பகுதி - 877
அருக்கார் நலத்தை..
பதச் சேதம் | சொற் பொருள் |
அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு அடுத்த ஆசை பற்றி தளராதே Advertisement
| அருக்குஆர்: அருமை வாய்ந்த; நலத்தை: உடல் நலத்தை; திரிப்பார்: கெடுப்பார்; மனத்துக்கு அடுத்த ஆசை: மனம் விரும்பியேற்ய ஆசை; |
அடல் காலனுக்கு கடை கால் மிதித்திட்டு அற பேதகப் பட்டு அழியாதே
| அடல்: வலிய; காலனுக்கு: யமனுக்கு; கடைக்கால்: அந்திமக் காலத்தில்; மிதித்திட்டு: அடிப்படையை ஏற்படுத்தி; பேதகப்பட்டு: மனவேறுபாடு கொண்டு; |
கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து கலி சாகரத்தில் பிறவாதே
| கருக்காரர்: பிறவிக்கு ஏதுவாகின்றவர்கள்; பெருக்கா: மிகவும்; சரித்து: கைக்கொண்டு; கலிச் சாகரத்தில்: கலியாகிய கடலில் (துன்பக் கடலில்); |
கருத்தால் எனக்கு திரு தாள் அளித்து கலை போதகத்தை புகல்வாயே
| போதகத்தை: ஞானத்தை; |
ஒருக்கால் நினைந்திட்டு இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே
| ஒருக்கால் நினைந்திட்டு: ஒருமுறை உன்னை நினைத்து; இருக்கால் மிகுத்திட்டு: உன் இரு கால்களையும் மிகுதியாக; |
உர தோள் இடத்தில் குற தேனை வைத்திட்டு ஒளித்து ஓடும் வெற்றி குமரேசா
| உரத்தோள் இடத்தில்: வலிமையுள்ள தோளிலே; குறத்தேனை: வள்ளியை; வைத்திட்டு ஒளித்து ஓடும்: சுமந்தபடி மறைவாக ஓடியவனே; |
செருக்கால் தருக்கி சுர சூர் நெருக்கு அ செரு சூர் மரிக்க பொரும் வேலா
| சுரச்சூர்: தெய்வத் தன்மை கொண்ட தேவர்களை; |
திற பூதலத்தில் திரள் சோண வெற்பில் திரு கோபுரத்தில் பெருமாளே.
| திரள்: (தீயுருவாகத்) திரண்ட; |
அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு அடுத்த ஆசை பற்றித் தளராதே... அருமை நிறைந்த (உடல்) நலத்தைக் கெடுப்பவர்களான விலைமாதர்களின் மேல் மனம் இசைந்த ஆசையைக் கொண்டு சோர்வடையாமலும்;
அடல் காலனுக்கு கடைக் கால் மிதித்திட்டு அறப் பேதகப் பட்டு அழியாதே... வலியவனான யமனுக்கு என்னுடைய இறுதிக் காலத்தில் என் உயிரைக் கவர்வதற்கான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுத்து அதனால் மனவேறுபாடு அடைநது நான் அழியாமலும்;
கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து கலிச் சாகரத்தில் பிறவாதே... பிறவிக்குக் காரணமான செயல்களை உடையவர்களுடைய நட்பை மிகவும் கைக்கொண்டு துன்பக் கடலில் பிறக்காமலும்;
கருத்தால் எனக்குத் திருத் தாள் அளித்து கலைப் போதகத்தைப் புகல்வாயே... என்மீது அன்பு வைத்து உனது திருவடியைத் தந்தருளி, கலை ஞானத்தை அடியேனுக்க உபதேசித்து அருளவேண்டும்.
ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே... உன்னை ஒருமுறை தியானித்து, உன் இரண்டு திருவடிகளையும் போற்றி உரைப்பவர்களுடைய மனத்தில் உறைபவனே!
உரத் தோள் இடத்தில் குறத் தேனை வைத்திட்டு ஒளித்து ஓடும் வெற்றிக் குமரேசா... வலிமையுள்ள தோளிலே இனிமையான குறப்பெண்ணைத் தூக்கிக் கொண்டு மறைவாக ஓடிய வெற்றிக் குமரேசா!
செருக்கால் தருக்கி சுரச் சூர் நெருக்கு அச் செருச் சூர் மரிக்கப் பொரும் வேலா... ஆணவத்தால் தெய்வத் தன்மையை உடைய தேவர்களை ஒடுக்கி; போருக்கு வந்த அந்தச் சூரன் இறக்கும்படியாகப் போரிட்ட வேலனே!
திறப் பூதலத்தில் திரள் சோண வெற்பில் திருக் கோபுரத்தில் பெருமாளே.... நிலைபெற்ற இந்த உலகத்திலே அக்கினியின் உருவாகத் திரண்டிருக்கும் திருவண்ணாமலையின் திருக்கோபுரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
சுருக்க உரை
உன்னை ஒருமுறை தியானித்து, உன்னுடைய இரண்டு பாதங்களையும் போற்றுபவர்களுடைய மனத்தில் உறைபவனே! வலிமை மிகுந்த தோள்களிலே குறப் பெண்ணான வள்ளியைத் தூக்கிக்கொண்டு மறைவாக ஓடிய வெற்றிக் குமரேசா! ஆணவத்தால் தேவர்களை ஒடுக்கி, போருக்கு எழுந்த சூரன் இறக்கும்படியாகப் போரிட்ட வேலனே! நிலைபெற்ற இந்த உலகத்திலே அக்கினியின் உருவாகத் திரண்டிருக்கின்ற திருவாண்ணாமலையின் திருக் கோபுரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
அருமை வாய்ந்த உடல் நலத்தைக் கெடுப்பவர்களான பொதுப் பெண்டிரின் மீது மனம் வைத்திருக்கும் ஆசையால் தளர்ச்சி அடையாமலும்; வலிமை வாய்ந்த காலனுக்கு என் அந்திம காலத்தில் என் உயிரைப் பறிப்பதற்கான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுத்து மனவேறுபாடுற்று அழியாமலும்; மீண்டும் பிறக்கச் செய்கின்ற செயல்களை மேற்கொண்டிருப்பவர்களுடைய நட்பைப் பெருக்கிக்கொண்டு துன்பக் கடலுக்குள் மீண்டும் பிறவமலும்
என்மீது நீ மனம் வைத்து, உனது திருத்தாளைத் தந்து, கலை ஞானத்தையும் உபதேசிக்க வேண்டும்.