஒலியை எழுப்புவதுமான நீலக் கடலாலும்; மிக மெதுவாகக் காதிலே வந்து விழுகின்ற சோலைக் குயிலின் சோக கீதத்தாலும் காதலால் உடல் மெலிகின்ற இந்தப் பேதைப் பெண்ணைத் தழுவிக்கொண்டு அருளவேண்டும்.